Malaysia

பேராக்கில் இவ்வாண்டில் இதுவரை 9 நபர்கள் டிங்கி காய்ச்சலால் மரணமுற்றனர்

ஈப்போ, ஜுலை 31- பாரிட் புந்தார் மருத்துவமனை என்ற பெயர் நிலைநிறுத்தப்படும். இவ்விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் புதிய கட்டுமானப்பணிகளுடன் உருவாகி வரும் பாரிட் புந்தார் மருத்துவமனை பாகான் செராய் மருத்துவமனை என்ற பெயரிடப்படாது. அது பாரிட் புந்தார் மருத்துவமனையாக செயல்படும் என்று பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

கடந்த 2.1.2018 ல் தொடங்கப்பட்ட இந்த புதிய மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 2020 ல் முடிந்திருக்க வேண்டும். ஆனால், குத்துகையாளர் கேட்டதிற்கிணங்க அடுத்தாண்டு ஜனவரியில் இம்மருத்துவமனை பேராக் மாநில அரசாங்கத்திடம் வழங்கப்பட வேண்டும். இம்மருத்துவமனை 15 ஏக்கர் நிலப்பரப்பில் 76 மருத்துவமனை கட்டில்கள் பொருத்தும் அளவில் 137 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரிக்காத்தான் நேசனல் ஆட்சிக் காலத்தில் இந்த மருத்துவமனை பாகான் செராய் மருத்துவமனை என்ற பெயரிட ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த பெயர் மாற்றத்திற்கு அங்குள்ள மக்களும் , மருத்ணுவமனை இயக்குநரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்விவகாரம் பேராக் ஆட்சிக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட பின் இம்மருத்துவமனை பாரிட் புந்தார் மருத்துவமனை என்ற பெயரில் செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது மழை இல்லையென்பதால் அதிகமான வெப்பத்தை பொதுமக்கள் சந்திக்க வேண்டிய நிலைப்பாடு உருவாகி வருகிறது. குறிப்பாக, 36 முதல் 37 டிகிரி வரை வெப்பம் உருவாகி வருகிறது. இதுவரை இந்த அதிக வெப்பத்தால் 12 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இராணுவ வீரர்களும் போலீஸ்கார ர்களும் உட்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அதிக வெப்ப சூழ்நிலை பல பாதிப்புகளை கொண்டு வரலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

தற்போது கிடைக்கப்பெற்ற புதிய தகவலின் அடிப்படையில் இந்த வெப்பத்தால் 17 வயது பள்ளி மாணவனும், சாலை பராமரிப்பு தொழிலாளர் ஒருவரும் பாதித்துள்ளனர். வரும் செப்டம்பர் மாத இறுதி வரை சாலை பராமரிப்பு தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இரவில் செய்தால் இத்தகைய பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

பேராக் மாநிலத்தில் ஜனவரி முதல் இன்று வரை 9 நபர்கள் டிங்கி காய்ச்சலால் இறந்து விட்டனர். ஆனால், கடந்தாண்டு ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். இம்முறை கிந்தா மாவட்டத்தில் எழுவர், லாருட் மாத்தங்கில் ஒருவர் மற்றும் மஞ்சோங் மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். கடந்தாண்டில் 1995 நபர்கள் டிங்கி காய்ச்சலுக்கு ஆளாகினார்கள். ஆனால், இவ்வாண்டு ஜுலை மாத இறுதி வரை 5058 நபர்கள் டிங்கி காய்ச்சலுக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடமைப்பு பகுதிகளும் இந்த ஏடிஸ் கொசுவின் பாதிப்பிற்கு ஆளாகிவிட்டனர் என்று அவர் எச்சரித்தார்.

இவ்விவகாரத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. தங்கள் வீட்டுச் சுற்றுப்புறத்தை துப்பரவு செய்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், சுகாதார இலாகா மற்றும் ஊராட்சிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி உதவும்படி அ.சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button