சிறுகதைMalaysia

இருளின் மறுபக்கம்

சாதனாவின் சிறுகதைப் படைப்பு, UPLOADED BY KRISHAN THIVAGARAN

  1. அந்த வீட்டின் அகராதியில் ‘வெளிச்சம்’ என்ற வார்த்தைக்கு அனுமதி இல்லை. அது ஒரு வீடு என்பதை விட, இருளையும் மௌனத்தையும் மட்டுமே சேமித்து வைக்கும் ஒரு தனிமைச் சிறை என்றுதான் சொல்ல வேண்டும். மலேசியாவின் பேராக்கில் உள்ள ஒரு பழைய ரப்பர் தோட்டத்தின் எல்லையில், நவீன நகரத்தின் சலசலப்புகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒரு தனிமைப் பிரதேசத்தில் அது அமைந்திருந்தது. சுற்றிலும் முதிர்ந்த மரங்களின் அடர்ந்த இலைகளும், காட்டுப் புதர்களும் அந்த வீட்டைச் சூழ்ந்திருந்ததால், பகல் நேரத்தில்கூட அங்கே சூரிய ஒளி உள்ளே நுழைவதற்குப் போராட வேண்டும். பத்தொன்பது வயதான மாயாவுக்கு, அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அவளைக் கண்காணிப்பது போலவே தோன்றியது. கடந்த மூன்று மாதங்களாக அவளது பிரபஞ்சம் என்பது ஒரு சிறிய கட்டிலும், நான்கு சுவர்களும், ஜன்னல்களை இறுக்கமாக மூடியிருந்த தடிமனான கருப்பு வெல்வெட் திரைகளும் மட்டும்தான்…அவளுடைய உலகம் முழுமையான இருளாலும், மூச்சடைக்கும் நிசப்தத்தாலும், மரணத்தின் வாசனையுடைய மருந்துகளாலும் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது. “மூளை செயல்நிறைவு…” (Total Cognitive Shutdown). பேராக்கின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மருந்தியல் மற்றும் நரம்பியல் துறையின் முதன்மை விரிவுரையாளராக இருக்கும் அவளது சொந்த அண்ணன் கிரண், அவளுக்குச் சூட்டியிருந்த மருத்துவப் பெயர் இது. மூன்று மாதங்களுக்கு முன்பு, பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தயப் பயிற்சியின்போது மாயாவுக்கு ஏற்பட்ட அந்தப் பயங்கரமான விபத்து அவளது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியிருந்தது. அவளது மூளையின் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்தவளை மருத்துவர்கள் கைவிட்டபோது, அவளது அண்ணன் கிரண் அவளுக்குக் காப்பரணாக நின்றான். மூன்று மாதங்களுக்கு முன்பு, பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தயப் பயிற்சியின்போது மாயாவுக்கு ஏற்பட்ட அந்தப் பயங்கரமான விபத்து அவளது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியிருந்தது. ஓடும்போது நிலைதடுமாறி விழுந்ததில் அவளது தலையில் பலத்த அடி. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் இரத்தக் கசிவோ, மண்டை ஓட்டு முறிவோ ஏற்படவில்லை என்றாலும், மூளையின் உள்ளே கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் இரண்டு வார தீவிர சிகிச்சைக்குப் பின், அவளது சுயநினைவு திரும்பியது. அவளால் பேச முடிந்தது, தன் அண்ணனை அடையாளம் காணவும் முடிந்தது. ஆனால், கடுமையான ஒற்றைத்தலைவலியும், தலைச்சுற்றலும் அவளை வதைத்தன. “இனி இவளுக்கு எந்தவித மன அழுத்தமும், சத்தமும், வெளிச்சமும் இல்லாத முழுமையான ஓய்வு மட்டுமே தேவை. அதுதான் இவளது மூளையை பழைய நிலைக்குக் கொண்டு வரும்” என்று மருத்துவர்கள் கூறி வெளியேற்றம் செய்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அவளது இருண்ட அறைக்குள் ஒரு மெழுகுவர்த்தியின் மங்கலான ஒளியோடு கிரண் நுழையும்போது, அந்த அறையின் அமைதி உடையும். அவனது