Malaysia

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு 50,000 வெள்ளி மானியம்

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு
50,000 வெள்ளி மானியம்
சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் முயற்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார்
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ 20,000 வெள்ளி வழங்கினார்

கோலாலம்பூர்,அக்.28-
மலேசிய தமிழ் பத்திரிகைகளில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர்களின் நலன் காக்க தொடங்கப்பட்ட இயக்கமான மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 50,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சியின் போது பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பலத்த கரவொலிக்கிடையே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த விருந்து நிகழ்வில் இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மித்ரா தலைவர் பிரபாகரன், ம இ கா தேசிய உதவித் தலைவர் டத்தோ நெல்சன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் மற்றும் சண்முகம் மூக்கன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விழாவில் சண்முகம் மூக்கனுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் உரையாற்றிய சண்முகம் மூக்கன், இந்திய சமுதாயத்தின் நலன்கள் மீது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிக அக்கறை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இனம், நிறம் பாராமல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து இன மக்களுக்கும் சேவையாற்றி வருகிறார் என்று அவர் சொன்னார்.

மேலும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 50,000 மானியம் வழங்குவதாக அவர் அறிவித்தார்.

இதற்கான காசோலையை மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினர்களிடம் சண்முகம் மூக்கன் நேரடியாக ஒப்படைத்தார்.

இதனிடையே, தமிழ் பத்திரிகையாளர் சங்கத்திற்கு அமைச்சின் சார்பாக 20,000 வெள்ளி வழங்குவது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் கோபிந்த் சிங் வெளியிட்டார்.

பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதில் நடுநிலை தவறக்கூடாது என கேட்டுக் கொண்ட அவர், உண்மையான செய்திகளை மக்களிடம் சேர்க்கும் உயரிய பொறுப்பிலிருந்து அவர்கள் ஒருபோதும் தவறக்கூடாது என வலியுறுத்தினார்.

சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button