Malaysiaசிறுகதை

காத்திருப்பின் கடைசி அழுகை

சாதிகாவின் சிறுகதைப் படைப்பு UPLOADED BY KRISHAN THIVAGARAN

தனியார் மருத்துவமனையின் நீண்ட நடைபாதையில் அரவிந்த் தனியாக நின்றுகொண்டிருந்தான். கடிகாரம் நள்ளிரவு இரண்டு மணியைத் தாண்டியிருந்தது. அவன் தலைக்கு மேலே உள்ள சுவரில் தொங்கியிருந்த கடிகாரத்தின் “டிக்… டிக்…” என்ற சத்தம் மட்டும் அந்தப் பேரமைதியைக் கீறிக்கொண்டிருந்தது. பிரசவ அறையின் வாசலில் எரிந்துகொண்டிருந்த அந்த இரத்த நிற சிவப்பு விளக்குப் போலவே அவனது இதயத் துடிப்பு சீரற்ற வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது. வெளியே சாலையின் நள்ளிரவுப் போக்குவரத்தும் தூரத்தில் எல்.ஆர்.டி தண்டவாளத்தின் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்ததன.அவன் தன் இரு கைகளையும் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பற்றிக்கொண்டான். உள்ளங்கை வியர்த்திருந்தது. கடந்த பத்து வருடங்களாகப் பேயாய்த் துரத்தும் அந்தப் பழைய பயம், இன்று மீண்டும் அவனுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தது.காலங்கள் கண்டந்தும் அந்த பயம் மட்டும் மாறவில்லை.அரவிந்துக்கும் நந்தினிக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. பினாங்கில் எளிமையாகத் தொடங்கிய அவர்களின் குடும்ப வாழ்க்கையில் எல்லாமே இருந்தது. அன்பு,மரியாதை, நல்ல வேலை. ஆனால், ஒரேயொரு குறை மட்டும் நிழலாய் தொடர்ந்தது. வீடுகளில் இயல்பாகக் கேட்கும் மழலைச் சத்தம் அவர்களின் வீட்டில் மட்டும் கேட்கவே இல்லை.முதல் முறை நந்தினி கர்ப்பமான செய்தி தெரிந்தபோது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கோலாலம்பூரில் அவர்கள் வாங்கிய புது வீட்டின் மாடி அறையை தனது முதல் குழைந்தைகாகவே என்று பிரத்யேகமாக ஒதுக்கினார்கள். அந்த அறையின் சுவர்களில் வண்ண வண்ணப் பூக்களையும், கார்ட்டூன் சித்திரங்களையும் ஒட்டினார்கள். லிட்டில் இந்தியாவுக்குப் போய் சின்னச் சின்ன ஆடைகள் தொட்டில் மற்றும் விளையாட்டுப் பொருள் எனப் பார்த்துப் பார்த்து வாங்கினார்கள். பிறக்கப்போகும் குழந்தைக்கு ‘அன்பரசன்’ என்றும் ‘மகிழ்மதி’ என்றும் பெயர்களைக் கூடத் தேர்வு செய்து டைரியில் எழுதி வைத்திருந்தார்கள்.ஆனால், மூன்றாவது மாதப் பரிசோதனையின்போது அந்தப் பூ மலருவதற்கு முன்பே உதிர்ந்துவிட்டது. ஸ்கேனிங் திரையில் மருத்துவர் காட்டிய அந்த மௌனம், அவர்களின் வாழ்நாள் மௌனமாக மாறியது.”அடுத்த முறை பார்த்துக்கலாம் அரவிந்த், மனசைத் தளரவிடாதீங்க,” என்று ஆறுதல் சொன்னார் அவர்களின் குடும்ப மருத்துவர் ராகவன்.அடுத்த முறை மீண்டும் கர்ப்பம். இந்த முறை அவர்கள் சற்றும் அசரவில்லை. மிகக் கவனமாக இருந்தார்கள். நந்தினி வேலைக்குக் கூட செல்லாமல் வீட்டிலே குழந்தைக்காக இருந்தாள். மருத்துவர்களின் ஒவ்வொரு சிறு அறிவுரையையும் வேதவாக்காகப் பின்பற்றினர். ஒவ்வொரு நாளையும் நாட்காட்டியில் குறித்துக் கொண்டே இந்த முறை அப்படி ஆகாது என்ற புது நம்பிக்கையில் வாழ்ந்தார்கள்.