
பிரதமர் அன்வாரும் போலந்து அதிபரும் இருதரப்பு பேச்சுவார்த்தை
கோலாலம்பூர், ஜூன் 11
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ஆகிய இருவரும் இருதரப்பு சந்திப்பு மற்றும் மூடிய அறை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு சுமூகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை முழுமையாக மதிப்பிடவும், உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் உதவும் என அன்வார் தெரிவித்தார்.

“தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானது. குறிப்பாக மலேசியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், உலக அளவில் மூலோபாயப் பங்கை வகிக்கும் போலந்து போன்ற நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச ஒத்துழைப்பு வலையமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு இது அவசியமாகிறது,” என்று அன்வார் தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு துறைகளில் ஆழமான ஆய்வு
இந்தச் சந்திப்பில், பாதுகாப்புத் துறை உட்பட பல துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆழமாக ஆராயப்பட்டதாகப் பிரதமர் அன்வார் சொன்னார்.
“உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உள்ள வாய்ப்புகளையும் நாங்கள் விவாதித்தோம்,” என்று அன்வார் கூறினார்.
தொழில்நுட்பப் பகிர்வு, ஹலால் துறை ஒத்துழைப்பு
அதேபோல், விவசாயப் பொருட்களின் துறையில் தொழில்நுட்பப் பகிர்வு குறித்து இரு தரப்பினரும் பேசினர். இது உணவு மற்றும் விவசாயத் துறைகளின் நிலைத்தன்மைக்கு, குறிப்பாக காலநிலைப் மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்வதற்குப் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.
“எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்,” என்று அன்வார் தெரிவித்தார்.
கூடுதலாக, ஐரோப்பாவில் வளர்ந்து வரும் மற்றும் அதிக தேவை உள்ள ஹலால் துறையில் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது. போலந்து ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



