
காலத்திற்கு ஒரு விசித்திரமான குணம் உண்டு. அது சில சமயம் நதியைப் போல ஓடும், சில சமயம் குளத்தைப் போலத் தேங்கி நிற்கும். அதுபோலதான் காதலும். “ச்சே, இந்த மழை வேற” மேசையின் அருகிலுள்ள சாளரத்தை எழுந்து இழுத்து மூடினான். மீண்டும் அமர்ந்துவிட்டு தனது மேசை மீது ஒரு வெள்ளை காகிதத்தில் தான் எழுதி வைத்திருந்த இரு வரிகளை உற்று நோக்கினான். “காலத்திற்கு ஒரு விசித்திரமான குணம்… நல்லாவே இல்ல, இந்த கதையை எப்படித்தான் ஆரம்பிக்குறதுனே தெரியல” முகத்தில் சலிப்பும் வெறுப்பும் கலந்த வண்ணம் அமர்ந்திருந்தான். வலது கைக்கு எட்டும் தூரத்தில் அவனது தொலைப்பேசி ஒலிக்க தொடங்கிற்று. தொலைப்பேசியை எடுத்தான், முகத்தில் புன்முறுவல் தோன்றிற்று. தொடர்பு இணைக்கப்பட்டது. “ஹலோ முகில், சொல்லுடா” என்றான். மறுதிசையிலிருந்து “ஆதித்யா எப்படிட இருக்க? உன் கதையெல்லாம் எப்படி போகுது” என்ற வினா எழுந்தது. “எங்கட, போன முறை எழுதுன நாவல் எல்லாருக்குமே பிடிச்சிருந்தது, இப்போ டைம் ட்ராவல் கதை ஒன்னு எழுதலாம் நெனச்ச, யோசனையே வரமாட்டுது. ஐ வாண்ட் சம் இன்ஸ்பிரஷன் மேன்.” என்றான் ஆதித்யா. அவனுக்கு உதவும் எண்ணத்துடன் முகில் ஒரு யோசனை கூறினான். முகிலுடைய தாத்தா காலங்காலமாக ஒரு ஓவிய கண்காட்சியினை நடத்தி வருகிறார். அந்த கண்காட்சியகத்தில் ஒரு அறை இருக்கிறது. அந்த அறை முழுவதும் முகிலின் முன்னோர்கள் சேர்த்து வைத்திருக்கும் தொன்மை வாய்ந்த பொருட்கள் பல நிறைந்திருக்கும். ஒரு வேலை அங்கு இருக்கும் பொருட்களை காணும்போது ஆதித்யனுக்கு ஏதேனும், கதைக்கான யோசனை கிடைக்கலாம் என்று எண்ணி அங்கே அவனை அழைத்துச் செல்ல முற்படுகிறான். மறுநாள், தொலைப்பேசியில் பேசி முடிவெடுத்தப்படியே இருவரும் அந்த கண்காட்சியகத்திற்குச் சென்றனர். அந்த இடம் பார்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. கண்கவரும் ஓவியங்களால் நிறைந்து காணப்பட்டது. முகில் முதலில் அறை சாவியைக் கைகளில் வைத்துக் கொண்டு முன்னே சென்றான். அவன் பின்னால் உடனே செல்ல வேண்டும் என்று ஆதித்யாவுக்கும் ஆசைதான். ஆனால், சுவரெங்கும் நிறைந்திருக்கும் அழகிய ஓவியங்கள் அவன் கண்களை கொஞ்ச நேரம் கடன் வாங்கிக்கொண்டது. ஒவ்வொரு ஓவியமாக அவன் கண்கள் தாவிக்கொண்டே வந்தன. அப்போது, ஒரு ஓவியம் மட்டும் அவன் கண்களை உறைய செய்தது. ஏனோ ஒரு இனம் புரியாத ஆனந்தத்தை அந்த ஓவியம் அவனுக்கு வழங்கியது. ஓர் அழகிய மழைக்காட்சி, அதில் காதலர்கள் அமர்ந்திருப்பதுபோன்ற ஒரு காட்சி. அந்த ஓவியத்தைக் கண்டவாறே திகைத்து நின்று கொண்டிருந்தான். “ஆதித்யா” முகிலின் அழைக்குரல் அவனது