கையில் தண்ணீரும், தடிமனான தேன் நிற மருந்து நிரப்பப்பட்ட அந்த ‘கேப்சூல்’ மாத்திரையும் இருக்கும். கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து, மாயாவின் நெற்றியில் கைவைத்து காய்ச்சல் இருக்கிறதா என்று பார்ப்பான். “இன்னும் தலைவலி இருக்கா மாயா?” என்று ஆரம்பிக்கும் அவனது குரலில் அண்ணனுக்கே உரிய பாசம் இருக்கும். “இல்ல கிரண்… ஆனா இந்த இருட்டுக்குள்ளேயே இருக்கிறது கஷ்டமா இருக்கு நா. போன் கூட இல்லாம…” என்று மாயா இழுப்பாள். கிரண் அவளது தலையைக் கோதிவிடுவான். “கொஞ்சம் பொறுத்துக்கோடா மாயா. உன் மூளை இப்ப எப்படி இருக்கு தெரியுமா? வெளிய இருக்குற வெயில், இந்தப் போனோட நீல வெளிச்சம், ஏன்… பக்கத்து வீட்டுக்காரன் கத்துற சத்தம் கூட உன் நரம்புகளை மறுபடியும் டேமேஜ் பண்ணிடும். அண்ணன் சொல்றேன்ல? நீ எதைப்பத்தியும் யோசிச்சு மண்டையைக் குழப்பிக்காத. சும்மா நிம்மதியா தூங்கு, மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். இந்தா, முதல்ல இந்த மாத்திரையை விழுங்கு.” என்றான். மருந்தை உண்டபின் மாயா சற்று நிம்மதியாக உறங்குவாள். இப்படியே ஒரு 11 வாரங்கள் கழிந்தோடியது. பன்னிரண்டாவது வாரம் தொடங்கியபோது, மாயாவின் உடலுக்குள் ஏதோ ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்தது. அவளது நரம்புகளின் வலி மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. அவளது பார்வை தெளிவாகியது. ஒரு நாள் மாலை, கிரண் அவளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, மாயா மெதுவாகக் கேட்டாள், “அண்ணா, எனக்கு இப்போது தலைவலி முன்பு போல் இல்லை. சற்று குறைந்துள்ளது. உடல் நன்றாக இருப்பது போல் தோன்றுகிறது. நான் இந்த அறையின் கதவைத் திறந்து, தோட்டத்து வராண்டாவில் கொஞ்ச நேரம் உட்காரலாமா? எனக்குச் சூரிய வெளிச்சத்தைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது.” என்கிறாள். கிரணின் கைகள் சட்டென நடுங்கின. அவன் வைத்திருந்த ஸ்பூன் தட்டில் பட்டு ஒரு கூர்மையான சத்தத்தை எழுப்பியது. அவனது பாசமான முகமூடிக்கு பின்னால் இருந்த கண்கள் சட்டெனக் பதற்றமாக மாறின. அவனது குரல் நள்ளிரவுக் காற்றின் குளிரோடு ஒலித்தது. சற்று கோபமடைந்தான். “நீ உன் மரணத்தை நீயே தேடிக்கொள்கிறாய் மாயா,” என்றான் அவளது தோள்களை பலமாகப் பிடித்து உலுக்கியபடி. “பல்கலைக்கழக ஆய்வகத்தில் நான் தினமும் பரிசோதிக்கும் உன் மூளையின் ‘ஸ்கேன்’ அறிக்கைகள் இன்னும் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டவில்லை என்றுதான் சொல்கின்றன. ஒரு சொட்டு சூரிய ஒளி உன் கண்ணில் பட்டால் போதும், உன் மூளையின் செல்கள் உருகி, உன்னால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியாமல், ஒரு குழந்தையைப் போல எச்சில் வடிய வடியக் கிடக்க வேண்டியதுதான். நான் உன்னை அப்படிப் பார்க்க விரும்பவில்லை. என் பேச்சை மட்டும் கேள்.” அண்ணனின் அந்த வார்த்தைகளில் இருந்த பயமுறுத்தல் மாயாவின் ஆன்மாவை உலுக்கியது. அவனின் பார்வையில் இருந்த கோபம் அவளிடம் பல கேள்விகளை எழுப்பியது. அவளது மனதில் ஒரு மெல்லிய சந்தேகப் பொறி விழுந்துவிட்டது. ‘அண்ணன் ஏன் என்னை இவ்வளவு தீவிரமாக இருளுக்குள் என்னை பூட்டி வைக்கிறான்?’ விடை தெரியாத அந்த கேள்விக்கான பதில் ஒரு செவ்வாய்க்கிழமை மதியம் அவளைத் தேடி வந்தது. கிரண் அவசரமாகப் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கியக் கூட்டத்திற்காகப் புறப்பட்டுச் சென்றிருந்தான். வழக்கமாக வீட்டின் ஒவ்வொரு கதவையும், அலமாரியையும் மூன்று முறை பூட்டிச் சரிபார்க்கும் கிரண், அன்று அவசரத்தில் ஹாலில் இருந்த அவனது மருத்துவ அலமாரியின் கீழ் அலமாரியைப் பூட்ட மறந்துவிட்டான். மாயா தன் இருண்ட அறையை விட்டு வெளியே வந்தாள். கடந்த மூன்று மாதங்களாக இருட்டுக்கு மட்டுமே பழகிப்போன அவளது கண்களை, கனத்த ஜன்னல் திரைகளின் வழியே கசிந்த மதிய வெளிச்சம் ஈட்டிகளாகக் குத்தியது. கண்கள் கூசி, கண்ணீர் வழிந்த போதிலும், அவள் அடிமேல் அடி வைத்து அந்த அலமாரியை அடைந்தாள். அவள் அந்த அலமாரியைத் திறந்து, தனக்குக் கொடுக்கப்படும் தேன் நிற மாத்திரைகளின் பாட்டிலை எடுத்தாள். அதன் லேபிளில் கிரணின் கூர்மையான கையெழுத்தில் ‘Compound 74-B / Neuro-Inhibitor’ என எழுதப்பட்டிருந்தது. அது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. அவள் மேலும் தேடியபோது, அதன் அடியில் கிரணின் தனிப்பட்ட ஆராய்ச்சி டைரி கிடைத்தது. அதன் தடிமனான அட்டைப் பக்கத்தை நீக்கி, உள்ளே இருந்த பக்கங்களைப் புரட்டினாள். அதில் கிரண் எழுதியிருந்த ஒரு நீண்ட மருத்துவக் கட்டுரை அவளது கண்ணில் பட்டது. அதில் சிவப்பு மையால் தடிமனாக அடிக்கோடிட்டு எழுதப்பட்டிருந்த வரிகள் அவளது மூச்சை நிறுத்தின. ‘ஒரு மனிதனின் சுயசிந்தனையையும், அவனது சுதந்திரமான செயல்பாடுகளையும் முழுமையாக முடக்க வேண்டுமென்றால், அவனுக்குத் தொடர்ச்சியான மூளைப் பாதிப்பைச் செயற்கையாக உருவாக்க வேண்டும். ‘Compound 74-B’ என்ற வேதிப்பொருள் நரம்புகளைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்து, கடுமையான தலைச்சுற்றலையும், ஒற்றைத்தலைவலியையும் தொடர்ந்து தக்கவைக்கும். இதைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம், ஒரு மனிதனை எப்போதும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடியும்.’ மாயாவின் இதயம் அவளது மார்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிடும் போல் படபடவெனத் துடித்தது. அவளது கைகள் நடுங்கின. டைரியின் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள். அங்கே அவளது பழைய புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழக ஓட்டப்பந்தயத்தில் அவள் தங்கப் பதக்கம் வென்று, மலேசியக் கொடியை ஏந்திப் புன்னகைக்கும் படம் அது. அவளுக்குப் பக்கத்தில் கிரணும் நின்றுகொண்டிருந்தான், ஆனால், அவனது முகத்தில் எந்தப் புன்னகையும் இல்லை. அந்தப் புகைப்படத்திற்குக் கீழே கிரண் தன் கைப்பட எழுதியிருந்த வரிகள் அவளது நொறுக்கியது. ‘அவள் என்னை விடச் சிறந்த அத்லெட் . அவளது வேகம், அவளுக்குக் கிடைக்கும் கைதட்டல்கள், பதக்கங்கள் எல்லாமே என்னைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகின்றன. குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி… என் தங்கை என்னை விடப் புகழடைவதை என் ஆண் அகங்காரத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளது கால்கள் ஓடுவதை நிறுத்த வேண்டும். இவளது சிறப்பான சிந்தனையும், புகழும் ஒழிந்தால் மட்டுமே என் மனப்பொறாமை அடங்கும். விபத்து வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது. இனி இவள் இந்த வீட்டின் இருளைத் தாண்டி வெளியேற மாட்டாள். என் காலடியில்தான் கிடப்பாள்.’ வாசித்துப் முடித்தபோது மாயாவின் உடலிலிருந்து அனைத்து இரத்தமும் உறைந்துபோனது போல் இருந்தது.  விபத்து தற்செயலானது அல்ல! அது அவளது சொந்த அண்ணனால், வெறும் பொறாமையின் காரணமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூரமான சதி. அவளுக்கு நடந்து கொண்டிருக்கும் சிகிச்சையே ஒரு மெதுவான விஷம்! பாசமான அண்ணன் என்ற முகமூடிக்கு பின்னால், தன் திறமையைக் கண்டு பொறாமைப்பட்டுத் தன் வாழ்நாளையே இருளுக்குள் புதைக்கத் துடிக்கும் ஒரு சைக்கோ நின்றுகொண்டிருக்கிறான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. திடீரென்று, அந்த அமைதியான காட்டுப் பகுதியில் காரின் சத்தம் கேட்டது. கிரண் சீக்கிரமாகவே வீட்டிற்குத் திரும்பிவிட்டான்!. மரண பயம் அவளைச் சூழ்ந்தது . டைரியை இருந்த இடத்தில் அப்படியே வைத்துவிட்டு, மாயா தன் முழு பலத்தையும் திரட்டித் தன் அறைக்குள் ஓடினாள். கட்டிலில் படுத்து, கம்பளியை இழுத்துத் தலைவரைப் போர்த்திக் கொண்டாள். அவளது இதயம் துடிக்கும் சத்தம் அவளுக்கே தெளிவாகக் கேட்டது. வெளியே பெரிய மரக்கதவு திறக்கப்பட்டு, மூடப்படும் சத்தம் கேட்டது. ஹாலில் அவனது காலணிகளின் ஓசை மரத்தரையில் பட்டு ‘டக்… டக்…’ என்று எமனின் வருகையைப் போல ஒலித்தது. அவளது இருண்ட அறையின் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. ஒரு சிறிய வெளிச்சக் கீற்று அவளது போர்வையின் மேல் விழுந்தது. கையில் ஒரு கிளாஸ் தண்ணீரும் அந்தத் தேன் நிற நஞ்சு மாத்திரையுடனும் கிரண் உள்ளே நுழைந்தான். “மாயா?” என்று மென்மையாக, அதே பாசமான குரலில் கூப்பிட்டான். “மாத்திரை சாப்பிடுற நேரம்மா.” அவள் தூக்கக் கலக்கத்தில் இருப்பது போல் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். அவனது முகத்தைப் பார்த்தபோது அவளுக்குள் வெறுப்பும் ஆத்திரமும் பொங்கியது. அவனது பொறாமைக்குத் தன் வாழ்க்கையே பலியாகிவிட்டதை நினைத்து உள்ளம் கொதித்தது. ஆனாலும், தன் முகபாவனையை மாற்றாமல், “தேங்க்ஸ் கிரண்,” என்று முணுமுணுத்தாள். அவள் மாத்திரையை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு, தண்ணீரைக் குடித்தாள். விழுங்குவது போல் தொண்டையை அசைத்து நடித்துவிட்டு, நாக்கின் மேல் பகுதியில் மாத்திரையைத் தந்திரமாக மறைத்துக் கொண்டாள். கிரண் திருப்தியோடு புன்னகைத்தான். அந்தப் புன்னகை இப்போது அவளுக்குள் மரண பயத்தையும் தாண்டிய ஒரு வெறியை உண்டாக்கியது. அவன் அவளது தலையை மென்மையாகக் கோதிவிட்டான். “நல்ல பொண்ணு. நீ சீக்கிரம் குணமாயிட்டு வர்ற. இன்னும் சில மாதங்கள் இதே மாதிரி ரெஸ்ட் எடுத்தா போதும், நாம எப்பவும் இதே மாதிரி ஒண்ணா இருக்கலாம்.” அவன் திரும்பிச் சென்று கதவை மூட, அறை மீண்டும் அந்தப் படுபயங்கரமான முழு இருளில் மூழ்கியது. அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை மாயா பலமாக வெளியே விட்டாள். வாயிலிருந்த மாத்திரையைத் தன் உள்ளங்கையில் துப்பினாள். இருளுக்குப் பழகிப்போன அவளது கண்கள், தன் கையில் இருந்த அந்தத் தேன் நிற நஞ்சையே வெறித்துப் பார்த்தன. அவனது “மருந்தை” உட்கொள்வதை நிறுத்தினால் போதும்; இன்னும் சில தினங்களில் அவளது மூளை முழுமையாக விழித்துக்கொள்ளும், அவளது பழைய