
மித்ரா ஆதரவில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பட்டறை
ஈப்போ, ஆக.25- இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியை உயர்கல்வி நிலையங்களில் முடிவுற்றவுடன், பின் பணி செய்வதற்கு சென்று விடுவா். அதன் பின், தலைமைத்துவம் மற்றும் சமூக விழிப்புணர்வு இல்லாமல் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமக்கும் தம்மை சார்ந்தவர்களுக்கும் பிரச்சினையாக இருந்து வருகின்றனர்.

இத்தகைய பண்புநலன் கேடு விளைவிக்கும் என்பதால் இப்பொழுதே இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் அணி உருவாக்கம் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு இப்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக இந்த பயிற்சிப் பட்டறையின் தலைமை விரிவுரைஞர் மலேசிய தமிழ் நெறியுரைஞர் அமைப்பு தலைவர் டாக்டர் மு. இந்திரன் கூறினார்.
இந்த பயிற்சிப் பட்டறை மித்ரா ஆதரவில் ஈப்போ இந்திய
சமூக நல கலை கலாச்சார பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மலேசிய தமிழ் நெறிவுரைஞர் அமைப்பின் விரிவுரைஞர்கள் மாணவர்களுக்கு உதவினர். அத்துடன் மலாயா பல்கலைக்கழக விரிவுரைஞர் ரமேஷ் வருகையளித்து மாணவர்களுக்கு போதனைகள் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இன்றைய மாணவர்கள் அவர்களின் எதிர்கால நோக்கம் மற்றும் திட்டங்கள் எவ்வாறு வரையறுக்கப்பட வேண்டும் என்ற அணுகுமுறைகளும் சொல்லிதரப்பட்டன. பள்ளிப்பாடங்களை தவிர்த்து பொது அறிவு மற்றும் இன்றைய காலக்கட்டத்தின் அணுகுமுறைகள் பற்றி மாணவர்க்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுக்கோப்புடன் செயல்படுத்தவும், அதன் வாயிலாக அதிக நன்மைகள் காலபோக்கில் கிடைக்கப்பெற முடியும் என்ற நம்பிக்கையும் மாணவர்களிடையே விதைக்கப்பட்டது. இந்நிகழ்வில், தலைமை மாணவி சைலா நாயர் கடந்த மூன்று நாட்களாக தாம் பயின்ற கல்வி, கிடைக்கப்பெற்ற விழிப்புணர்வு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரின் உரையின் வாயிலாக, மாணவர்களின் மேம்பாட்டை காண முடிந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வின், நிறைவுவிழாவில் இப்பயிற்சிப் பட்டறையில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீபுத்ரி இடைநிலைப்பள்ளி துணைதலைமையாசிரியர் நற்சான்றிதழ் எடுத்து வழங்கினார். அவருடன் ஏற்பாட்டுக்குழு தலைவரும் இயக்கத்தின் தலைவருமான பி.பாலையாவும் சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.
கிந்தா சமூக நல விளையாட்டு இயக்க தலைவர் பா. யுவராஜனும் கலந்து சிறப்பித்தார்.



