Malaysia

புத்தரின் போதனைகளை பின்பற்றுவோம் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் விசாகதின வாழ்த்து

கோலாலம்பூர், மே 22-

அரச வாழ்க்கையைத் துறந்து, துறவி வாழ்க்கையை ஏற்ற புத்தர் இந்த உலகிற்கு விட்டுச் சென்ற போதனைகள் எண்ணிலடங்காதவை என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.

அமைதியான, அன்பான வாழ்கையை வாழக் கற்றுத் தந்தவர். புத்தர் பிறந்த, ஞானம் பெற்ற, மறைந்த தினங்களின் பிரதிபலிப்பாக உலகில் உள்ள அனைத்து புத்த மதத்தவர்களாலும், புத்தரின் இரசிகர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் விசாகதினத்தில் டத்தோஸ்ரீ சரவணன் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ஆசை இல்லாமல் இருப்பதே இன்ப நிலை என்பதை உலகிற்கு எடுத்துக் கூறியவர் மட்டுமல்ல வாழ்ந்து காட்டியவர். உண்மையான ஞானத்தை தேடி, தான் பெற்ற ஞானத்தை உலகிற்கும் போதித்த மகான் புத்தர்.
அன்பு, அகிம்சை, அமைதி, சமாதானம் ஆகியவற்றை உலகிற்குப் போதித்தவர் கெளதம புத்தர்.

புத்தர் இந்த உலகத்திற்கு விட்டுச் சென்ற போதனைகளில் குறிப்பிடத்தக்கது, நிகழ் காலத்தை வாழ் என்பதே. கடந்த காலம், எதிர் காலம் என்று வீணடிக்காமல் இருக்கும் காலத்தை வாழக் கற்றுத் தந்தார். நீ எதை சிந்தனை செய்கிறாயோ அதுவாகவே மாறுவாய் என்கிறார். எனவேதான் நாமும், நம்மைச் சுற்றியும் எப்போதும் நல்ல சிந்தனைகளும், செயல்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பல்லின சமூகத்தில் வாழும் நாம் இனம், மதம், கலாச்சாரம் என்று பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வந்தாலும், இது போன்ற கொண்டாட்டங்களின் போது இனங்களுக்கிடையே புரிந்துணர்வை நிலைநிறுத்தி ஒற்றுமையாகக் கொண்டாடி வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே மலேசியர்களின் தனித்துவம்.

மீண்டும் விசாக தின நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் நல்ல சிந்தனைகளை விதைத்து, நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்போம்.

விவேகமாகச் சிந்திப்போம்!

வெற்றிநடை போடுவோம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தமது விசாக தின வாழ்த்துச் செய்தியில் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button