
கோலாலம்பூர், மார்ச், 8- இந்திய சமுதாய பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சிக்குய மஇகா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உலக மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். முதலில் மலேசியப் பெண்கள் அனைவருக்கும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மஇகா சார்பில் உலக மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இன்று மார்ச் 8-ஆம் நாள் உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், இந்திய சமுதாய பெண்களின் முன்னேற்றத்தையும் அவர்களின் வளர்ச்சிக்கு மஇகா எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்து வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். “அரசியல், வர்த்தகம், ஆன்மிகம், தொண்டு உள்ளிட்ட தலங்களில் மட்டுமல்ல; நம் சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக நம் பெண்கள் ஆற்றிவரும் பணியையும் இவ்வேளையில் எண்ணிப் பார்க்கிறேன்”. குறிப்பாக மலேசியத் தமிழ் பள்ளிகளில் பெரும்பாலான கல்வி பொறுப்புகளை பெண் ஆசிரியர்களே ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள், மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்ல; மாணவர்களின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்கும் முக்கிய பங்கை ஆற்றுகின்றனர். பள்ளி நிர்வாகக் குழுக்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், மற்றும் சமூக நிகழ்வுகளில் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர். அவர்களின் தாராள பங்களிப்பு, பள்ளிகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாகிறது. தவிர, விளையாட்டுட்டுத் துறையில் அதிகமான ஈடுபாடு கொள்வதுடன் பன்னாட்டு அளவில் வெற்றிபெற்று நாட்டிற்கு பெருமையும் தேடி தருகின்றனர். இப்படிப்பட்ட வீராங்கனையரை அடையாளம் காண்பதும் அவர்களை ஊக்குவிப்பதும் நம் தமிழ்ப் பள்ளி பெண் ஆசிரியர்கள்தாம். அதன் அடிப்படையில்தான், தமிழ் பள்ளிகளில் மாணவிகள் கல்வி, கலை, விளையாட்டு, மற்றும் சமூகச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். “Give to Gain” என்ற கருத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. பொதுவாக, பெண்கள் மனித குலத்திற்கு இடையறாது ஆற்றிவரும் பங்களிப்பு-கடப்பாடு, வீட்டையும் நாட்டையும் முன்னேற்றுவதில் உரிய பங்காற்றுதல், பெண்களின் சாதனைகளை கொண்டாடுதல், பாலின சமத்துவம், நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்துதல், ஒத்துழைப்பு மற்றும் தாராள பங்களிப்பின் மூலம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பெண்களின் ஈகமும் தொண்டும் நிறைந்துள்ளன. இவ்வாண்டு உலக மகளிர் தினம், பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் மஇக பாராட்டி, போற்றுகிறது. இந்த வேளையில் அனைவருக்கும் மீண்டும் மகளிர் தின நல்வாழ்துக்களைத் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.