ஆனால், ஏழாவது மாதத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு திடீரென நின்றுவிட்டதாக டாக்டர் ராகவன் சொல்கிறார். நந்தினி கத்திய சத்தம் இன்றும் அரவிந்தின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.மீண்டும் வெறுமை. மீண்டும் கண்ணீர். மீண்டும் அதே கொடூர அமைதி.அதன்பிறகு நடந்த ஒவ்வொரு கர்ப்பமும் ஒரே மாதிரியான சோக நாடகமாகவே முடிந்தது. சில முறை ஐந்தாவது மாதம், ஒருமுறை ஒன்பதாவது மாதம் வரை நன்றாக நகர்ந்து, பிரசவ வார்டுக்குள் நுழையும் முன் உயிரிழந்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் நம்பிக்கையோடு மருத்துவமனையின் கதவைத் திறப்பார்கள். ஆனால் மருத்துவமனை அந்த நம்பிக்கையை ஓடைத்துக்கொண்டேதான் இருந்தது.இருப்பினும், அந்த மாடி அறை மட்டும் மாறவே இல்லை. அந்த அறையில் இன்னும் பயன்படுத்தப்படாதத் தொட்டில் அப்படியே இருந்தது. பிறக்காத அந்தப் பிஞ்சுகளுக்காக வாங்கப்பட்ட பொம்மைகள், சிறிய காலணிகள், வண்ண ஆடைகள், தூசு படிந்த பால் புட்டிகள் அனைத்தும் ஒரு நினைவுக் காட்சியகம் போல அப்படியே தேங்கிக் கிடந்தன. அந்த அறை ஒரு வீடாக இல்லாமல், அவர்களின் தீராத துயரத்தின் நினைவகமாக மாறிப்போயிருந்தது.ஒரு நாள் மாலை, கனத்த மழை பேய்த்தது. நந்தினி அந்த மாடி அறையின் ஜன்னல்களை மெதுவாகப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள். அவளது கண்கள் அழுது வீங்கியிருந்தன.“இனி நமக்கு இது வேண்டாம் அரவிந்த்,” என்றாள் தீர்க்கமான குரலில்.“என்ன சொல்கிறாய் நந்தினி?”“குழந்தைக்காகக் காத்திருக்கும் இந்த நரக வாழ்க்கை இனி நமக்கு வேண்டாம். ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையை இழக்கும்போது என் சதையிலிருந்து ஒரு பகுதியை, என் உயிரின் ஒரு துளியை நான் இழக்கிறேன். இனிமேல் இந்த வலியைத் தாங்கும் சக்தி என் உடம்புக்கும் இல்லை, மனசுக்கும் இல்லை.”அவள் பேசும்போது குரல் நடுங்கியது, கண்கள் உடைந்து ஊற்றெடுத்தன.“நமக்குக் குழந்தை பாக்கியம் இல்லைனா பரவாயில்லை. நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா வாழ்ந்திட்டுப் போவோம். ப்ளீஸ்… என்னை விட்டுடுங்க.”அன்று இரவு அவர்கள் தூங்கவில்லை. நீண்ட நேரம் பேசினார்கள். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இனி குழந்தைக்காகக் கனவு காணக் கூடாது. எந்தக் கோவிலும் ஏறக் கூடாது. எந்தப் பரிகாரமும் செய்யக் கூடாது. வாழ்க்கை எந்தப் பாதையில் செல்கிறதோ, அப்படியே போகட்டும் என முடிவெடுத்தனர்.ஆறு மாதங்கள் கடந்தன. ஒரு சுவையான தேனீர் வாசனையுடன் விடிந்த காலைப் பொழுது.நந்தினி குளியலறையிலிருந்து மெதுவாக, கால்கள் நடுங்க வெளியே வந்தாள். அவளது கையில் பிரசவப் பரிசோதனைக் கருவி இருந்தது. அதில் அந்த இரண்டு சிவப்பு கோடுகள் மிகத் தெளிவாக அழுத்தமாகத் தெரிந்தன.