
மெர்டேக்கா சிந்தனையும் தேசிய உணர்வும் நாடெங்கும் பிரதிபலிக்கட்டும் டான்ஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் சுதந்திர தின வாழ்த்து
கோலாலம்பூர், ஆக.30-
சுதந்திர மலேசியா, 2024 ஆகஸ்ட் 31-ஆம் நாளில் 68-ஆம் ஆண்டை எட்டுகிறது. இந்த வேளையில் நாட்டு மக்கள் அனைவரின் உள்ளத்திலும் மெர்டேக்கா சிந்தனையும் தேசிய உணர்வும் மேலோங்கட்டும் என்று மஇகா தேசியத் தலைவர் மாண்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பல இன மக்கள் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு ஏற்ற உற்றசூழல் இந்த மண்ணில் நிலைபெற்றுள்ளது. அதற்கு அரசியல் நிலைத்த்னமையும் அடிப்படைக் காரணம். இதன் தொடர்பில், நம் முன்னோர்கள் வகுத்தளித்துள்ள பாதையில் பயணிக்கும் இன்றைய தலைவர்கள், மாண்புசால் ஆட்சியாளர்கள், குறிப்பாக இன்றைய ஒற்றுமை-மடானி அரசை வழிநடத்தும் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் இந்த 67-ஆவது மெர்டேக்கா தினத்தில் மஇகா சார்பில் வாழ்த்துகிறேன்.
மெர்டேக்கா தினத்தைக் கொண்டாடுவதில் மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் மஇகா-விற்கு ஒரு சிறப்பான பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் உண்டு.
நாட்டின் மூத்த அரசியல் இயக்கம் என்பது மட்டுமல்ல; இந்த மண்ணில் ஆதிக்கம் கொண்டிருந்த அந்நிய ஆட்சியில் இருந்து மலாயா விடுதலைப் பெறவேண்டும் என்ற சுதந்திர வேட்கையை முதல் முதலில் ஏற்படுத்திய இயக்கம் மஇகா. அதேக் கருத்தாக்கத்தில் உதயமான கட்சிதான் மஇகா.
1940-ஆம் ஆண்டுகளில் ஆசியக் கண்டத்தில் ஏறக்குறைய 40 கோடி மக்களைக் கொண்டிருந்த இந்தியா விடுதலையைப் பெற்றுவிட்டால், அடுத்து நமக்கும் விடுதலைக் கிடைக்கும் என்ற உணர்வில் மலாயாவின் இந்திய தோட்டப்பாட்டளிகள் நேரடியாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேதாஜி தலைமையிலான இராணுவக் கட்டமைப்பிற்காக, தமிழ்ப் பெண்கள் தங்கள் தாலி உள்ளிட்ட அணிகலன்களை அளித்ததுடன் ஜான்சிராணிப் படையில் நேரடியாகவும் ஈடுபட்டனர். மஇகா-வின் அந்நாளைய முன்னோடித் தலைவர்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.
அந்த வகையில், மலாயா மண்ணில் மெர்டேக்கா முழக்கம் எழ முதல் வித்திட்ட இயக்கம் மஇகா என்பதை இன்றைய இளந்தலைமுறையினருக்கு பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் அதேவேளை, அத்தகைய பாரம்பரிய வரலாற்று அரசியல் கட்சியை வழிநடத்தும் வாய்ப்பை அளித்த சமூகத்திற்கு நன்றிபாராட்டவும் கடமைப் பட்டுள்ளேன்.
அரசியல் பயணத்தில் முன்னடைவும் பின்னடைவும் மாறிமாறி வந்தாலும் தடம் மாறாமல் தேசிய நீரோட்டத்தில் தன்னை முழுவதுமாக ஐக்கியப்படுத்திக் கொண்டு, மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார-கல்வி மறுமலர்ச்சிக்காக தொடர்ந்து பாடாற்றி வரும் பேரியக்கம் மஇகா.
2022 நவம்பர் 19-ஆம் நாள், நாட்டின் 15-ஆவது பொதுத்தேர்தல் முடிவுக்குப் பின் தேசிய அரசியலில் கட்டமைப்பு அடியோடு மாற்றம் கண்டது. அதற்கு ஈடுகொடுத்து, தன்னை தக அமைத்துக்கொண்ட மஇகா, தற்பொழுது புதிய பாதையில் பயணிக்கிறது.
இந்திய சமுதாயமும், மஇகா-தான் தங்களுக்கான ஒரே அரசியல் இயக்கம் என்பதை உணர்ந்து, மஇகா பக்கம் தங்களின் கவனத்தையும் ஆதரவையும் திருப்பி உள்ளது.
இந்த வேளையில், நாடும் மக்களும் மேலும் மறுமலர்ச்சி காணவும் சுபிட்சம் அடையவும் நாம் அனைவரும் இதுவரைக் கடைப்பிடித்துவரும் பல்லின ஒருமைப்பாடு-நல்லிணக்கம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தி, சுதந்திர மலேசியாவின் 68-ஆம ஆண்டை வரவேற்போம் என்று மாண்புமிகு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