அத்லெட் வேகம் மீண்டும் அவளுக்குள் திரும்பும் என்று அவளுக்குத் தெரியும். மறுநாள் மதியம். கிரண் பல்கலைக்கழகத்திற்குப் புறப்பட்டுச் சென்றிருந்தான். தன் அண்ணனின் கணினியில் இருந்த ஒரு புதிய மருத்துவ கோப்புறை தற்செயலாகப் பார்த்தாள். அதில் அவளது விபத்துக்குப் பிந்தைய உண்மையான நரம்பியல் ஸ்கேன் அறிக்கைகள் இருந்தன. உண்மையில், அவளது மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஒரு முக்கிய இரத்த நாளம் விபத்தினால் பலவீனமடைந்து, ஆபத்தான முறையில் வீங்கியிருந்தது (Fatal Cerebral Aneurysm). அது எந்த நிமிடத்தில் வெடித்தாலும் அவளுக்குத் தற்காலிகப் பக்கவாதமோ அல்லது உடனடி மூளைச்சாவோ ஏற்படலாம் என்ற அதிர்ச்சிகரமான உண்மை அந்த அறிக்கையில் இருந்தது. அதற்கு கீழே கிரண் நேற்று இரவு எழுதியிருந்த ஒரு மருத்துவக் குறிப்பு இருந்தது. அதில், ‘Compound 74-B என்பது மாயாவின் மூளையதிர்ச்சியைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தி, அவளது இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்து, அந்த அனியூரிசம் வெடிக்காமல் பாதுகாக்கும் ஒரே மருந்து. இதன் பக்கவிளைவு கடுமையான தலைவலியும், தற்காலிக நினைவாற்றல் இழப்பும் மட்டுமே. உண்மை தெரிந்தால் அவள் பயந்து, அவளது இரத்த அழுத்தம் எகிறி அந்த நரம்பு அங்கேயே வெடித்துவிடும். ஆம், எனக்கு அவள் மேல் பொறாமை இருந்தது உண்மைதான்… ஆனால், இப்போது அவள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால், அவள் என்னை ஒரு சைக்கோ என்று நினைத்தாலும் பரவாயில்லை… இந்த இருட்டிலும் என் கட்டுப்பாட்டிலும் மட்டுமே இருக்க வேண்டும். நான் அவளைக் காப்பாற்றுவேன்.’ என எழுதப்பட்டிருந்தது. அவளது தலை சுற்றியது. டைரியில் இருந்த குரூரமான வரிகள் உண்மையா? அல்லது இப்போது லேப்டாப்பில் பார்க்கும் இந்த மருத்துவ அறிக்கை உண்மையா? அவளது அண்ணன் அவளது திறமையைக் கண்டு பொறாமைப்பட்டு அவளைக் கொல்லத் துடிக்கும் சைக்கோவா? அல்லது தன் பொறாமையையும் தாண்டி, தங்கை உயிரோடு இருக்க வேண்டும் என்று அவளது உயிரைக் காப்பாற்றப் போராடும் ஒரே உறவா? எது உண்மை, எது பொய் என்று அவளது மூளையால் பகுத்தறிய முடியவில்லை. திடீரென்று, வரவேற்பறை பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. கதவு திறக்கப்படும் சத்தம். கிரண் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்! அவனது காலடிச் சத்தம் அவளது அறையை நோக்கி நகர்ந்தது. மாயாவிடம் இப்போது இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று, அந்த மடிக்கணினியை மூடிவிட்டு, ஓடிச்சென்று தன் உள்ளங்கையில் மறைத்து வைத்திருக்கும் அந்தத் தேன் நிற மாத்திரையை விழுங்கிவிட்டு மீண்டும் இருளுக்குள் அடைக்கலமாவது. ஏனெனில் மாத்திரைதான் அவளது உயிரைக் காப்பாற்றுகிறது. இரண்டு, மாத்தரையைத் தூக்கி எறிந்துவிட்டு, கணினியோடு அவனுக்கு முன்னால் நின்று உண்மையை உரக்கக் கேட்பது. “மாயா…” கதவுக்குப் பின்னாலிருந்து கிரணின் குரல் பாசத்தோடு ஒலித்தது. அவள் தன் கையில் இருந்த மாத்திரையைப் பார்த்தாள்; பின் மடிக்கணினி திரையைப் பார்த்தாள். அவளது கண்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தன. கதவின் கைப்பிடி மெதுவாகத் திரும்பியது…

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button