
ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளை மற்றும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கதின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பள்ளிச் சீருடை மற்றும் புத்தக அன்பளிப்பு
சுங்கை சிப்புட்,ஏப்
29-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை மற்றும் புத்தக அன்பளிப்பு பொருட்களை தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் பேராதரவில் நேற்று ஏப்ரல் 25ஆம் தேதி வழங்கப்பட்டது.
ம.இ.கா ஸ்ரீ தாமான் கிளை மற்றும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கதின் ஏற்பாட்டில்
ஹோ காட் ஆன் மற்றும் உயர்திரு தாஸ் மகேஸ்வரி இணையரின் துணையோடு தமிழ்ப்பள்ளிகளுக்குப் பள்ளிச் சீருடை மற்றும் புத்தக அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நனிச்சிறப்பாக நடந்தேறியது.

சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள 8 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தத்துப் பள்ளியான கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் 80 பேருக்குப் பள்ளிச்சீருடடைகளும், சுமார் 8 000 பயிற்சி புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் தலா 1000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கப்பட்டது. பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கும் சில மாணவர்களுக்கு உதவி தொகையும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தினருடன் தமிழாசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வின் நன்கொடையாளரும் சிறப்பு விருந்தினருமான ஹோ காட் ஆன் தன்னுடைய 20 வருடகால நண்பர் எனவும் தங்களது சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இயங்க தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை எங்களுடனே பயணித்து வருவதாக மிகப் பெருமையோடு வீ.சின்னராஜூ பி.பி.என் தெரிவித்தார்.
இனம், மதம் பேதமின்றி திரைமறைவில் பற்பல சேவைகளைச் செய்துவரும் உயர்திரு ஹோ காட் ஆன் அவர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் உண்மையான நேர்மையான சேவையைத் தான் 18 வருடங்களாகத் கண்டு வந்ததாகவும் என்றுமே தமது முழுமையான ஆதரவு எப்போதும் இவர்களுக்கு இருக்கும் எனவும் உயர்திரு ஹோ காட் ஆன் அவர்கள் தமதுரையில் கூறினார்.
எந்தச் சூழலிலும் அயராது மக்கள் சேவையையும் மாணவர் சேவையையும் ஆற்றிவரும் தலைநகரைச் சார்ந்த இளந்தொழிலதிபர் தாஸ் மகேஸ்வரி இணையருக்கும் மாணவருக்கான பள்ளிக் கட்டணம் செலுத்த உதவித்தொகை வழங்கியமைக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தலைவர் திரு.வீ.சின்னராஜூ தெரிவித்தார்.
இந்நிகழ்விற்குத் தமது வற்றாத ஆதரவை நல்கிய ம.இ.காவின் தேசிய தலைவர் தான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு என்றுமே அவரது சேவைக்குத் தன்னுடைய ஒத்துழைப்பும் தமது கிளை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்குமென வீ.சின்னராஜூ உறுதியாகத் தெரிவித்தார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



