
மக்கள் தொண்டர் வி.டேவிட்டின் வரலாற்றை நூலாக்குங்கள் – செலவினத்தை ஏற்றுகொள்கிறேன் சிவநேசன் கோரிக்கை!!
சுங்கை,டிச17- இந்நாட்டின் தொழிற்சங்க வரலாற்றிலும் தொழிலாளர் வரலாற்றிலும் தனித்துவ போராளியாகவும் மக்கள் சேவகருமாய் திகழ்ந்த மக்கள் தொண்டர் வி.டேவிட் அவர்களின் வரலாற்றை பதிவு செய்யுமாறு ஆட்சிகுழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு அ.சிவநேசன் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளையில்,மக்கள் தொண்டர் வி.டேவிட் குறித்த வரலாற்று தேடலுக்கும் ஆய்விற்கும் வெ.15ஆயிரம் ஒதுக்குவதாக அறிவித்த அவர் புத்தகத்திற்கான முழு செலவினத்தை மாநில அரசே ஏற்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
வரலாற்று படைப்பாளர் சிவாலெனினின் மற்றுமொரு வரலாற்று நூலாக வெளிவந்திருக்கும் மலாயா கணபதி (வாழ்வும் போராட்டமும்) நூல் வெளியீடுக்கு தலைமையேற்று தொடக்கி வைத்தபோது தொழிற்சங்கவாதியுமான சிவநேசன் இதனை குறிப்பிட்டார்.

மேலும்,சிவாலெனினின் வரலாற்று தேடலில் மலாயா கணபதியின் வரலாற்றையும் போராட்டத்தையும் பேசும் இந்நூல் மற்றுமொரு மைல்கல் என்றும் சிவநேசன் புகழாரம் சூட்டினார்.
அதேவேளையில்,மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலப்பிரிவுக்கான ஆட்சிகுழு உறுப்பினரான சிவநேசன் தொழிலாளர் வரலாறு,தொழிற்சங்கங்களின் தோற்றம்,இன்றைய அதன் நிலை உட்பட தொழிற்சங்கச் சட்டம்,தொழிலாளர் உரிமைகள் குறித்தும் தனதுரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக அவர் மலாயா கணபதி குறித்தும் அவரது போராட்டக் காலம் குறித்தும் நினைவுக்கூர்ந்ததோடு இம்மண்ணின் தொழிலாளர் போராட்டங்களின் வரலாற்றையும் அதுசார்ந்த முன்னெடுப்புகளையும் எடுத்துரைத்தார்.
இந்நூல் வெளியீடு சுங்கை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடந்தேறிய வேளையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வனின் வாழ்த்துரையும் இடம் பெற்றது.
அதேவேளையில்,இந்த வரலாற்று நூல் குறித்த அறிமுகத்தை எழுத்தாளர் காந்திமுருகன் திறன்பட செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று பதிவுகளில் மிக முக்கியமான நூலாக வெளிவந்திருக்கும் இந்நூல் ஆசிரியர் சிவாலெனின் பேசுகையில் இந்நூலுக்கான தனது போராட்டம்,நடவடிக்கை,தீவிர தேடல்கள் குறித்தும் விவரித்தார்.
மலாயா கணபதி நூல் வெளியீடு நிகழ்ச்சியின் உச்சமாக பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாவதில் முக்கிய பணியாற்றி சங்கத்தின் செயலாளராக நீண்டக்காலம் சேவை செய்து தற்போது சங்கத்தின் புரவலராக திகழுக் மூத்த எழுத்தாளர் சி.த.நாராயணன்,தாப்பாவை சார்ந்த எழுத்தாளர் திருமதி.வனஜா மற்றும் நன் வாசிப்பை தனது அன்றாட வாழ்வின் அங்கமாய் கொண்டிருக்கும் திருமதி.மகாலெட்சுமி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது தனித்துவமாய் அமைந்தது எனலாம்.
வரலாற்றை மீட்டெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவுறுத்தும் வகையில் இந்நூல் வெளியீடு அமைந்திருந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வருகை அளித்த தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் பள்ளி நூலகங்களுக்கு இலவசமாக நூல்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் வெளியீடுக்கு வட்டார பிரமுகர்களுடன் எழுத்தாளர்கள்,பொது மக்கள்,நண்பர்கள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி தினகரணும் கலந்து கொண்டு முதல் நூலை பெற்று கொண்டார்.