அவள் அதை அரவிந்திடம் நீட்டினாள். அவன் அதைப் பார்த்தான். பிறகு அவளது முகத்தைப் பார்த்தான். இருவரிடமும் எந்தப் பேச்சும் இல்லை. வழக்கமாக இதுபோன்ற தருணங்களில் தம்பதியரிடையே பொங்கும் மகிழ்ச்சியோ, முத்தங்களோ, அணைப்போ அங்கு இல்லை.ஏனெனில், அவர்கள் இருவருக்குமே நன்றாகத் தெரிந்திருந்தது, தங்களைப் போன்ற துரதிர்ஷ்டசாலிகளுக்குக் ‘நம்பிக்கை’ என்பது மிக ஆபத்தான ஒரு போதை மருந்து.“இந்த முறையும் நம்மை ஏமாற்றிவிடுமா அரவிந்த்?” என்று நந்தினி நடுக்கத்தோடு கேட்டாள். அரவிந்திடம் அதற்குப் பதில் இல்லை.அன்றிலிருந்து அவர்களின் வாழ்க்கை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நகர்ந்தது. மருத்துவமனைக்குச் சென்றார்கள். மருந்துகளைத் தவறாமல் சாப்பிட்டார்கள். ஆனால், அதை ஒரு மருத்துவ கடமையாக மட்டுமே செய்தார்கள். குழந்தையைப் பற்றி அவர்கள் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. தொட்டில் அறையைத் திறக்கவே இல்லை. புதிய ஆடைகள் வாங்கவில்லை. அந்தப் பிரசவ மாத காலத்தை அவர்கள் கொண்டாடவே இல்லை. மாறாக, ஒரு தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கைதிகளைப் போலக் கழித்தார்கள்.ஒன்பதாவது மாதம் முடிவடையும் தருணம். வழக்கம் போல் காலை முதல் இரவு வரை மலை பெய்து கொண்டே இருந்தது. திடீரென்று நந்தினி தன் வயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அலறினாள். “அரவிந்த்… வலிக்குது… தாங்க முடியல!”அவன் பதறப் போனான் வாகனத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கிப் விரைந்தான். காரின் வைப்பர்கள் மழையைத் துடைக்கப் போராடிக் கொண்டிருந்தன. காரின் பின் இருக்கையில் நந்தினியின் வேதனை அழுகைகள் எதிரொலித்தன. அரவிந்தின் கைகள் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பற்றியிருந்தன. “இறைவா, இந்த ஒரு முறை மட்டும் என் நந்தினியைக் கைவிட்டுடாதே,” என்று மனதிற்குள் உருகி வேண்டினான்.மருத்துவமனையை அடைந்ததும் நந்தினி அவசரமாகப் பிரசவ அறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டாள். டாக்டர் ராகவன் உள்ளே விரைந்தார்.நேரம் நகர மறுத்தது. ஒரு மணி நேரம்… இரண்டு மணி நேரம்… மூன்று மணி நேரம்…இறுதியில், விடியற்காலை நான்கு மணியளவில் ஒரு தாதியர் வெளியே வந்து அரவிந்தை அழைத்தார். உள்ளே டாக்டர் ராகவன் நின்றிருந்தார். அவரது முகத்தில் எப்போதும் இல்லாத ஒரு சோகமும் பதற்றமும் படிந்திருந்தது.“அரவிந்த்…” என்று அவர் அழைத்த அந்த ஒரு தொனியிலேயே ஏதோ விபரீதம் என்பதை அரவிந்த் உணர்ந்துவிட்டான்.“சொல்லுங்க டாக்டர்… நந்தினிக்கு ஒன்றும் இல்லையே?”டாக்டர் பெருமூச்சு விட்டார். “நிலைமை ரொம்ப காம்ப்ளிகேட்டட் பா. நந்தினியோட கர்ப்பப்பைப் பலவீனமா இருக்கு. ரத்தப்போக்கு நிக்கல. இப்போதைய சூழலில்… எங்களால் ஒரு உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும். நந்தினியா, அல்லது குழந்தையா? நீங்கள்தான் உடனடியாக ஒரு முடிவைச் சொல்ல வேண்டும்.”