
சிறு வணிகங்களுக்கான 6 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி மித்ரா நிதி சேம்பர் வங்கி கணக்கில் உறங்குகிறது! அதனை பயன்படுத்த அனுமதிக்காதது ஏன்? பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜே தினகரன் கேள்வி
பினாங்கு,ஜன.16-
பினாங்கு மாநில சிறு வணிகங்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்த மித்ரா அதன் உறுதிப்பாட்டை இன்னும் வழங்கவில்லை என்று பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜே.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பினாங்கு மாநில இந்திய வர்த்தக சபை ஒன்றின் மூலம் ஒரு விண்ணப்பதாரருக்கு 5,000 வெள்ளி வரை பொருள் உதவிக்கான விண்ணப்பங்களை பினாங்கு சிறு வணிகக் குழு மித்ராவிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் இதுவரையில் எந்த பதிலும் இல்லை என்று அறிக்கை ஒன்றின் மூலம் தினகரன் கூறினார்.
இந்நடவடிக்கையானது பினாங்கில் உள்ள சிறு வணிக உரிமையாளர்களுக்கு மிகவும் தேவையான ஆதரவை வழங்குவதற்கான ஒரு முன்முயற்சியாகும், மேலும் அவர்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்தவும் தக்கவைத்து கொள்ளவும் உதவுவதாக டத்தோ தினகரன் தெரிவித்தார்.
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா கடந்த ஏப்ரல் 2024இல் 690,000 வெள்ளியை பினாங்கு இந்திய வர்த்தக சபைக்கு மாற்றியிருந்தது. இந்நிலையில் தற்போது வரை அந்த நிதி சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படாமல் பயன்படுத்தாத நிலையில் வங்கியில் வெறுமேன கிடப்பதாக தினகரன் சொன்னார்.
ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் இவ்வளவு பெரிய குறிப்பிடத்தக்க தொகை ஏன் மாற்றப்பட்டது என்று ஒரு தீவிரமான கேள்வியை எழுப்புவதால் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று பினாங்கு மஇகா தலைவர்
டத்தோ ஜே தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



