Malaysia

இரு மாணவிகள் மரணத்திற்கு மற்றவர்கள் காரணம் இல்லை ! யூகங்கள் வெளியிடுவதைத் தவிர்க்கவும்.பேராக் மாநில போலீஸ் எச்சரிக்கை!

தேசம் செய்திகள்

User Rating: Be the first one !

ஈப்போ,ஜூலை 26- புந்தோங்கிற்கு அருகிலுள்ள சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 14 வயதுடைய இரு மாணவிகளின் மரணம் தொடர்பாக, இதுவரை வேறு எவரும் சம்பந்தப்பட்டதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அல்வி சைனல் அபிடின் கூறினார். ஆகவே இந்த மாணவிகள் மரணம் தொடர்பாக பொது மக்கள் யூகங்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு இரு மாணவிகளும் தங்களது பள்ளி வளாகத்தை தன்னிச்சையாக விட்டு வெளியேறியதாக நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருவரும் மயக்கநிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு சென்ற மருத்துவ அதிகாரிகள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததை உறுதிப்படுத்தினர். “இதுவரையிலான விசாரணையில், இந்தச் சம்பவத்தில் வேறு எவரும் தொடர்புடையதாகக் காட்டும் எந்த சான்றும் கிடைக்கவில்லை,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார். முன்னதாக, ஒரே பள்ளியில் பிற்பகல் அமர்வில் கல்வி பயின்று வந்த நெருங்கிய தோழிகளான அந்த இரு மாணவிகள், புந்தோங் பகுதியில் காலியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் மாலை சுமார் 4.50 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. டத்தோ முகமட் அல்வி கூறுகையில், உடற்கூறு பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என்றார். மேலும், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினரின் தனியுரிமையை பொதுமக்கள் மதிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற தகவல்கள் அல்லது ஊகங்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையக கட்டுப்பாட்டு அறையை 05-245 1500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மரணம் அடைந்த அவ்விரு மாணவிகளின் மரணம் தொடர்பாக அவர்களின் சடங்கள் மீது ஈப்போவில் துங்கு பைனுன் மருத்துவ சவ பரிசோதனை செய்யபட்டதாகவும குறிப்பிட்டார். சவ கிடங்கில் சோகத்தில் ஆழ்ந்த அவ்விரு மாணவிகளின் குடும்பங்களுக்கு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் எம். துளசி ஆறுதல் கூற வருகைத் தந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button