அரவிந்தின் காலடியில் இருந்த பூமி நழுவியது போலிருந்தது. பத்து வருடக் காத்திருப்பு, நந்தினியின் தியாகம், அவளது ஏக்கம் எல்லாம் ஒருபுறம்… ஆனால், அவளில்லாத ஒரு வாழ்க்கை அவனுக்குச் சாத்தியமா?அவன் கண்களை மூடினான். கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது. “டாக்டர், எனக்கு என் நந்தினிதான் முக்கியம். என் மனைவியைக் காப்பாற்றுங்கள். பரவாவில்லை, எனக்கு குழந்தை வேண்டாம்.+” என்று கத்தினான். அவன் வாயிலிருந்து முதன் முதலில் பிறக்கவிருக்கும் குழந்தை வேண்டாம் என்று வந்தது. வலி அவன் இதயத்தை ஆண்டது.டாக்டர் தலையசைத்துவிட்டு மீண்டும் உள்ளே ஓடினார்.அவரால் அவனின் நிலையைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால், தீர்வு கொடுக்கத்தான் முடியவில்லை. மனம் நொந்து போனார்.அடுத்த இருபது நிமிடங்களில் பிரசவ அறையின் கதவு திறந்தது. தாதியர் ஒரு வெள்ளைத் துணியில் சுருட்டப்பட்ட குழந்தையோடு வெளியே வந்தாள். ஒரு கனம் யோசிக்கிறான்.“வாழ்த்துகள் அரவிந்த்! அழகான பெண் குழந்தை,” என்று அவனிடம் நீட்டினாள்.அவனால் தன் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்துகொண்டிருந்ததை நம்பவே முடியவில்லை.நடுங்கிக்கொண்டிருந்தக் கரங்களை மெதுவாக நீட்டினான் அரவிந்த்.செவிலியர் அந்தப் பிஞ்சுக் குழந்தையை அவன் கைகளில் ஒப்படைத்தாள்.பத்து ஆண்டுகளாகக் காத்திருந்த ஒரு கனவு இப்போது அவன் கரங்களில் படுத்திருந்தது.சிறிய முகம்.மென்மையான விரல்கள்.மூடியிருந்த கண்கள்.உயிரின் வாசனையுடன் துடித்துக்கொண்டிருந்த அந்தச் சிறிய உடலைப் பார்த்துக்கொண்டே நின்றான்.ஆனால் அவனால் மகிழ முடியவில்லை.எண்ணற்ற ஏமாற்றங்களும், உடைந்த கனவுகளும், இழந்த குழந்தைகளின் நினைவுகளும் அவனது இதயத்தை உணர்ச்சியற்ற கல்லாக மாற்றியிருந்தன.“இது உண்மையா…?” என்று அவனது மனம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தது.அப்போது…அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உதடுகள் லேசாக அசைந்தன.அடுத்த நொடி, மருத்துவமனை நடைபாதை முழுவதும் கேட்கும் அளவுக்கு அது அழத் தொடங்கியது.அந்த அழுகை ஒரு குழந்தையின் குரல் மட்டுமல்ல.பத்து ஆண்டுகளாகக் காத்திருந்த பிரார்த்தனைகளின் சத்தம்.எண்ணற்ற இரவுகளில் சிந்தப்பட்ட கண்ணீரின் பதில்.பலமுறை உடைந்தும் மீண்டும் உயிர்த்தெழுந்த நம்பிக்கையின் குரல்.அந்த ஒலி அரவிந்தின் இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த வலிகளை உடைத்தெறிந்தது.அவனது கண்கள் தானாகவே கண்ணீரால் நிரம்பின.இதுவரை அடக்கி வைத்திருந்த எல்லா வேதனைகளும் அந்த ஒரு நொடியிலேயே கரைந்து போனது.குழந்தையை மார்போடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.அவனது கண்ணீர்த் துளிகள் அந்தப் பிஞ்சின் நெற்றியில் விழுந்தன.“என்… பாப்பா…”என்ற வார்த்தைகள் அவனது உதடுகளில் இருந்து உடைந்து வெளிவந்தன.அந்த ஒரு சொல்லுக்குள், பலக் ஆண்டுகால காத்திருப்பும், வலியும், ஏக்கமும், அன்பும் கலந்திருந்தது.