
அடித்தாடும் முத்தமிழ் மன்னன் தோள்கொடுக்கும் அடுத்தக்கட்ட தலைவர்கள்
தேசம் செய்திகள் நக்கீரன்
கோலாலம்பூர், அக்.03:
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு இரண்டாவது முறையாகத் தலைமையேற்றுள்ள செ.வே. முத்தமிழ் மன்னனும் அவர்தம் குழுவினரும் மலேசியத் தமிழ் ஊடகத்தில் பணியாற்றும் ஊழியர்தம் நலம்கருதி அடித்தாடும் விதமாக, அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது.
அதற்கேற்றாற்போல, துணைத் தலைவர் தி.காளிதாசன், செயலர் வெற்றிவாணன் விக்டர், உதவித் தலைவர்கள் இ.காளிதாசன், எஸ்.ஜீவராசா, மு. இரவி, துணைச் செயலாளர் ஆர்.குணா உள்ளிட்ட பொறுப்பாளர்களும் அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக மேற்கொள்ளும் நடவடிக்கை கண்டு, மலேசியத் தமிழ்ப் பத்திரிகைத் துறையைச் சேர்ந்த அனைவரும் மெய்சிலிர்த்து நிற்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது, சங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பவளச்செல்வன் மாரிமுத்து, இராமன் குட்டி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கடந்த செப்டம்பர்த் திங்கள் 21-ஆம் நாள், ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்திற்கான புதிய நிருவாகக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த சங்கம் உருவான நேரத்தில், அதற்கான அமைப்புக் கூட்டம் தலைநகரின் பாரம்பரிய அடையாள சின்னங்களுள் ஒன்றான சிலாங்கூர் கிளாப் வளாகத்தில் நடைபெற்றபோது நானும் அதில் கலந்து கொண்டேன்.
அந்த அமைப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்றவர்கள், மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு பொருத்தமில்லாதவர்கள் என்று நான் கருதியதால், இந்தச் சங்கத்தின்பால் அக்கறை கொள்ளாதிருந்தேன். அடுத்த இரு நாட்களில், இந்த சங்கத்தில் உறுப்பியம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை அன்பு இளவல் ப.புவனேசுவரன் கொடுத்து, அதை நிறைவுசெய்து 25 வெள்ளியுடன் திருப்பி ஒப்படைக்கும்படி கேட்டபொழுது, நான் அந்த மட்டில் நின்றுகொண்டேன்.
இந்த சங்கத்தின் நடவடிக்கையும் அதற்கேற்றாற்போலத்தான் இருந்தது. ஆக்கப்பூர்வ சிந்தனையும் செயல்பாடும் இல்லாமல், பண்டிகைக் கால மானியப் பங்கீடு, வருடாந்திர ஒன்றுகூடல் என்ற மட்டில் செயல்பட்டு வந்தது.
இதற்கிடையில் தலைமை மாற்றம் ஏற்பட்டது;
இப்பொழுது, மீண்டும் தலைமை மாற்றம் ஏற்பட்டு, முத்தமிழ் மன்னனே மீண்டும் தலைவராகி உள்ள நிலையில், காலம் தந்த படிப்பினை, இடையில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய நிருவாகம் அகலக்கால் வைத்து, சங்கத்தின் எதிர்காலம் கருதியும் சங்க உறுப்பினர்களின் நிகழ்கால சமூக நலம் கருதியும் பரந்த அளவில் பாடாற்றி வருவது பாராட்டத்தக்கது.
அதன் அடிப்படையில், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பிரதமர் துறையில் உள்ள இந்தியர் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனை நேற்று, அக்டோபர் 2-ஆம் நாள் சந்தித்த முத்தமிழ் மன்னனும் அவர்தம் செயல்மறவர்களும் சங்கத்தின் நிதி நிலைமை, ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் நலம், பணியாளர்களுக்கு சிறப்பு நிதி, உறுப்பினர்களுக்கான சமூக நல உதவி, குடும்ப தின விழா, சிறப்பு மானியம், தீபாவளி விருந்து குறித்தெல்லாம் கலந்துரையாடி, ஆலோசனை செய்ததாக வெளிவந்துள்ள தகவல் மெச்சத்தக்கது; மிகுந்த பாராட்டிற்குரியது.
சங்கத்திற்கு எந்த வகையில் உதவி முடியும் என்பது குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல பதிலை வழங்குவதாக மூ.சண்முகம் தெரிவித்துள்ள நல்ல பதில் இன்னும் சிறப்பானது.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை, சங்கத்தின் துணைச் செயலாளர் ஆர் குணா, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் அலுவலகத்திற்குச் சென்று, தீபாவளி பரிசு பொருட்களை வாங்குவதற்குரிய நிதி ஆதாரத்திற்கான கடிதத்தைக் கொடுக்கச் சென்றது இன்னொரு துரித நடவடிக்கை ஆகும். இயோ பீ யின் அலுவலக உதவியாளர் கெத்தரின் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, ஆவண செய்வதாகத் தெரிவித்துள்ள தகவலும் சங்கத்திற்கும் சங்க உறுப்பினர்களுக்கும் உவப்பான செய்தி.
இதற்கிடையில், பிரபல தொழில் அதிபர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணிய பிள்ளையையும் சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னனும் அவர்தம் தலைமையிலான செயலவைக் குழுவினரும் சங்க ஆலோசகர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜூடன் இன்று சந்தித்தது, காலமறிந்து கடமையாற்றும் இவர்களின் கடப்பாட்டை மெய்ப்பிக்கிறது.