கனவுகளைக் கலைத்தது. குரல் வந்த திசையில் இருந்த அறையை நோக்கி விரைந்தான் ஆதித்யன். அந்த அறைக்குள் நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த பொருட்கள் கிடந்தன. ஆங்காங்கே, சிலந்தி வலைகள் வேறு. உள்ளே சென்று தனது தேடலை தொடங்கினான். பல வேளைகளில் தேடினான், சில நேரங்களில் பொருட்களின் அழகை ரசித்தவனாய் ஓய்வு எடுத்தான். அவ்வேளையில், ஒரு பெட்டி அவன் கண்களுக்குப்பட்டது. அந்த பெட்டியை மெல்ல திறந்து பார்த்தான். திடீரென, கண்கள் கூசுமளவுக்கு ஒரு வெளிச்சம் அவன் கண்களை தாக்கியது. ஒரு நொடி தானே முடிய கண்களை, மெல்ல சிமிட்டி திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள் ஒரு அழகான தேவதை பொம்மை, மழைக்குள் பிடிப்பட்டிருப்பது போன்ற காட்சி இருந்தது. அது ஒரு விளையாட்டு பொம்மை போன்று அவனுக்கு காட்சியளித்தது. அதில் ஒரு விசையும் இருந்தது. ஆதித்யா அதனை பல முறை இயக்க முயன்றும், முடியவில்லை. பழமை வாய்ந்தது என்பதால் செயலிழந்திருக்கக்கூடும் என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டான். ஏற்கனவே, பல நாழிகை அந்த அறையில் இருந்துவிட்டோம் என்பது அப்போதுதான் அவன் நினைவுக்கு எட்டியது. மனம் வீடு திரும்ப விரும்பினாலும் கைகளில் வைத்திருந்த பெட்டியைக் கீழே வைக்க மட்டும் அவனுக்கு மனதில்லை. அதையும் உடன் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து விடைப்பெற்று கொண்டான். கொழுத்தும் வெயிலில் ஆளே கருகிவிடுவர் போல, அந்த அளவுக்கு சூரியனின் ஒளி பூமியை துளைத்துக் கொண்டிருந்தது. அந்த பெட்டியை ஏந்திய வண்ணம் மூச்சிரைக்க வீடு வந்து சேர்ந்தான் ஆதித்யன். பெட்டியை மேசை மீது வைத்து விட்டு, நாற்காலியில் சாய்ந்த வண்ணம் ஓய்வெடுக்க தொடங்கினான். நாட்கள் உருண்டோடின. அன்றொருநாள், மீண்டும் தனது கதையைத் தொடரும் ஆசையோடு, தனது வழக்கமான இடத்தில் அமர்ந்தான். எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என்று ஆயிரம் கேள்விகள். ”மறுபடியும் மழையா, ஐயோ” என்று சலித்துக்கொண்டான், சாளரத்தை மூட கைகள் நீண்டது. அந்த சாளரத்தில் ஒரு பிம்பம். அந்த பிம்பத்திற்கு சொந்தமான பெட்டியைத் திரும்பிப் பார்த்தான். அவன் கைகள் திசைமாறின சாளரத்தின் பிடியை மறந்து, பெட்டியின் பிடியில் கை வைத்தான். பெட்டியைத் திறந்து பொம்மையை எடுத்து விசையை அழுத்தியபோது ஒரு ஒலி எழுந்தது. அவனது கண்கள் மெல்ல இருட்டின. சில வினாடிகளில், மீண்டும் கண்களுக்கு ஒளி வந்தது. ஆனால், இல்லை இல்லை அது அவனது அறையில்லை. என்ன ஆச்சரியம் அறையிலிருந்தவன் வினாடி பொழுதில் வேறெங்கோ இருக்கிறான். என்ன