அதே நேரத்தில் டாக்டர் ராகவன் வெளியே வந்தார். “அரவிந்த், நந்தினிக்குத் தையல் போட்டுட்டோம். ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிட்டா. இப்போதைக்கு மயக்கத்தில் இருக்கா. நீ போய் குழந்தையை நந்தினி பக்கத்துல தொட்டிலில் படுக்க வேய்,” என்றார்.அரவிந்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.ஒரு கணம் அவனால் சுவாசிக்கவே முடியவில்லை.பத்து ஆண்டுகளாக அவர்கள் சுமந்திருந்த வலியும், ஏக்கமும், காத்திருப்பும் அந்த நொடியில் அர்த்தம் பெற்றுவிட்டதாகத் தோன்றியது.கடவுள் இறுதியாக அவர்களைப் பார்த்துவிட்டார் என்று அவன் நம்பினான்.மனைவி உயிருடன் இருந்தாள்.குழந்தை அவன் கரங்களில் இருந்தது.இதற்கு மேல் வாழ்க்கையிடம் என்ன கேட்க முடியும்?குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு மெதுவாக வார்டுக்குள் நுழைந்தான்.அறை முழுவதும் அமைதியாக இருந்தது. படுக்கையில் நந்தினி மயக்க நிலையில் படுத்திருந்தாள். முகம் வெளிறியிருந்தாலும், அவள் உயிருடன் இருப்பதை நினைத்தவுடன் அரவிந்தின் இதயம் நிம்மதியடைந்தது. அவளருகில் இருந்த சிறிய தொட்டிலில் குழந்தையை மெதுவாகப் படுக்க வைத்தான்.பிறகு நந்தினியின் அருகில் சென்று அமர்ந்தான்.பல ஆண்டுகளாக அவனைத் தாங்கிய அந்தக் கைகளைத் தனது கரங்களுக்குள் எடுத்துக்கொண்டான். அவற்றில் இன்னும் உயிரின் வெப்பம் இருந்தது. அவன் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.அந்தக் கைகளை மெதுவாக தனது நெற்றியில் ஒற்றிக்கொண்டான்.“நந்தினி…”அவனது குரல் உடைந்தது.“நம்மள கடவுள் கைவிடல…”ஒரு கண்ணீர்த் துளி அவளது கையின் மேல் விழுந்தது.“பார்… நம்ம பாப்பா வந்துட்டா…”அவன் திரும்பி தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான்.“நீ எத்தனை இரவுகள் அழுதிருக்க… எத்தனை தடவை உடைஞ்சு போயிருக்க… எல்லாத்துக்கும் இப்போ முடிவு வந்துடுச்சு நந்தினி…”அவளது விரல்களை இறுகப் பற்றிக்கொண்டான்.“நீ மட்டும் கண்ணைத் திறந்து பாரு… நம்ம பாப்பா உன்னைத் தேடுறா… நானும் காத்துக்கிட்டு இருக்கேன்…”. அப்போது திடீரென்று அந்த அறையின் மூலையில் இருந்த மானிட்டரில் இருந்து ஒரு விசித்திரமான நீடித்த பீப் சத்தம் கேட்டது. நந்தினியின் இதயத் துடிப்பு காட்டும் திரை நேர்க்கோடாக மாறியிருந்தது. அவனது உதடுகள் நடுங்கின. அவள் கையை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டான்.“டாக்டர்! நர்ஸ் !” என்று அரவிந்த் அலறினான்.மறுபடியும் பதற்றம் தொற்றிக்கொண்டது. டாக்டர் ராகவனும் செவிலியர்களும் அறைக்குள் ஓடி வந்தனர். அரவிந்தை உடனடியாக வெளியேற்றினர். கதவு மீண்டும் அடைக்கப்பட்டது. அந்தச் சிவப்பு விளக்கு மீண்டும் எரியத் தொடங்கியது.அரவிந்த் மீண்டும் அந்தப் பழைய நடைபாதையிலேயே நின்றுக் கொண்டிருந்தான்.குழந்தையை மார்போடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு மருத்துவமனை நடைபாதையில் நின்றுகொண்டிருந்தான் அரவிந்த்.