
தமிழ் மணம் இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடந்தேறியது
சுங்கை சிப்புட், ஏப்.30-
கோலக்கங்சார் மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான
இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி, சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனம் என இருப் பிரிவுகளாக வழிநடத்தப்பட்ட இப்போட்டிகளில் கோலக்கங்சார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 13 தமிழ்ப்பள்ளிகள் கலந்துக் கொண்டன.

இப்போட்டி நிகழ்வினை மேனாள் பேரா மாநில ம.இ.கா. தலைவர் அமரர் தான் ஶ்ரீ இராஜூ அவர்களின் புதல்வர் தொழிலதிபர் திரு. இரா. சுந்தரம் மற்றும் அவர்தம் துணைவியாரும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
வெகு விறு விறுப்பாக நடைபெற்ற கிராமிய நடனப் போட்டியில் பேராக் ரிவர் வேலித் தோட்டத் தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வென்று ரொக்கப் பணம் மலேசிய ரிங்கிட் 1,000 மற்றும் வெற்றிக் கோப்பையை தன் வசப்படுத்தியது.
அவர்களைத் தொடர்ந்து, கட்டித் தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலை அடைந்து ரொக்கப் பணம் மலேசிய ரிங்கிட் 700 மற்றும் இரண்டாம் நிலைக்கான வெற்றிக் கோப்பையைக் கரம் பற்றியது.
டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி முறையே மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் வெற்றிப் பெற்று ரொக்கப் பணம் 500 மற்றும் 300 மலேசிய ரிங்கிட்டினைத் தட்டிச் சென்றனர்.
அதுபோலவே, மிக நேர்த்தியுடன் வழிநடத்தப்பட்ட இலக்கிய நாடகப் போட்டியில் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்தப் படைப்பினை வழங்கி முதல் பரிசு ரொக்கப் பணம் மலேசிய ரிங்கிட் 1,500 மற்றும் வெற்றிக் கோப்பையைக் கரம் பற்றியது.
தொடர்ந்து, ஈவுட் தமிழ்ப்பள்ளி-2 ரொக்கப் பணம் மலேசிய ரிங்கிட் 1,000 மற்றும் இரண்டாம் நிலைக்கான வெற்றிக் கோப்பையைத் தன் வசப்படுத்தி இரண்டாம் நிலையில் வென்றது. மூன்றாம் மற்றும் நான்காம் நிலையில் ஈவுட் தமிழ்ப்பள்ளி-1 மற்றும் சுங்கை ரேலா தோட்டத் தமிழ்ப்பள்ளி என இருப்பள்ளிகளும் வெற்றிப்பெற்று முறையே
ரொக்கப் பணம் 700 மற்றும் 500 மலேசிய ரிங்கிட்டினைப் பெற்றுச் சென்றனர்.
ம.இ.கா. தேசியத் தலைவர் தான் ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களின் பேராதரவோடு நடைபெற்ற இப்போட்டி நிகழ்விற்கு ம.இ.கா. தேசிய உதவித் தலைவரும், பேரா மாநில ம.இ.கா.வின் தொடர்புக் குழுத் தலைவருமாகிய தான் ஶ்ரீ மு. இராமசாமி சிறப்பு வருகையளித்து, சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டினைப் பாராட்டி 5,000 மலேசிய ரிங்கிட்டிற்கான காசோலை வழங்கினார்.
இந்நிகழ்வு சிறப்புடன் நடைபெற உதவிக்கரம் நல்கிய ம.இ.கா. தேசியத் தலைவர் தான் ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களுக்கும் மற்றும் ம.இ.கா. தேசிய உதவித் தலைவரும், பேரா மாநில ம.இ.கா.வின் தொடர்புக் குழுத் தலைவருமாகிய தான் ஶ்ரீ மு. இராமசாமி அவர்களுக்கும், கொடையாளர்கள் டத்தோ பா.சகாதேவன் தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்க இயக்குநர், டாக்டர் சு.ஜெயபிரகாஷ், தொழிலதிபர் சுந்தரம் தான் ஶ்ரீ இராஜு, தொழில் முனைவர் ச. கல்யாணக்குமார் சி.எம்.கே. குடும்பத்தினர், தொழில் முனைவர் சங்கநதி தா. தனபாலன், பேரா மாநில ம.இ.கா. தகவல் பிரிவு அதிகாரி திரு. இரா. மகேந்திரன், பேரா மாநில ம.இ.கா. ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.மு.நேருஜி, ம.இ.கா. மத்திய செயற்குழு உறுப்பினர் திரு. சு. சுகேன், ஹேராம் திருமண ஏற்பாடு நிறுவன மேலாளர் திரு. ம. உதயக்குமார் ஆகியோருக்கும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தலைவர் திரு.வீ. சின்னாராஜு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.