இடமது என்று சிந்திக்கிறான். மிகவும் பழமை வாய்ந்த தோற்றம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. பார்ப்பதற்கு அது ஒரு காபி கடை போலவே தோன்றியது. ”ஆனால், ரொம்ப பழைய காபி ஷாப். பட் நான் எப்படி இங்க வந்தேன்”, என்று சிந்தித்த வண்ணம், குனிந்திருந்த தலையை நிமிர்த்தி உயர இருந்த சுவற்றை உற்று பார்த்தான். அன்று திகதி 15 ஆகஸ்ட் 1986 என்பதை நாள்காட்டி காட்டிக்கொண்டிருந்தது. ”தேதி, மாசம் எல்லாமே சரிதான் பட் 2026 எப்ப 1986 ஆச்சு?” அவன் கொண்டிருந்த குழப்பம் முகம் வழி வெளியே தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்க்கிறான், எல்லாமே புதுமையாகவே இருக்கிறது. அங்கே ஒரு அண்ணன் காபி தயார் செய்து கொண்டிருந்தார். ”ஏன் அண்ணே, இன்னிக்கு என்ன தேதி” அவரை நோக்கி கேள்வி கணைத் தொடுத்தான். ”ஏம்பா, அதான் நாள்காட்டி பார்த்த இல்ல. என்ன பார்த்த கிண்டலா இருக்க” என்று கடிந்துக்கொண்டு வேலையை தொடர்ந்தார். ஒன்றுமே புரியாமல் நின்றுகொண்டிருந்தவனின் கண்கள் திடீரென தடம் மாறின. விழியோரம் மட்டும் போன திசையில், வெண்ணிலவு கண்ணுக்கு தெரிந்தது. அடடே, அது வெண்ணிலவு இல்லை, நட்சத்திரம் போலும். இவ்வளவு பிரகாசமான நட்சத்திரமா? ஓர விழிகள் ஒவ்வொன்றும் இந்நேரம் முழுதும் அந்த நட்சத்திரத்தை நோக்கியது. அது ஒரு பெண்ணின் கண்கள். இப்படியும் ஒரு பெண்ணா என்று தன்னை தானே கிள்ளி பார்த்து கொண்டான். ”ஹெய்ஸ், வலிக்குது, அப்டினா உண்மைதான்” அவனிடம் சிறிதும் அனுமதி பெறாது, வெட்கமும் ஆனந்தமும் முகத்தில் வந்து ஒட்டிக்கொண்டது. ஏதோ ஒரு இனம் புரியாத பதட்டம் அவனுக்குள், அவள் விழிகளை, அவன் விழிகளால் படம்பிடித்துக் கொண்டான். என்ன உணர்வு இது. ஓஹோ ஒருவேளை இதுதான் கண்டதும் காதலோ, இல்லை பூர்வ ஜென்ம பந்தமாக இருக்க கூடுமோ? இப்படி ஆயிரம் குழப்பங்கள் அவனுக்குள். குழப்பங்களை எல்லாம் உதறி தள்ளினான். அவளிடம் பேசுவதற்காகவே ஏனோ ஒரு புதுவித தைரியம் எனும் தீ அவன் நெஞ்சில் கொழுந்து விட்டது. மெல்ல மெல்ல அருகில் சென்று அவளிடம் நலம் விசாரித்தான். ”உங்கள எங்கயோ பார்த்த மாறியே இருக்குங்க. நீங்க என்ன இந்த ஊரா? பாவம், ஊர் அல்ல இந்த காலதிற்கே அவன் உரியவன் அல்ல என்பது அவளுக்கு தெரியவா போகிறது என்ற எண்ணம். அவளோ எதுவுமே பேசவில்லை, அந்த கடையை விட்டு எழுந்தாள், தலை நிமிராது நடந்து வெளியேறினால், அந்நேரம், ஏதோ முன்னரே சொல்லி வைத்தது போல,வானத்திலிருந்து மழை பொழிய தொடங்கிற்று. மழையிலிருந்து மறைந்து கொள்ள மலர் போன்ற தனது மென்மையான உள்ளங்கைகளை மழையை நோக்கியபடி நீட்டி தலையின்மீது மறைத்த , அந்த கணத்தில் ஒரு முறை திரும்பி அவள் அவனது விழிகளை நோக்கினால், அது ஒரு நொடிகூட நிலைக்கவில்லை, அவன் பார்த்துவிட்டான் என்ற பதட்டமோ? நான் பார்த்துவிட்டேனே என்ற வெட்கமோ? இல்லை அவன்மீது வந்த வெறுப்போ? என்று அவன் சிந்திப்பதற்குள் மீண்டும் காலத்தால் இழுக்கப்பட்டு, அவன் மெய்யாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிகழ்காலத்தை அடைந்தான். ஏதோ கனவிலிருந்து விழித்தவன் போல திடுக்கிட்டு தன்னிலை உணர்ந்தான். இப்போதுதான், அவனுக்கு புரிய வந்தது, தன்னிடம் கிடைத்திருப்பது உண்மையிலே காலத்தை கட்டுப்படுத்தும் இயந்திரம் என்பது. அதுமட்டுமில்லை, அந்த இயந்திரத்திற்கு ஒரு அற்புதமான விதியும் கூட உண்டு. அந்த விதியையும் அவன் அப்பொழுதுதான் உணர்ந்தான். அதாவது, 2026-ல் மழை பெய்யும் வரைதான் அவனால் 1986-ல் இருக்க முடியும். 1986-ல் மழை பெய்யத் தொடங்கினால், 2026-ல் மழை நின்றுவிட்டது என்று அர்த்தம். அது அவனைத் தன் சொந்த காலத்திற்குத் திருப்பி அனுப்பிவிடும். ஒரு மனிதனின் வாழ்வில், நேரத்தின் பங்கு என்பது அளப்பரியது. அவ்வாறிருக்க, இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது ஆதித்யன் என்ன, யாராக இருந்தாலும் அதனை உபயோகப்படுத்தவே நினைப்பர். அதிலும், காலம் கடந்து ஒரு பெண்ணை சந்திப்பது என்பது எளிதா என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வண்ணம்தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தது. முன்னாடியெல்லாம் மழை வந்தால் போர்வைக்குள் சுருண்டிக்கொள்வதையே விரும்பிய மனம், இப்போது கால இயந்திரத்தையே தேடியது, எல்லாமே அவளுக்காக. ஒரு நாளில் கண்கள் பல மணிநேரம் மேகத்தையும், சில மணி நேரம் இயந்திரத்தையும் பார்த்த வண்ணமே உறைந்திருந்தன. இப்படி, மழை வரும்போதெல்லாம் அவன் காலம் கடந்து அவளை செல்ல போவது ஒரு வழக்கமாகியிருந்தது. ஆரம்பத்தில், அவளிடம் கேள்வி கணைகளைத் தொடுத்து கொண்டே இருந்தான். ஆனால், அவளிடம் இருந்து கிடைத்த பதிலோ சில வினாடி கடைக்கண் பார்வை மட்டுமே. இவ்வாறே, பலமுறை முயன்றும் அவளிடம் நெருங்க முடியவில்லை. முதலில், மொட்டுபோல தன்னை மூடி வைத்துக்கொண்டவள், மெல்ல மலர தொடங்கினாள். பெண்களின் மனது பூட்டை போன்றது அல்லவா? அது திறக்கவே திறக்காது. அதற்கான சாவி கிடைக்கும்வரை. இவ்வாறு, கவிதைகளாக பேசியே அந்த பெண்ணின் மனதினை கவர்ந்துவிட்டான். இப்போது, தெரியுமே ஏன் அவன் அடிக்கடி அவளை காண செல்கிறான் என்று. இவ்வாறு, இவர்களின் காதல் காலத்தை கடந்த காவியமாகவே இருந்தது. ஆனால், அலையற்ற கடலை போன்றது சிக்கலில்லா வாழ்க்கை. ஒரு நாள், ”ஆதித்ய என்னாலே உங்கள தவிர வேறு யாரையும் நினச்சு கூட பார்க்க முடியாது. என் அப்பாகிட்ட நான் பேசிட்டேன். அவர் ஒத்துக்க மாட்டாரு. நீங்க என்னடானா திடீர்னு ஒரு நாள் வரிங்க, பார்க்குறீங்க அப்பறோம் கொஞ்ச நாளைக்கு காணாம போயிடுறீங்க. இன்னும் 4 நாள்லே என்ன வந்து கூட்டிகிட்டு போயிருங்க. இல்ல நான் உயிரோடயே இருக்க மாட்டேன்.” 