
வசதிகள் குறைந்த கிராமத்தில் சவால்களை எதிர்நோக்கும் கெடியிருப்பாளர்கள்
ஈப்போ, ஜுன். 23-
மெங்களம்பு பகுதியில் கம்போங் பாரு பத்து என்ற கிராமத்தில் சாலையின்றி மக்கள் கடந்த 6 வருடங்களாக அவதிபட்டு வருகின்றனர்.
அத்துடன் தண்ணீர் விநியோகமும் முறையாக செயல்படவில்லை. இந்த காலகட்டத்திலும் ஒரு மாநகரின் மத்தியில் வசதிகள் குன்றிய அடிப்படை பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் இது ஒரு புறம்போக்கு குடியிருப்பு பகுதியாகும். கடந்த 2018 ல் இப்பகுதியில் மாநில அரசாங்கம் 80 வீட்டுமனைகளை உருவாக்கி நிரந்திர கிராமமாக உருவாக்கியது என்று இங்குள்ள குடியிருப்பாளர் பி.பாலா ( வயது 65) கூறினார்.

அதோடு தற்போது இங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. அதனால் தண்ணீர் மீட்டர் 6000 ரிங்கிட் செலவில் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு தண்ணீர் மீட்டரை 3 குடும்பத்தினர் பயன்படுத்த வேண்டிய நிலைப்பாடு உருவாகி விட்டது. இதனால் நீர் அழுத்த பிரச்சினைகள் உருவாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இக்கிராமத்திற்கு வந்து போக முறையான சாலை கிடையாது. தார் இல்லாத மணல் சாலை மேடுபள்ளமாக இருப்பதால் போக்குவரத்து பிரச்சினையை இங்குள்ள குடியிருப்பாளர்கள் எதிர்நோக்குவதாக மற்றொரு குடியிருப்பாளரான முகமட் ரொஸ்டி அப்துல் பஹாரி( வயது 53) கூறினார்.
அதுமட்டுமின்றி, இங்குள்ள மக்கள் அனுதினமும் மின்சார வாரியத்தின் சக்தி வாய்ந்த மின்கம்பிகளுக்கு கீழ் கடந்த செல்ல வேண்டிய பதற்றமான நிலைப்பாட்டை எதிர்நோக்கி வருவதாக அவர் வருத்தமாக கூறினார்.
இக்கிராமத்திற்கு சாலை அமைக்கும் பொருட்டு கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ஈப்போ மேயர், மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு வைக்கப்பட்டது. இருப்பினும், இப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்று இங்குள்ள மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.



