
அமெரிக்காவின் வரி விதிப்பு மலேசிய ஆடைத் தொழில்துறைக்கு உதவ அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள PEFEM சங்கம் வலியுறுத்து
அமெரிக்காவின் வரி விதிப்பு
மலேசிய ஆடைத் தொழில்துறைக்கு உதவ அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள PEFEM சங்கம் வலியுறுத்த
கோலாலம்பூர், மே 9- மலேசியாவில் இருந்து வரும் துணி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள
24 சதவீதம் வரையிலான புதிய இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கைகு Persatuan Pembangunan Perniagaan Fesyen Malaysia எனப்படும் மலேசிய ஆடை வணிக மேம்பாட்டுச் சங்கம் (PEFEM) அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.
அதிகரித்துவரும் செலவுகள் மற்றும் அனைத்துலக போட்டியுடன் ஏற்கனவே போராடி வரும் உள்ளூர் ஆடைத் தொழிலுக்கு இந்த வரி விதிப்பு நடவடிக்கை பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் மலேசிய அரசாங்கம் இதற்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஆடைத் தொழில் சங்கத்தின் தலைவர் Bkay Nair கூறினார்.
இந்த வரி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவை நாட்டின் ஆடைத் துறையின் முதுகெலும்பாக உள்ளன. இந்தத் தொழில் நாட்டின் படைப்பாற்றல் அடிப்படையிலான ஏற்றுமதிக்கு நீண்டகாலமாக முக்கிய பங்களிப்பாளராக இருந்தபோதிலும், பல திசைகளிலிருந்தும் வரும் அழுத்தம் இப்போது ஒட்டுமொத்த தொழில்துறை அமைப்பில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளதாக அமைவதால் மலேசிய அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுப்பதன் வழி மலேசிய ஆடைத் தொழில் எதிர்கொள்ளும் சவால்கள் தவிர்க்கப்படும் என்று Bkay Nair தெரிவித்தார்.
மூலப்பொருள் மற்றும் தளவாடங்களின் அதிகரித்து வரும் செலவுகள், வியட்நாம் மற்றும் வங்காளதேஷம் போன்ற நாடுகளின் குறைந்த தொழிலாளர் செலவு போட்டி, வேகமான ஃபேஷன் வளர்ச்சியால் அதிகரித்துவரும் துணி கழிவுகள் மற்றும் உலகளாவிய சந்தை தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பம் மற்றும் மறுபயிற்சிக்கான அணுகல் இல்லாமை போன்ற கடினமான சூழ்நிலைகளை தற்போது உள்ளூர் ஆடைத் தொழில் எதிர்கொள்கிறது.
எனவே, மலேசியாவின் ஆடைத் தொழில் சர்வதேச அளவில் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் உடனடியாக ஆக்கப்பூர்வமான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று PEFEM கேட்டுக்கொள்கிறது.
மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மாற்று ஏற்றுமதி சந்தைகளை ஆராய்வது, பாதிக்கப்பட்ட SMEs க்கு உதவ ஒரு சிறப்பு நிதியை நிறுவுவது மற்றும் உற்பத்தி கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் முதலீடுகளை அதிகரிப்பது ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் அடங்கும் என்று Bkay Nair சொன்னார்.
அதே நேரத்தில், மலேசியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் அவர் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தை முயற்சிகளை விரைவுபடுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் புதிய சந்தைகளை ஆராய உதவவும் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MITI) மற்றும் தொடர்புடைய ஏஜென்சிகளின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் Bkay Nair தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.
ஆடைத் தொழிலின் தொடர்ச்சி என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, கலாச்சார பாரம்பரியம், ஆக்கப்பூர்வமான புதுமை மற்றும் உலக அரங்கில் மலேசியாவின் உருவம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.
துணி மற்றும் ஆடைத் தொழிலின் உற்பத்தியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாக, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தத் தொழிலின் பின்னடைவை வலுப்படுத்துவதில் PEFEM தொடர்ந்து தீவிர பங்கு வகிக்க உறுதிபூண்டுள்ளது என்று Bkay Nair குறிப்பிட்டுள்ளார்.



