Malaysia

மகத்தான மலேசிய சாதனை பதிவேட்டில் இடம் பெறும் சாதனையாளருக்கு விருதளிப்பு விழா

மஞ்சோங், ஜுன் 21-
சுமார் மூன்று மாதங்களாக அபார சிந்தனை பயிற்சிகளை இவ்வட்டார மாணவர்கள் மேற்கொண்டனர். அவர்களின் கடுமையான பயிற்சி மற்றும் உழைப்பால், அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கை இம்மாணவர்கள் சிறப்பாக அடைந்து விட்டனர். அதன் அடிப்படையில் அவர்களை கெளரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாதனையாளர் மனம் அகடாமி நிறுவனரும், ஏற்பாட்டுக்குழு தலைவருமான மாஸ்டர் அழகன் கூறினார்.

இந்த சாகசம் வாயிலாக இம்மாணவர்கள் மலேசிய சாதனை பதிவேட்டில் இடம் பெறுவார்கள். அத்துடன், இந்த மாணவர்கள் கற்றல் திறனில் அபரீத வளர்ச்சியை காண முடியும். இந்த திறன்பட கற்றல் பயிற்சியால் இம்மாணவர்கள் புத்திசாலி மாணவர்களாக திகழ்வார்கள். இவர்கள் கல்வியை தவிர்த்து விளையாட்டுத்துறை மற்றும் தொழி்கல்வி, மனிதநேய பண்பு கூறுகள் கொண்ட மாணவர்களாக அவர்கள் திகழ முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்த மாணவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள பெற்றோர்கள் முழுமையான ஆதரவை வழங்கி வந்தனர். குறிப்பாக, இம்மாணவர்கள் வீட்டில் பயிற்சியை மேற்கொள்வதற்கு அனைத்து ஒத்துழைப்பும், உதவிகளும் வழங்கினார்கள். பெற்றோர்களின் அர்பணிப்பால் இன்று அவர்களின் பிள்ளைகள் சாதனையாளர்களாக உருமாற்றம் பெற்றுள்ளனர். பெற்றோர்கள் அனைவருக்கும் அவர் தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த அபார மூளை பயிற்சிகள் நாடு முழுவதுமுள்ள இந்திய மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் உள்ளது. அதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சியின் வாயிலாக மாணவர்கள் நல்வழிபடுத்தி ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ள பேருதவியாக அமையும். இதனால் தீயவழிகளுக்கு செல்லாமல் இருக்க அவர்களை காப்பாற்ற முடியும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கு மற்றும் அடைவுநிலை குறித்து மலேசிய சாதனையாளர் பதிவேட்டில் இடம்பெற மாணவர்களின் சாகசத்தை நேரில் கண்டு பதிவிட்டுள்ளதாக அதன் இயக்கு நர் முனைவர் டத்தோ சந்திரசேகரன் சுப்பிரமணியம் கூறினார்.

மாணவர்கள் தங்கள் இலக்கை மிக குறைந்த நேரத்தில் அடையும் நிலைப்பாட்டை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, கண்ணைக்கட்டிக் கொண்டு 20 காய்கறிகளின் பெயர்களை 12 வினாடிகளில் ஒரு மாணவி கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சி மஞ்சோங் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற டத்தோ புவனேஸ்வரன் உதவினார். புண்ணிமாஸ் மண்டப உரிமையாளர் இம்மண்டபத்தை இலவசமாக வழங்கினார்.

அத்துடன், வருகையாளர்களுக்கு உணவு வழங்கினார். அவருடன் சித்தியவான் சித்தர் குடில் நிறுவனர் ஆசிரியர் எஸ்.கிருஷ்ணன், மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்ற தலைவர் பி.பி.பாண்டியன், பேராக் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பள்ளி பாலர்பள்ளி இயக்குநர் மு.அர்ஜணன், பேராக் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்ற பிரதிநிதி ஆந்திராகாந்தி, பேராக் மற்றும் மஞ்சோங் இந்து சங்கத்தினர் , தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாஸ்டர் அழகன் தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button