
டத்தோ நெல்சன் பகாங் மாநில ம.இ.கா நோக்கி சூறாவளிப் பயணம்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
பெந்தோங், ஜூன் 5-
மஇகா தேசிய உதவித் தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நாடு முழுமையுமுள்ள தொகுதி – கிளைத் தலைவர்களுடான சிறப்பு சந்திப்புக்களும் சங்கிலித் தொடராக நடைபெற்று வருகின்றன.
அப்பொறுப்புக்குப் போட்டியிடக்கூடும் என கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ள மேலவை உறுப்பினர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், இன்று மாலையில் மஇகா பகாங் மாநிலத் தலைவர்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடினார்.

மஇகா லிப்பிஸ் தொகுதியைச் சேர்ந்த கிளைத் தலைவர்களை அம்மாவட்டத்திலுள்ள ஓர் உணவகத்தில் அவர் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, பெந்தோங் பட்டணத்திலுள்ள கோல்டன் கோர்ட் உணவகத்தில் மஇகா ரவுப், பெந்தோங், மெந்தகாப், தெமர்லோ, பெரா ஆகியத் தொகுதிகளின் கிளைத் தலைவர்களை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சியின் இலக்குகள்
குறித்து அவர் விவரித்தார்.
கட்சிக்கும் இந்திய சமுதாயத்துக்கும், தாம் இன்னும் பல ஆக்கப்பூர்வமானச் சேவைகளை ஆற்றுவதற்கான வாய்ப்பு தமக்கு கனிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசியத் தலைவரின் ஆசியோடு களம் காண்கின்ற டத்தோ நெல்சனுக்கு, மஇகா பகாங் மாநிலம் முழு ஆதரவு அளிக்கும் என மாநிலத் தலைவரும் சபாய் சட்டமன்ற உறுப்பினருமான வீ.ஆறுமுகம், ரவுப் தொகுதித் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன், பெந்தோங் தொகுதித் தலைவர் டாக்டர் ஜெயந்திரன் ஜெயராமன் உட்பட பெரும்பான்மை கிளைத் தலைவர்களும் இணைந்து உறுதி அளித்தனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஆர்.டி.ராஜா, மத்திய செயலவை உறுப்பினர்கள் சிவசுப்பிரமணியம், டத்தோ ந.முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



