
2025 வரவு செலவு திட்டத்தில் இந்திய சமூகத்தின் நலன்கள் தொடர்ந்து காக்கப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி
புத்ரா ஜெயா, செப்.25- இந்நாட்டில் இருக்கும் இந்திய சமூகத்தின் நலன்கள் 2025 வரவு செலவு திட்டத்தின் வழி ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் தொடர்ந்து காக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இந்தியர்களின் நலன் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தினால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை. இந்தியர்களுக்கான கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக முகநூல் பதிவு ஒன்றில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் இருக்கும் அனைத்து இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவமும் காக்கப்படும் எனும் தகவலையும் இந்தியர்களைப் பிரதிநிதிக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் இந்த உறுதியை வழங்கினார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உணவுக்கூடை அன்பளிப்புக்காக சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கெடா, ஜொகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்து மயானம் அல்லது இடுகாடுகள் நிர்மாணிப்பதற்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் நலனை உறுதி செய்யும் வகையில், அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில் அமல்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில திட்டங்கள் தொடரப்படவுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் சொன்னார்.
அரசாங்கம் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கு (MITRA) குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. மேலும், தேசிய தொழில்முனைவோர்களுக்கான பொருளாதார நிதி (TEKUN), அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றின் வழி, இந்திய சமூகத்திற்காக சில நிதிகளையும் ஒதுக்கியிருந்தது.
அந்த வகையில் எதிர்காலத்தில் நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலை தொடர்ந்து உயர்த்தப்படும் என்று தான் நம்புவதாக பிரதமர் கூறினார்.



