MalaysiaPolitics

நான் பல கோடி ரிங்கிட் திருடவில்லை, நான் துருக்கி பிரஜை அல்ல” – டத்தோ ஸ்ரீ ஃபர்ஹாஷ் வாஃபா போலீசில் புகார்

கோலாலம்பூர்,மே 6-துருக்கி மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பல பில்லியன் ரிங்கிட் பணத்தைத் திருடிச் சென்று பணமோசடி செய்ததாகவும், அவர் தற்போது துருக்கி நாட்டின் பிரஜையாக இருப்பதாகவும் சில இணையதளங்கள் வெளியிட்ட செய்திகளை டத்தோ ஸ்ரீ ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடார் வன்மையாக மறுத்துள்ளார். சோபியா ரினி மற்றும் ஆல்பர்ட் டீ ஆகிய இரு நபர்களின் உரையாடல் அடங்கிய வீடியோ பதிவை அடிப்படையாகக் கொண்டு மலேசியாநவ் (MalaysiaNow), மலேசியாகினி (Malaysiakini) மற்றும் ஹராக்கா டெய்லி (Harakah Daily) ஆகிய இணையதளங்கள் வெளியிட்ட செய்திகள் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் என்று அவர் விவரித்தார். “இந்தக் குற்றச்சாட்டுகளை நான் உறுதியாகவும் எவ்வித சந்தேகமும் இன்றியும் மறுக்கிறேன். இந்தக் கூற்றுகள் உண்மைக்கு புறம்பானவை, ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான அவதூறு ஆகும்.  எனது நற்பெயரையும் நேர்மையையும் சீர்குலைப்பதோடு, எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வணிக நடவடிக்கைகளில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துவதையே இது நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார். நான் ஒரு துருக்கி பிரஜை அல்ல என்பதையும், திருட்டு அல்லது பணமோசடி போன்ற எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்பதையும், துருக்கியில் தனக்கு எந்தவொரு வங்கி கணக்கும் இல்லை என்பதையும் ஃபர்ஹாஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “நான் இப்போது ஒரு தொழிலதிபர் மட்டுமே, அரசியலில் ஈடுபடவில்லை. அரசியல் ஆதாயத்திற்காகச் சில தனிநபர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுவதைத் தவிர, இந்த விவகாரத்தில் நான் ஏன் இழுக்கப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை.  தீய நோக்கத்துடன் பரப்பப்படும் அந்த வீடியோ பதிவை நான் மிகத் கடுமையாகக் கருதுகிறேன். இச்செயல் பொறுப்பற்றது மட்டுமல்லாமல், சட்டத்தை மீறும் செயலுமாகும்,” என்று அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தண்டனைச் சட்டம் பிரிவு 499 உள்ளிட்ட தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் மேல் விசாரணை நடத்த அதிகாரிகளிடம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. “விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனது நற்பெயரையும் நலன்களையும் பாதுகாக்க, இந்த அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வழக்குத் தாக்கல் செய்யவும் எனது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார். மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ அல்லது நம்பவோ வேண்டாம் என்றும், அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஃபர்ஹாஷ் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button