Malaysia

பேராக் ம.இ.கா கட்டடம் மக்கள் சேவை மையமாக செயல்படும் புதிய கிளைகளும் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் – தான்ஸ்ரீ எம்.இராமசாமி தகவல்

ஈப்போ, டிச.21-
பேராக் மாநில ம.இ.கா இனிவரும் காலங்களில் இங்குள்ள மேடான் கிட்டில் அமைந்துள்ள அவர்களது கட்டடம் மக்கள் சேவை மையமாக செயல்படவுள்ளதாக பேராக் மாநில தலைவர் தான்ஸ்ரீ எம்.இராமசாமி கூறினார்.

இந்த அலுவலகம் தினமும் காலை 10.00 மணி முதல் மாலை மணி 6.00 வரை மக்கள் சேவை மையமாக செயல்படவுள்ளது. ஆகவே, இந்திய மக்கள் தங்களின் பிரச்சினைகள் அல்லது விவகாரங்களை பணியாளர்களிடம் பதிவு செய்யலாம் என்று பேராக் ம.இ.கா ஆட்சிக்குழு கூட்டத்தில் ம.இ.கா தேசிய உதவித்தலைவருமான தான்ஸ்ரீ எம்.இராமசாமி தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில் பேராக் மாநில இந்திய மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் வேலை வாய்ப்பு பிரச்சினைகள், மித்ராவிடம் மானியம் கேட்கும் விதிமுறைகள், திவெட் பயிற்சி திட்டங்கள் மற்றும் அரசாங்க உதவிகள் பெறுவது எவ்வாறு போன்ற விளக்கங்கள் மற்றும் தகவல்களை பேராக் மாநில கட்டடத்தில் ம இ கா தலைவர்களை சந்தித்து பெற்றுக்கொள்ளலாம் என்று தான்ஸ்ரீ இராமசாமி சொன்னார்.

ம.இ.கா மாநில அளவில் வலுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் அதிக இந்தியர்களை கட்சியின் உறுப்பினராக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதிய கிளைகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், நடப்பு கிளைகள் அதிக உறுப்பினர்களை அவரவர் பகுதிகளிலிருந்து கொண்டு வர வேண்டும். அதற்கான வேலைகளை பேராக் ம.இ.கா தொடங்கி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ம.இ.காவின் வாயிலாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் மற்றும் இதர பதவிகள் முறையாக பரிசீலனை செய்து நியமனங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஈப்போ மாநகர் மன்ற தொழிலாளரின் பிள்ளைக்கு எம்.ஐ .இ.டி கல்வி கடனுதவி திட்டம் வழங்கப்பட்டது. இம்மாதிரியான உயர்கல்வி கடனுதவி திட்டம் மற்றும் திவெட் தொழிற்கல்வி தொடங்குவதற்கான தகவலும், உதவிகளும் வழங்கப்படும். குறிப்பாக, பி40 இந்தியர்களுக்கு ம இ கா என்றென்றும் உதவிட தயாராகவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த பேராக் ம இ கா வின் ஆட்சிக்குழு கூட்டத்தில் 24 தொகுதித்தலைவர்கள், இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவினர் கலந்துக்கொண்டு கருத்து பரிமாற்றம் செய்து மற்றும் ஆலோசனைகள் பெற்றதாக டான்ஸ்ரீ எம். இராமசாமி குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button