
கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 41வது விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது
சுங்கை சிப்புட்,ஆக.13-
கோலக்கங்சார் கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 41வது விளையாட்டுப்போட்டி கடந்த 8 ஆகஸ்ட் 2025ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மின்னியல் வணிகம் எனும் மாறுபட்ட கருப்பொருளுடன் விமரிசையாக நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில் இளந்தொழிலதிபர் திரு.காளிதாஸ் மற்றும் அவரது துணைவியார் திருமதி மகேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் ஒவ்வொரு இந்தியரின் கடமை. தமிழ்ப்பள்ளிகளுக்கு நாம் நம்மாலான உதவிகளை அவசியம் செய்ய வேண்டுமென நிகழ்வைச் சிறப்புரையாற்றித் திறந்து வைத்த காளிதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
சிறப்புரையாற்றிய பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவர் திரு.வீ.சின்னராஜூ பி.பி.என் அவர்கள், தோட்டப்புற பள்ளியாக இருந்தாலும் கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் புரட்டிப்பார்த்தால் அதன் வரலாற்றுப்பூர்வ சாதனைகள் பாராட்டக்குரியது.
எனவே, அதனைத் தக்க வைத்துக் கொள்ள அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகளைத் தற்போது கண்கூடாகக் காணமுடிகிறது. எனவே, தமிழ்ப்பள்ளிப் பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சு.முருகன் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
கட்டித்தோட்டத் தமிழ்ப்பள்ளி பன்மைவகுப்புப் பள்ளியாக இருந்தாலும் அப்பள்ளியின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிகப் பிரமாண்டமாகவே ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதற்கேற்றார் போல மாணவர்களின் அடைவுநிலையும் மிகச் சிறப்பாகவே உள்ளது. இப்பள்ளி நிகழ்வுகளுக்குக் குறிப்பாக இந்த விளையாட்டுப் போட்டிக்குப் பள்ளி மேலாளர் வாரியக் குழுத்தலைவர் திரு.வீ.சின்னராஜூ, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சு.முருகன், சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் இளந்தொழிலதிபர் திரு.காளிதாஸ் மற்றும் அவரது துணைவியார் திருமதி மகேஸ்வரி, ஒவ்வொரு வருடமும் பள்ளி விளையாட்டுச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கும் திரு. சுரேஸ், திரு.பார்த்திபன், திரு. கலையரசன் மற்றும் இதர நன்கொடையாளர்கள் அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாக பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சிவகாமி வைத்திலிங்கம் அவர்கள் கூறினார்.



