
“மதவாதத்திற்கு இடமில்லை; அத்துமீறினால் கடும் நடவடிக்கை!” -தேசிய ஒற்றுமை துணையமைச்சர் YB யுனேஸ்வரன் எச்சரிக்கை
கோலாலம்பூர்,பிப்.5- மதத்தை ஒருபோதும் விளையாட்டாக்கவும் அரசியலாக்கவும் கூடாது. மலேசிய குடிமக்களிடையே வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டும் ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் கூடாது என்று தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் YB யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார். மலேசியக் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும் தத்தம் மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு. இந்நிலையில் வேண்டுமென்றே, தூண்டுதல் அல்லது தீய நோக்கம் கொண்டு மத உணர்வுகளைச் சீண்டுவது பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயலாகும் என்று யுனேஸ்வரன் தெரிவித்தார். மலேசியா சட்டத்தின் அடிப்படையிலான ஓர் இறையாண்மை கொண்ட நாடு. இங்கு ஒவ்வொரு மதமும் மதிக்கப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதச் சடங்குகள் தொடர்பான விஷயங்கள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளால் தெளிவாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. மதம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் சட்டப்பூர்வமான மற்றும் விவேகமான வழிகளிலேயே கொண்டு செல்லப்பட வேண்டும்; மாறாக, மக்களிடையே கோபம், வெறுப்பு அல்லது பிரிவினையைத் தூண்டும் வகையில் அவை சூழ்ச்சியாகக் கையாளப்படக் கூடாது. எனவே, மதத்தின் பெயரால் சொந்தமாக முடிவெடுக்கவோ, தீவிரமான அறிக்கைகளை வெளியிடவோ அல்லது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டவோ எவருக்கும் உரிமை இல்லை என்று யுனேஸ்வரன் சொன்னார். வேண்டுமென்றே மத உணர்வுகளைத் தூண்டி, தேசிய நல்லிணக்கத்தைக் குலைக்க முயலும் சில தரப்பினரின் செயல்பாடுகளை நான் கடுமையாகக் கருதுகிறேன். இன மற்றும் மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த மதத்தைப் பயன்படுத்துவது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்குச் செய்யும் ஒரு துரோகமாகும். எனவே, குடிமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவோர், மத ரீதியான தூண்டுதல்களைப் பரப்புவோர், இனங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுவோர் அல்லது நாட்டின் சட்ட இறையாண்மைக்குச் சவால் விடுவோர் எவராயினும், அவர்கள் மீது காவல் துறை (PDRM) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தொடர் எச்சரிக்கைகள் ஏதுமில்லை. எவ்விதச் சலுகையும் கிடையாது. எவ்விதச் சமரசமும் இல்லை. அந்தஸ்து, பின்னணி அல்லது சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், சட்டத்தை மீறுபவர்கள் எவராயினும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, மிகக் கடுமையான சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுனேஸ்வரன் எச்சரிக்கை விடுத்தார். நாட்டின் அமைதியும் ஒற்றுமையும் விளையாட்டாகச் சோதித்துப் பார்க்கும் விஷயமல்ல என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன். குறுகிய நலன்களுக்காகவோ அல்லது மறைமுகத் திட்டங்களுக்காகவோ, நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க எந்தத் தரப்பினரையும் நாம் அனுமதிக்க முடியாது. மதம் என்பது மனிதநேயத்தையும் பாதுகாப்பையும் வளர்ப்பதற்கே தவிர, வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டுவதற்கு அல்ல. தேசிய ஒருமைப்பாடு என்பது எவரும் அத்துமீறக் கூடாத ஓர் எல்லை ஆகும். ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்று ஒற்றுமை துணையமைச்சர் YB யுனேஸ்வரன் ஒரு அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