3 நாட்களுக்கு முன்னாடி அவள் மலர்விழிகளில் வழிந்த நீர் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இன்னும் சில மணித்துளிகளில் நாள் 4 வரப்போகிறது. ஆனால், ஒரு சிக்கல். அவன் அவளை இறுதியாக பார்த்து விட்டு வந்த பிறகிலிருந்து இன்றுவரை ஒரு துளி மழைக்கூட வரவில்லை. அவளை, நேரில் கண்டு நடந்த உண்மையை சொல்லிவிட வேண்டும் என்ற தைரியமே, பாவம் 2 நாட்களுக்கு முன்னாடிதான் அவனுக்கு வந்தது. மழை வந்து விட கூடாத என்று ஏங்கும் வறண்ட நிலம்போல வானத்தை பார்த்த வண்ணம் காத்திருந்தான் அவன். நேரமாக ஆக, பயம் அதிகமானது. கடவுள் பக்தி இல்லாத அவன் வாழ்வில் முதல் முறை அவளுக்காக, இறையருளை தேடினான். செய்வதறியாது இருந்த அவனுக்கு திடீரென அந்த கண்காட்சியகத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அந்த காட்சியகத்தில் சென்று, மீண்டும் அந்த அறையில் சில நிமிடம் சுற்றி பார்த்தான். அறையை விட்டு வெளியேறியபோது, மீண்டும் அவன் முதன் முதலில் பார்த்த ஓவியம் அவன் கண்களை ஈர்த்தது. ஆனால், இம்முறை இது இன்னும் பழக்கப்பட்டிருந்ததை போன்ற ஓர் உள்ளுணர்வு. அருகில் சென்று உற்று நோக்கினான். அந்த அழகிய ஓவியத்தின் ஓர் ஓரத்தில் அவனுக்கு பரிட்சயமான ஒரு பெயரைக்கண்டான். ஆம், அது அவளின் பெயரே தான். அந்த ஓவியத்திற்கு கீழே, ஓவியரின் குறிப்புகள் எழுதப்படுத்திருந்தது. அது அவளது புகைப்படமே தான். அங்கே பல தகவல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவன் கண்களுக்கு எட்டியது அவ்வொரு தகவல்தான். மறைவு 21 அக்டோபர் 1986, காரணம் சாலை விபத்து. ஒரு நிமிடம் தலையே சுற்றி போனது அவனுக்கு, கடந்த காலத்தின் நாள் கணக்குப்படி இன்றுதான் அந்த திகதி, அந்த குளிரான அறைக்குள்ளும் அவனை மீறி கொண்டு வியர்த்து கொட்ட தொடங்கிற்று, இப்போது அவன் காலம் கடந்து சென்றால்தான் அவளைக் காப்பாற்ற முடியும். ஆனால், எப்படி? மழைதான் வரவே இல்லையே. உடனே, அவன் வீட்டை நோக்கி விரைந்தான். அந்த இயந்திரத்தை வைத்து ஏதாவது செய்துவிடலாம் என்று எவ்வளவோ முயன்றான். ஆனால், ஒன்றுமே நிகழவில்லை. பித்து பிடித்தவன் போல, அருகிலிருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி உடைத்துக்கொண்டிருந்தான். அவனை