Malaysia

நாட்டில் மருத்துவம் படித்து முடித்து விட்டு வேலைக்கு அமர்த்தப்படாமல் இருக்கும் மருத்துவர்களை விரைந்து பணிக்கு அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் ம.இ.கா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் வலியுறுத்தியுள்ளார்.

நாடு தழுவிய நிலையில் இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மருத்துவ படிப்பை முடித்த நிலையில் இன்னும் பணிக்கு அமர்த்தப்படாமல் இருக்கும் மருத்துவர்களை விரைந்து பணிக்கு அமர்த்த வேண்டும் என்று சுகாதார அமைச்சரின் அரசியல் செயலாளர் துவான் ஹாஜி முகமட் ஃபைசாலை சந்தித்த போது டத்தோ சங்கர் ஐயங்கார் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

மருத்துவம் படித்து முடித்துள்ள மருத்துவர்களை பணிக்கு அமர்த்த 8 முதல் ஓராண்டு காலம் வரை பிடிக்கிறது. இதனை சுகாதார அமைச்சு கவனிக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முகமட் ஃபைசாலிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சிலாங்கூர் ம.இ.கா தொடர்புகுழுத் தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார் தலைமையில் சிலாங்கூர் ம.இ.கா பொறுப்பாளர்கள் துவான் ஹாஜி முகமட் ஃபைசாலை சந்தித்தனர். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதில் குறிப்பாக 22 அரசாங்க மருத்துவமனைகளில் சிலாங்கூர் ம.இ.கா சார்பில் வாரிய உறுப்பினர்களை நியமிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் 80க்கும் மேற்பட்ட அரசாங்க கிளினிக்குகளில் சிலாங்கூர் ம.இ.கா சார்பில் வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் டத்தோ சங்கர் ஐயங்கார் கேட்டுக் கொண்டார்.

இது மட்டுமன்றி இருதய அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சைக்கான காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று முகமட் ஃபைசாலிடம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் குறைவாக இருப்பதால் மருத்துவர்களை அதிகரிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக டத்தோ சங்கர் ஐயங்கார் கூறினார்.

சுகாதார அமைச்சரின் அரசியல் செயலாளருடனான இந்த சிறப்பு சந்திப்பில் சிலாங்கூர் ம.இ.கா துணைத்தலைவர் ஸ்ரீதரன் ரெங்கநாதன், செயலாளர் சசிதரன், துணைச்செயலாளர் ராஜமோகனன், பொருளாளர் டத்தோ எஸ்.பி.சிவம் மற்றும் தகவல் பிரிவு தலைவர் பன்னீர்செல்வம் பழனியாண்டி ஆகியோர் கலந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button