சில நிமிடங்களுக்கு முன்பு அவனது கரங்களில் கிடைத்திருந்த அந்தப் பேரானந்தம், இப்போது பயமும் பதற்றமும் கலந்த ஒரு தாங்க முடியாத வேதனையாக மாறியிருந்தது.அவனது மார்பில் சாய்ந்திருந்த பிஞ்சுக் குழந்தை அவ்வப்போது மெதுவாக அழுதுகொண்டிருந்தது.அந்த அழுகுரலைக் கேட்டபோதெல்லாம் அவனது இதயம் கனத்தது.“இதற்காகத்தானே நாம பத்து வருஷம் காத்திருந்தோம்…”என்று மனதிற்குள் தோன்றியது.ஆனால் அடுத்த நொடியே மற்றொரு கேள்வி அவனைத் துளைத்தது.“இப்போ எனக்குக் குழந்தை கிடைச்சிருக்கு… ஆனா உன்னை நான் இழக்கப் போறேனா நந்தினி?”அவனது பார்வை அந்த மூடிய கதவின் மீதே பதிந்திருந்தது.டாக்டர் ராகவன் சில மணி நேரங்களுக்கு முன்பு கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்தன.”உயிருக்கு ஆபத்து இருக்கிறது… ஒருவரை மட்டும்தான் காப்பாற்ற முடியும்…” அப்படியென்றால், டாக்டர் ராகவன் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு, நந்தினி பிழைத்துவிட்டதாகத் தன்னிடம் பொய் சொன்னாரா? அரவிந்தின் விரல்கள் குழந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டன. அவன் தனது குழந்தையின் முகத்தைப் பார்த்தான்.அந்தச் சிறிய முகத்தில் நந்தினியின் சாயல் தெரிந்தது.அவளது கண்கள்.அவளது உதடுகள். அவளது உயிர்.அவனது கண்களில் கண்ணீர் பெருகியது.“நீ வந்துட்ட… ஆனா அவளும் வருவாளா…?”அவனது குரல் உடைந்தது. குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது.அந்த அழுகுரல் வெறிச்சோடிய நடைபாதையில் எதிரொலித்தது.அது ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையின் சாதாரண அழுகையாக இருந்திருக்கலாம்.ஆனால் அந்த நொடியில் அரவிந்திற்கு அது ஒரு உயிர் இன்னொரு உயிரைத் தேடும் ஏக்கமாக இருந்தது. குழந்தையைத் தனது மார்போடு அணைத்துக்கொண்டு மெதுவாக அந்தக் கதவை நோக்கி நடந்தான்.ஆனால் உள்ளே செல்லத் துணியவில்லை.ஏனென்றால் அந்தக் கதவின் மறுபுறம் அவனது வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு பதில் காத்திருக்கலாம்.அவன் பல ஆண்டுகளாக ஒரு குழந்தைக்காகக் காத்திருந்தான். இன்று அந்தக் குழந்தை அவன் கரங்களில் இருந்தது.ஆனால் இப்போது அவன் காத்திருப்பது வேறொன்றிற்காக. “எனக்குக் குழந்தையைக் கொடுத்த வாழ்க்கை… அவளையும் என்னிடம் விட்டுவிடுமா?”என்ற கேள்விக்கான பதிலுக்காக.பனிமூட்டம் சூழ்ந்த அந்த அதிகாலை நேரத்தில், ஒரு தந்தையின் நடுங்கும் கரங்களில் புதிதாகப் பிறந்த வாழ்க்கை இருந்தது.அவனது கண்கள் மட்டும் இன்னும் அந்த மூடிய கதவின் மீதே நிலைத்திருந்தன.அந்தக் கதவு திறக்கும் வரை அவனால் முழுமையாக மகிழவும் முடியவில்லை.முழுமையாக அழவும் முடியவில்லை.ஏனெனில் அந்த இரவில் அவனது இதயம் இரண்டு துண்டுகளாகப் பிரிந்திருந்தது.ஒன்று அவன் கரங்களில் இருந்தது.மற்றொன்று அந்தக் கதவின் மறுபுறம் உயிருடன் இருக்கிறதா என்பதே இன்னும் தெரியவில்லை.காத்திருந்தான்.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button