
உலக மலேசிய மனிதநேய இயக்கத் தலைவர் கமலநாதன் முயற்சியில் சிவகங்கை சிலம்பரசன் மருத்துவ கட்டணம் வெ.15 ஆயிரம் ரத்து
கோலாலம்பூர், ஜன.6-
காஜாங் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந்த தமிழ்நாடு, சிவகங்கையை சேர்ந்த சிலம்பரசன் பிரேதம் உலக மலேசிய மனிதநேய இயக்கத் தலைவர் கமலநாதன் முயற்சியில் செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8ஆம் தேதி சிவகங்கை, குறத்தி எனும் ஊரைச் சேர்ந்த சிலம்பரசன் வயிற்று வலி காரணமாக காஜாங் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு சில தினங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்ததாக கமலநாதன் தேசம் டிவியிடம் தெரிவித்தார்.
சிலம்பரசன் குடும்பம் கூலி வேலை செய்து அன்றாடம் காட்சியாக பிழைப்பு நடத்தி வருவதால் பணப்பிரச்சினை காரணமாக உடலை மலேசியாவிலேயே தகனம் செய்துவிடும்படி கூறி விட்டனர். இந்நிலையில் காஜாங் மருத்துவமனை நிர்வாகம் 15 ஆயிரத்து 266 வெள்ளி மருத்துவ கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே உடலை வழங்க முடியும் என்று திட்டவட்டமாக கூறி விட்டதாக கமலநாதன் சொன்னார்.
இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய சுகாதார அமைச்சகத்தை அணுகிய கமலநாதன் விவரங்களை சொல்லி உதவும்படி கேட்டதற்கு இணங்க சுதாதார அமைச்சும் அந்த 15 ஆயிரத்து 266 வெள்ளியை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து சிலம்பரசன் உடல் செராஸ் மின்சுடலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது. அதன் பிறகு அஸ்தி ரவாங் டெம்பளர் பார்க் அருவிக்கரையில் கரைக்கப்பட்டதாக கமலநாதன் கூறினார்.
மலேசிய உலக மனிதநேய இயக்கத்தின் சார்பில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்திய தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக கமலநாதன் தலைமையில் செயல்படும் மலேசிய உலக மனிதநேய இயக்கம் இந்திய தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



