
அமைச்சர் பதவியை தாரை வார்த்து விட்டீர்கள்! இந்து சமய அறநிலையத்துறையைதாரை வார்த்து விட வேண்டாம் டத்தோஸ்ரீ எம்.சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்,மார்ச் 2-
இந்து சமய அறநிலையத்துறையை (ஹிந்து எண்டோவ்மென்ட் போர்ட்) தாரை வார்த்து விட வேண்டாம் என்று
திரு.ராயர் மற்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் இருவருக்கும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.
பினாங்கில் தமிழர்கள் வழிபடும் இந்து ஆலயங்களே அதிகமாக உள்ளன. எனவே பினாங்கு ஹிந்து எண்டோவ்மென்ட் போர்ட் பதவியையும் கைவிட்டுவிட வேண்டாம் என DAP கட்சியைக் டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
DAP கட்சி குறைந்தபட்சம் இதையாவது தமிழர்கள் தலைமைத்துவத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் நம்மிடையே உள்ள விரிசல் இன்னும் அதிகமாகிவிடும்.
அரசியல் மற்றும் தலைமைத்துவத்தை காரணம் காட்டி இருக்கின்ற ஒன்றிரண்டு உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நமக்கென்று இருந்த அமைச்சர் பதவியை இன்றைய நடப்பு அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் விட்டுக் கொடுத்து விட்டோம்.ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்து இப்போது இருக்கின்ற உரிமையையும் விட்டுக் கொடுக்க வேண்டுமா என்று டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.
நமக்கு ஆண்டாண்டு காலமாக இருந்த அரசியல் பதவியை தாரைவார்த்து விட்டோம். தொடர்ந்து மற்ற சலுகைகள் அனைத்தும் காணாமல் போயின.
இந்தியர்கள் மத்தியில் பெரு வாரியாக தமிழர்கள் வாழும் இந்நாட்டில் அதிகமான பிரச்சனை தமிழர்களைச் சார்ந்தே இருக்கின்றது. எனவேதான் இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க ஒரு தமிழர் அமைச்சராக இருப்பது மிக மிக அவசியம் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
என் இனத்தின் மொழி அறிந்த ஒருவருக்குத்தான், என் இனத்தின் வலி தெரியும். ஆக என் மொழி தெரிந்த தமிழர் ஒருவர் அமைச்சர் பதவியில் இருந்தால் மட்டுமே பெருவாரியாக இருக்கும் தமிழர்களின் பிரச்சனைகளை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து தீர்க்க முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்றைய
நடப்பு அரசியலில்
தமிழர்களுக்குக் குரல் கொடுக்கத், தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க, ஒரு தலைமைத்துவம் இல்லாத சூழலில், பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்நோக்கி வருகிறோம்.
நாளுக்கு நாள் இதை நாம் கண்கூடாகப் பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். இந்த சூழலில் இறுதியாக நம்மிடம் இருப்பது தன்மானமும், இந்து சமய அறநிலையத்துறை பதவியுமே. இதையும் அரசியல் காரணங்களைக் காட்டி விட்டுக் கொடுத்து விட வேண்டாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டு கொண்டார்.
ஆக நிதானமாக யோசித்து நம் இனத்திற்கு எது சரி என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.



