
கிளந்தானில் அதிரடி வேட்டை: RM374,000 மதிப்புள்ள வரியில்லா சிகரெட்டுகள் பறிமுதல்
பெர்னாமா கோப்புப் படம்
கோத்தா பாரு, ஜூலை 26 – அரச மலேசியக் காவல் துறையின் துணை இராணுவப் பிரிவாக இயங்கும் பொது நடவடிக்கைப் படை (Pasukan Gerakan Am – PGA) கோத்தா பாருவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், வரி செலுத்தப்படாதவை என சந்தேகிக்கப்படும் 2 லட்சம் வெள்ளைச் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கிளந்தான், தும்பாட், Kampung Kok Bedullah, பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற Op Taring Wawasan Kelantan நடவடிக்கையின் போது, சுமார் RM374,000 மதிப்புள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொது நடவடிக்கைப் படையின் (PGA) தென்கிழக்கு படைப்பிரிவு தளபதி, மூத்த துணை காவல் ஆணையர் Ahmad Radzi Hussain தெரிவித்தார். அதிகாலை 2 மணியளவில், PGA-வின் 9ஆவது படைப்பிரிவு Kuala Terengganu-வைச் சேர்ந்த Strike Force குழுவினர், மலேசிய சுங்கத் துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். PGA அதிகாரிகள் கம்போங் கெட்டிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான Proton Preve கார் ஒன்றை கண்டறிந்தனர். அதிகாரிகளை கண்டதும், அந்த வாகனத்தின் ஓட்டுநர் வேகமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்ற பின்னர், அந்த வாகனம் கம்போங் கோக் பெடுல்லா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த நீர்ப்பாசன கால்வாயில் விழுந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், அவரை அதிகாரிகளால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், வாகனத்தைச் சோதனைச் செய்த போது, பல மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் வரி செலுத்தப்படாதவை என சந்தேகிக்கப்படும் 2 லட்சம் வெள்ளை சிகரெட்டுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.



