Malaysia

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா மக்கள் சேவை மையமாக உருமாற்றம். வடகிந்தாவின் 14 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி

ஈப்போ, ஜுன். 24:

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் புதிய நிர்வாகத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடகிந்தா மாவட்டத்திற்குட்பட்ட 14 தமிழ்ப்பள்ளிகளுக்கும், 4 இயக்கங்களுக்கும் நிதியுதவி வழங்கிய தேவஸ்தான நிர் வாகத்தை பாராட்டினார் பேராக் மாநில மனிதவளம், ஒற்றுமை, சுகாதாரம் மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன்.

இந்த பள்ளிகளுக்கு தலா 1000 ரிங்கிட் மற்றும் இயக்கங்களுக்கு 500 ரிங்கிட் வழங்கப்பட்டது. ஆலயங்கள் பொதுமக்களின் சேவை மையமாக திகழ வேண்டும். இம்மாதிரியான மனிதநேய சேவைகளை அனைத்து ஆலய நிர்வாகத்தினர் செயல்படுத்தினால், நம் சமூகத்தினர் அதிகமான நன்மைகளை பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் கவிஞர் வைரமுத்து இந்து சமயத்தை பற்றி இழிவாக பேசினார். அவரின் கூற்றுக்கு எந்தவொரு இந்திய அரசியல் தலைவரும் இந்நாட்டில் அவரை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் பதிவு செய்யவில்லை. ஆனால், நான் மட்டுமே எதிர்ப்பை தமிழ் மலர் பத்திரிக்கையின் வாயிலாக வெளியிட்டேன் என்று சிவநேசன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில்தான், கவிஞர் வைரமுத்து மலேசியாவிற்கு வரக்கூடாது என்று தம் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள் இவ்விவகாரத்தில் கருத்துரைக்க முன்வரவில்லை. காரணம் அவர்கள் யாருக்கும் தைரியமில்லை. இந்து சமயத்தை இழிவுப்படுத்தியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்தாண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழ்நாட்டு அரசியல்வாதி திருமாவளவன் இந்து சமயத்தை மிகவும் இழிவாக பேசினார். அவ்வேளையில் அந்த மண்டபத்தில் மலேசிய இந்து சங்கத்தின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர்கூட வாயை திறக்கவில்லை என்று அவர் வருத்தமாக சொன்னார்.

இந்நாட்டில் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் உருவான வரலாறு இருக்கிறது. இந்த பள்ளிகளை உருவாக்கிய வரலாற்றை சற்று ஆய்வு செய்வது பள்ளி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். இந்த பள்ளிகளை உருவாக்கிய தலைவர்களின் பெயர்களை அப்பள்ளியின் வகுப்பறை மற்றும் தனிப்பட்ட அறைகளுக்கு சூட்டலாம். அவ்வாறு செய்வது சிறந்த பண்பாகும் என்று அ.சிவநேசன் கருத்துரைத்தார்.

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் சீதா இராமன் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button