
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித் திட்டம் தொடர்பான விசாரணை தொடர்கிறது!!! மலேசியக் காவல்துறைத் தலைவர் ஐ.ஜி.பி டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் காலிட் அறிக்கை
கோலாலம்பூர்,பிப்.28- மலேசிய அரசக் காவல்துறை (PDRM), தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் சதித் திட்டம் குறித்துப் பெறப்பட்ட புகாரை மலேசியக் காவல்துறைத் தலைவர் ஐ.ஜி.பி டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் காலிட் உறுதிப்படுத்தியுள்ளார். உள்ளூர் செல்வாக்குமிக்க ஒரு நபர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் இயங்கும் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு (D5) இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. குற்றவியல் சட்டத்தின் பிரிவு 124B-இன் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. அதாவது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான சட்டமாகும். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. விசாரணை தற்போது தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் நீதித்துறை கொள்கைகளுக்கு மதிப்பளித்து, காவல்துறை தனது விசாரணையைப் பூர்த்தி செய்யும் வரை பொதுமக்கள் இந்த வழக்கு குறித்து எந்தவிதமான வீண் ஊகங்களையும் (Speculations) பரப்ப வேண்டாம் என்று ஐ.ஜி.பி டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் காலிட் அறிவுறுத்தியுள்ளார்.