கேட்காமல் அவன் விழிகள் நீர் கசித்தன. நிறுத்த முடியாதே, இது அன்பின் போராட்டம் அல்லவா? அப்போது திடீரென, வானத்தில் ஒரு முரசு கொட்டியது. ஆம், இடிதான் அது. இயற்க்கை அன்னை அல்லவா? அதனால் கருணை கொஞ்சம் அதிகம்தான். வானத்தில் பிளவு ஏற்பட்டு மேகங்கள் உரச தொடங்கிற்று, சில மழைத்துளிகள் மண்ணில் விழ, அந்த இயந்திரத்தை, நடுங்கும் கைகளோடு எடுத்து இயக்கினான். மீண்டும் ஒரு முறை காலம் அவனை பின்னழைத்துச் சென்றது. இந்த முறை அவன், வழக்கமான காபி கடைக்கு முன் இல்லை, பேருந்து நிலையம் முன்பு நிறுத்தப்பட்டான். சுற்றியும் முற்றியும் பார்த்து அவன் குழப்பத்தைத் தீர்த்து கொள்வதற்குள், மிக அருகில் ஒரு சத்தம். அந்த சத்தம் எழுந்த காரணத்தை அவன் கண்கள் கண்டறிந்தது. 4 நாட்களுக்கு பிறகு, கண்ட மகிழ்ச்சியில் கண்கள் கலங்க அவனை நோக்கி ஓடி வந்த அவளது விழிகள் மூடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், உடல் முழுதும் குருதி பெருக்கெடுத்து, நடுஞ்சாலையில் விழுந்து கிடந்தாள். ஒரு நொடியில் எல்லாமே மாறிவிட்டதாலோ என்னவோ, அவனால் எதுவுமே சிந்திக்க முடியவில்லை. அவனது, கால்கள் தரையோடு இறுக்கியதுபோல் நகரவே இல்லை. சில மழைத்துளிகள் அவளது உடலை நனைத்து குருதியை கழுவ தொடங்கிற்று. மேசை மீது இருந்த அந்த பெட்டி கீழே விழுந்து உடைந்தது, திடுக்கிட்டு எழுந்தான் ஆதித்யன். ”ச்சீ கனவா? என்னடா கனவு இது. ஆனா, இதுவும் நல்லாதான் இருக்கு பேசாம இதையே கதையாக்கிரலாமா? அய்யயோ இன்னிக்குதான் பெட்டியை கொண்டு வந்தேன். அதுக்குள்ளே கீழ போட்டு உடைச்சிட்டேன். இப்போ, முகிழ்க்கிட்ட என்ன சொல்றது. சரி, சமாளிப்போம்”, என்று நினைத்து கொண்டு வெள்ளை காகிதத்தை நிரப்ப தொடங்கினான். ” ஆதித்ய, ஒரு வழியா கதையை முடிச்சிட்டே… நான் இன்னிக்குதான் வாங்கி படிச்சேன். சூப்பர் ஆ இருக்குடா” என்ற முகிலின் பாராட்டுக்கு, ”இதுக்கெல்லாம் நீயும் ஒரு காரணம் தாண்ட, எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்க தெரியுமா? சரி அப்டியே இன்னிக்கு எக்ஸிபிஷன் ஓபன் தானே, இரு நான் அங்க வந்து உன்ன பார்க்குறேன்”. அழைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த கண்காட்சியகத்திற்கு சென்றான், மீண்டும் அந்த ஓவியத்தின் முன்னே நின்றான். அவனை அறியாமலே கண்கள் கலங்கின. அருகிலிருந்த ஒரு பெண் அவளது தோழியை அழைக்க, அந்த திசை நோக்கி திரும்பினான். அது அவனுக்கு பரிட்சயமான முகமாய் தெரிந்தது, அந்த கண்கள், பெயரும்தான் , ஓவியத்தில் எந்த பெயர் இருந்ததோ, அவனது கதைக்கு அவன் என்ன பெயர் இட்டானோ, அதே பெயர்தான் ‘தூரிகா’.



