MalaysiaPoliticsYB YUNESWARAN

2027க்குள் 5 வயது மாணவர்களை உள்வாங்க 1,781 ஒற்றுமை பாலர் பள்ளிகளின் கொள்ளளவை அரசாங்கம் மேம்படுத்துகிறது துணையமைச்சர் யுனேஸ்வரன் தகவல் தேசம் செய்திகள் ரேவதி குணாளன்

கோலாலம்பூர், மார்ச் 4-
2027-ஆம் ஆண்டு முதல் 6 வயதில் முதலாம் ஆண்டு கல்வியைத் தொடங்கும் புதிய கொள்கை அமலுக்கு வரவுள்ளது. இதற்கேற்ப, 5 வயது சிறுவர்களுக்கு தரமான பாலர் பள்ளிக் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, நாடு முழுவதும் உள்ள ஒற்றுமை பாலர் பள்ளிகளின் தகுதி மற்றும் கொள்ளளவை மேம்படுத்த தேசிய ஒற்றுமை அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக ஒற்றுமை துறை துணையமைச்சர் YB யுனேஸ்வரன் கூறினார். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறையின் (JPNIN) மூலம் 1,781 ஒற்றுமை பாலர் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் பணிகள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றன. பாலர் பள்ளிகளின் இருப்பிடம் மற்றும் தேவைகளை ஆய்வு செய்து, தற்போதுள்ள இடவசதிகளைச் சரியாகப் பயன்படுத்துதல் மற்றும் மாணவர் சேர்க்கையை மறுசீரமைத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மேலவையில் (Dewan Negara), செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜி முஸ்தபா மூசா எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு துணையமைச்சர்யுனேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். மாணவர் விவரக்குறிப்பு (Profiling): மாணவர்களின் சமூக-பொருளாதாரப் பின்னணி, வளர்ச்சி நிலை மற்றும் கற்றல் தேவைகளை உள்ளடக்கிய விரிவான தரவுத்தளம் உருவாக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் தேவைக்கும் ஏற்ப கல்வி அணுகுமுறை அமையும் என்று யுனேஸ்வரன் சொன்னார். முதலாம் ஆண்டு கல்விக்கு மாறும் போது எந்தவொரு மாணவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய, கல்வி அமைச்சு (KPM) மற்றும் ஆரம்பக்கால கல்வி சார்ந்த இதர முகமைகளுடன் ஒருங்கிணைந்து தேசிய ஒற்றுமை அமைச்சு செயல்பட்டு வருகிறது. தேசிய கல்வித் திட்டம் 2026-2035 உடன் இணைந்து, ‘ஒற்றுமை பாலர் பள்ளிகளுக்கான ஆரம்பக்கால கல்வித் திட்டம் 2021-2030’ வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தேசப்பற்று மற்றும் நற்பண்புகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் தலைமுறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் இந்தத் தொடர் முயற்சிகள், நாட்டின் ஆரம்பக்கால கல்வி முறையை இன்னும் சீரானதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவதோடு, 2027-இல் வரவுள்ள கல்வி மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும் உறுதி செய்கிறது என்று யுனேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button