MalaysiaPolitics

இந்திய சமுதாயம் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்! பொருளாதார பலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் ! – தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர்,ஏப்.13- இந்த சித்திரை புத்தாண்டு நமது இந்திய சமூகத்தினரின் குடும்பங்களுக்கு செல்வச் செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் அள்ளித் தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறினார். இந்த சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இந்திய சமூகத்தினருக்கும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.  இந்திய சமூகம் ஒற்றுமையை கடை பிடிக்க வேண்டும். நாம் எதிர்நோக்கும் சவால்களுக்கும் பிரச்சனைகளுக்கும் நமது ஒற்றுமை பலத்தை ஏற்படுத்தும். 80 ஆண்டுகளாக தீவிர அரசியல் பணி ஆற்றி வரும் மஇகாவுக்கும் இது ஒரு சவாலான காலகட்டம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. அதை உணர்ந்துதான் இந்திய சமூகத்திற்காகத் தொடர்ந்து போராடவும், நம்முடைய பிரச்சனைகளுக்கு நாமே சுயமாக தீர்வு காணவும் முடிவு செய்து அதற்கேற்ப பணியாற்றி வருகிறோம். இதற்கு இந்திய சமுதாயத்தின் ஒற்றுமை மிகவும் அவசியம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த காலகட்டம் நமக்கு ஒரு சவாலான காலகட்டம். மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் போர் நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதால் நாம் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார். நமது நாட்டின் இந்திய சமுதாயத்தின் தலையாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ம.இ.கா பெரிதும் பாடுபட்டு வருகிறது. மஇகா முன்வைந்திருக்கும் இந்திய சமூகப் பிரச்சனைகளைக் கனிவோடும், அக்கறையோடும் கவனிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். அந்த நம்பிக்கையுடனும் நமக்கான பிரச்சனைகளுக்கு நாமே இயன்ற அளவில் தீர்வு காண முயற்சி செய்வோம் என்ற நோக்கத்துடனும் இந்த சித்திரைப் புத்தாண்டை உற்சாகத்தோடும், நன்மைகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்புடனும் கொண்டாடி மகிழ்வோம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button