Malaysia

மஇகா ரவுப் தொகுதித் தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன், ஆனந்தசெல்வம் அணி வெற்றி

ரவுப், மே 22-

மஇகா ரவுப் தொகுதித் தேர்தலில் நடப்புத் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் – ஆ.ஆனந்தசெல்வம் அணியினர் மகத்தான வெற்றி பெற்றர்.

மஇகா ரவுப் தொகுதித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 4 பேராளர்களுக்கான தேர்தல் ஞாயிறன்று ரவுப் அம்பலவாணர் மண்டபத்தில் நடைபெற்றது.

பலத்த பரபரப்புக்கு இடையில் நடைபெற்ற இத்தேர்தலில், தொகுதியின் நடப்புத் தலைவர் டத்தோ க.தமிழ்செல்வன், 10 வாக்குகள் பெற்று தனது வெற்றியை தக்க வைத்துக் கொண்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ந.மருதவேலு 4 வாக்குகள் பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தாமான் கெனாங்கா கிளைத் தலைவர் ஆ.ஆனந்தசெல்வம், 10 வாக்குகளில் வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வே.இராமசாமிக்கு 4 வாக்குகள் கிடைத்தன.

4 பேராளர்களுக்கு அறுவர் போட்டியிட்டனர். இதில் டத்தோ தமிழ்ச்செல்வன் அணியைச் சேர்ந்த எல்.அபுராம் 12 வாக்குகளும், யோ.அசோக்குமார், ஜி.நவிந்தராஜ், ஐ.சண்முகநாதன் ஆகியோர் தலா 10 வாக்குகள் பெற்று ரவுப் தொகுதி காங்கிரஸ் பேராளர்களாகத் தேர்வுப் பெற்றனர்.

தேர்தலை மிக நேர்த்தியாக வழி நடத்திய மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா, வெற்றிப் பெற்ற அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தேர்தலில் வெற்றித் தோல்வி சகஜம். வெற்றிப் பெற்ற அணியினர் தோல்வியுற்ற அணியினரை அரவணைத்துக் கொண்டு கட்சிப் பணிகளிலும், மக்கள் சேவையிலும் வழக்கம் போல மும்முரம் காட்ட வேண்டும் என டத்தோ முருகையா வலியுறுத்தினார்.

முன்னதாக, மஇகா ரவுப் தொகுதி காங்கிரசின் 29ஆம் ஆண்டு பேராளர் கூட்டத்திற்கு தலைமையேற்று அவர் சிறப்புரையாற்றினார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி மிகவும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருவதாகவும், கட்சிக்குப் பிரம்மாண்ட தலைமையகக் கட்டடமும், வர்த்தக நோக்கு கொண்ட வானுயர் கட்டடங்களும் அடுத்தடுத்த ஆண்டுகள் கட்டப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

டான்ஸ்ரீயின் கனவுத் திட்டம் நிறைவேறுகையில் கட்சி மீதான நம் மக்களின் எண்ணங்களும் மாறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இந்திய மக்களுக்கான கட்சியின் சேவைகளை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், தொகுதியில் இன்னும் கூடுதல் கிளைகளை அமைத்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், மஇகா ரவுப் தொகுதித் தலைவராக வாகைச் சூடிய டத்தோ தமிழ்ச்செல்வன், தன்னை தேர்ந்தெடுத்த கிளைத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வட்டார மக்களின் நலனுக்காகவும் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் தாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி உழைக்கவிருப்பதாக அவர் உறுதியளித்தார்.

தொகுதியில் இளைஞர்களுக்கு தாம் அதிக வாய்ப்புகள் கொடுத்திருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் தமது புது அணியினரோடு கட்சியின் தேசியத் தலைவரை சந்திக்கவிருப்பதாகவும் டத்தோ க.தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button