
கவிஞர் சீனி நைனா முகமதுவின் தமிழ்வாழ்த்துப் பாடலுக்கு மதச்சாயம் பூசுவதா?
கவிஞர் சீனி நைனா முகமதுவின் தமிழ்வாழ்த்துப் பாடலுக்கு மதச்சாயம் பூசுவதா?
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் காவல்துறையில் புகார்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், ஜன.9-
தமிழ்வாழ்த்துப் பாடலை மதத்தோடு ஒப்பிட்டு புலனங்களில் குரல் பதிவு வெளியிட்டு மத சர்ச்சையை ஏற்படுத்திய ஆடவருக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளதாக
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சைமன் கூறினார்.
மதத்தையும், தமிழையும் இணைத்து தவறான ஒப்பீடு செய்துள்ள அந்நபர்
தேவாரப் பாடலுக்கு எழுந்து நிற்கலாம், தமிழ்வாழ்த்துக்குத் தேவையில்லை என்று குரல் பதிவில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பஹாய் இப்படி இன்னும் பல மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதால் இதற்கு மதச்சாயம் பூசுவது தவறு என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சைமன் தெளிவுபடுத்தினார்.
தமிழ் மொழியைப் போற்றுபவர்கள் தமிழ்ச்சார்ந்த நிகழ்ச்சியில் பல மதத்தவர்கள் இருக்கும்போது தேவாரம் மட்டும் பாடுவது முறையல்ல. ஆனால், அனைவருக்கும் பொதுவான தமிழ்வாழ்த்து பாடுவதும், அதற்கு மரியாதை செலுத்துவதும் நமது கடமையாகும். இஸ்லாமியர், மதமாற்றுக் கும்பல் என கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களை இழிவாகப் பேசியதை வன்மையாகக் கண்டிப்பதோடு காவல் துறையிலும் புகார் செய்துள்ளதாக சைமன் தெரிவித்தார்.
தமிழ்கூறும் நல்லுலகம் போற்றக்கூடிய ஓர் இலக்கியவாதி அவர். கவிஞரை தவறாகச் சித்தரிப்பது ஏற்றுக் கொள்ளப்படாது. அது வன்மத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது. தங்களது செயலை நியாயப்படுத்த அவதூறு பேசுவது கண்டிக்கத்தக்கது.
தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே,
தமிழைப் பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே என்ற பாரதிதாசன் சொன்னதற்கு ஏற்ப தாங்கள் இச்செயலை கண்டிப்பதாக மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலக தலைவர் பெ.ராஜேந்திரன் தமது கருத்தை வெளியிட்டார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் உருவாக்கப்பட்ட அந்த தமிழ் வாழ்த்துப் பாடல்
நிகழ்வு ஒன்றில் பாடப்பட்ட போது மலேசிய இந்து தர்ம்மாமன்றத்தின் துணைத்தலைவர் ரிஷிகுமார் எழுந்து நிற்காததைக் கண்டித்து பல இயக்கங்களும், தனி நபர்களும் குரல் கொடுத்ததை தொடர்ந்து அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆடவர் ஒருவரின் குரல் பதிவு பரவி வருகிறது. அதில் மதமாற்றுக் கும்பலால் இந்த பாடல் தயாரிக்கப்பட்டது எனவும், தமிழ்வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்தப் பாடல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தயாரிப்பாகும். இந்த தமிழ்வாழ்த்துப் பாடலை
கவிஞர் சீனி நைனா முகம்மது எழுதியிருந்தார்.
இசை : ஆர்.பி.எஸ் இராஜு. இப்பாடலை
துருவன், பாபு லோகநாதன் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



