Malaysia

பேராக் செலாமா தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைப்பு பணிக்கு கல்வியமைச்சு நிதியுதவி வழங்கியது.

தைப்பிங், ஜுன்.2- லாருட் தொகுதியில் அமைந்துள்ள பேராக் செலாமா தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைப்பு பணிக்கு கல்வியமைச்சு 4 இலட்சம் ரிங்கிட் நிதியுதவி செய்துள்ளதாக இப்பள்ளி வளாகத்தை நேரில் சென்று கண்டபோது கல்வித் துணையமைச்சர் வோங் கா வோ இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பை செய்தார்.

அண்மையில் இப்பள்ளி கனத்த மழையுடன் கூடிய சூறாவளி காற்றால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. இதனால், வகுப்பறைகள், கருவூல மையம், பள்ளிக் கூரைகள், அறிவியல் அறை மற்றும் தளவாடப் பொருட்கள் சேதமடைந்தன. இதனால், பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பல சவால்களை சந்தித்து சீரற்ற சூழ்நிலையில் தங்கள் கல்வியை தொடர்ந்து வந்தனர் என்பது மிகவும் வேதனையான விசயமாகும்.

முதல் கட்டமாக, பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு லாருட் மாவட்ட கல்வி இலாகாவும், பேராக் மாநில கல்வி இலாகாவும் அதிரடி உதவிகள் வழங்கியதற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாண்டு ஏப்ரலில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை கல்வியமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 50 ஆயிரம் ரிங்கிட்டை துணை கல்வியமைச்சரின் பணிமனை வாயிலாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மாவட்ட கல்வி இலாகாவின் உதவியோடு பதிவு பெற்ற குத்தகையாளர்கள் தேர்வு கடந்த 13.5.2025 ல் நிறைவு பெற்றது. தற்போது பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டன. இம்மாதம் 24 ம் தேதியில் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் என்று துணையமைச்சர் கூறினார்.

சுமார் 70 ஆண்டு காலம் பழமை வாய்ந்த இப்பள்ளியில் கருவூல மையம் பாதிப்பு அடைந்ததால், நூல்கள் வாங்க 10 ஆயிரம் ரிங்கிட்டை பெர்பாடானன் கோத்தா வாயிலாக கிடைக்கப்பெற்றனர். இதற்கு பள்ளி நிர்வாகமுடன் உதவிட முன் வந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளிக்கு கடந்த 2023 ம் ஆண்டில் கழிப்பறை சீரமைப்பு பணிக்கு 70 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி கிடைக்கப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளி கூரைகள் புதுப்பிக்க 2 இலட்சத்து 43 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி கிடைக்கப்பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், செலாமா தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் கி.கண்ணதாசன், பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மு.திருஞானசம்பந்தன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பா.ராஜ்குமார், துணையமைச்சரின் அதிகாரியான மு.இளங்கோவன், மாவட்ட மாநில கல்வி இலாகா அதிகாரிகள், மாநில கல்வி உதவி இயக்குநர் கோவி சந்திரன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் என்.எஸ். ரகுநாதன் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button