DevotionalsMalaysiaPolitics

தேசிய திருமுருகன் மாநாடு அரசியல் சார்பற்ற ஆன்மிக எழுச்சி மாநாடாக அமைந்தது; பேராக் மாநில அரசின் ஆதரவுடன் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படும்! டத்தோ அ. சிவநேசன் தகவல்

வெற்றி வேல்

ஈப்போ, ஜூலை 26- பேராக் மாநில அரசின் முழு ஆதரவுடன் நடைபெற்ற இரண்டாவது தேசிய திருமுருக மாநாடு, அரசியல் சார்பற்ற தூய ஆன்மிக நிகழ்வாக மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் கூறினார். ஈப்போ கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் இரண்டாவது திருமுருகன் மாநாடு நடைபெற்றறது.  இந்த மாநாட்டின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ சிவநேசன், கடந்த ஆண்டு கம்போங் கப்பாயாங் சுப்பிரமணியர் ஆலயத்தில் மாநில அளவில் தொடங்கப்பட்ட திருமுருகன் மாநாடு, இந்த ஆண்டு தேசிய அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக டத்தோ சிவநேசன் தெரிவித்தார். இந்த மாநாட்டின் அனைத்து செலவுகளையும் பேராக் மாநில அரசு ஏற்று, தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடத்தி வருவதாகவும், இதேபோல் ஆண்டுதோறும் மாநாட்டை நடத்துவதற்கும் மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் ணிவநேசன் சொன்னார். இந்த மாநாட்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மலேசிய இந்து சங்கத்தின் மாநிலத தலைவர் பொன். சந்திரன், தேசிய துணைத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன்ஷான், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ரிஷிகுமார் வடிவேலு, பேராக் மாநில இந்து தர்ம மாமன்றத் தலைவர் கிருஷ்ணன் சுப்பிரமணியம், பேராக் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத் தலைவர் ஜெயக்குமார் சபாபதி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்களும் மாநாட்டில் பங்கேற்றனர். மேலும் இந்தியாவில் இருந்து மூன்று சிறப்பு அறிஞர்களும், மலேசியாவில் இருந்து இரண்டு ஆய்வாளர்களும் கலந்து கொண்டு முருக வழிபாடு, தமிழ் சமயம், ஆன்மிகம் மற்றும் பண்பாடு குறித்து ஆழமான சொற்பொழிவுகளை வழங்கினர்.  மலேசியாவின் பிரபல மருத்துவர் டாக்டர் ஜெய்பாலன் வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டின் சிறப்பு குறித்து கருத்து தெரிவித்த டத்தோ சிவநேசன், தமிழ்நாட்டில் நடைபெற்ற முருக மாநாடுகளைப் போன்று மலேசியாவிலும் உயர்தர ஆன்மிக மாநாட்டை நடத்த முடிந்திருப்பது பெருமைக்குரிய வியம் என்றார். “இந்த மாநாட்டில் அரசியலுக்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை. முருக பக்தி, ஆன்மிகம் மற்றும் தமிழர் பண்பாட்டை மையமாகக் கொண்டே மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு மக்களிடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், அரசியல் சார்பின்றி இந்த மாநாடு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே தமது விருப்பம் ஐஎன்று டத்தோ சிவநேசன் தெரிவித்தார். இதனுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் பேராக் மாநில அரசு இந்திய சமூக நலனுக்காக வழங்கிய உதவிகளையும் அவர் பட்டியலிட்டார். 2023 ஜனவரி முதல் அண்மைய காலம் வரை மாநில அரசு இந்திய சமூக அமைப்புகளுக்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு RM6 மில்லியனும், அரசுசாரா இந்திய அமைப்புகளுக்கு RM3.5 மில்லியனும் நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அதேவேளை, மத்திய அரசின் MITRA வழியாக ஆலயங்களுக்கு RM11 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து இந்திய சமூகத்தின் கல்வி, ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கியுள்ளன என்றும், முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது இந்திய சமூகத்திற்கு வழங்கப்படும் ஆதரவு கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் சொன்னார். ஆலயப் பிரச்சினைகள் குறித்து பேசிய டத்தோ சிவநேசன், அரசின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களே தற்போது முக்கிய சவாலாக இருப்பதாகக் கூறினார். “பேராக் மாநிலத்தில் சுமார் 60 ஆலயங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை ஒரு ஆலயமும் இடிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  பெரும்பாலான ஆலய நிர்வாகங்கள் அரசுடன் ஒத்துழைக்கின்றன. மிகச் சில ஆலயங்கள் மட்டுமே இன்னும் உடன்பாட்டுக்கு வரவில்லை,” என்று அவர் சொன்னார். இந்து ஆலயங்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவற்றுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை ஏற்படுத்தும் பணியை பேராக் மாநில அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் டத்தோ அ. சிவநேசன் உறுதியளித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button