
அரசாங்கம் வழிப்பாட்டு தலங்கள் தொடர்பான விவகாரத்தை நியாயமாகக் நேர்த்தியாகவும் கையாளும்! ஒற்றுமை துறை துணையமைச்சர் ஆர்.யுனேஸ்வரன் உறுதி
பெட்டாலிங் ஜெயா,பிப்.9- நாட்டில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதில் மடானி அரசாங்கம் நியாயமாகவும் நேர்த்தியாகவும் நடுநிலையான அணுகுமுறைகளையும் கையாளும் என்று தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் ராமராஜ் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை மிகவும் அணுக்கமாக கையாளும் நோக்கத்தில் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும் அதேவேளையில் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களுக்குக் கால அவகாசம் வழங்கும் என்று தேசம் டிவிக்கு வழங்கிய ஒரு அறிக்கையில் யுனேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இந்த ஆலய விவகாரம் தொடர்பில் திடீர நடவடிக்கைகள் எடுத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் ஒரு சிலரின் நடவடிக்கையை அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து நடவடிக்கள் மேற்கொள்ளும் என்று யுனேஸ்வரன் திட்டவட்டமாகக் கூறினார். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் ஆலயங்கள் அமைந்திருக்கும் நிலம் தொடர்பான விவகாரங்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஒரே சட்டத்திற்கும் வழிகாட்டுதல்களுக்கும் உட்பட்டவை என்று சொன்னார். வழிபாட்டுத் தலங்கள் பிரச்சனைகளுக்கு கலந்துரையாடல் மற்றும் உரிய நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர மோதல் மூலம் அல்ல என்று யுனேஸ்வரன் தெளிவுபடுத்தினார். மலேசியா புரிதுணர்வு, மரியாதை மற்றும் ஒற்றுமையின் கீழ் செயல்படும் ஒரு நாடு. நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பிரிவினை இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று யுனேஸ்வரன் தெரிவித்தார். நாட்டின் நலனுக்காகத் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை முழுத் திறனுடன் நிறைவேற்றுவேன். நீதி, இன ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளின் தாம் உறுதியாக இருப்பதாக யுனேஸ்வரன் தெளிவுபடுத்தினார். நாட்டில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைக்கு உதவத் தயார் என வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறியதை யுனேஸ்வரன் வரவேற்றார். வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான சிக்கலுக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு நிரந்த தீர்வு காணும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக யுனேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்தில் முறையான நிலம், அதற்கான ஆவணங்கள் மற்றும் அனுமதி கிடைத்த பின்னரே வழிப்பாட்டுத் தலங்களை அமைக்க வேண்டும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் குறிப்பிட்டுள்ளார்.