
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வரிவிதிப்பு
மக்களைப் பாதுகாத்து, வருவாயைப்
பொருளாதார நிபுணர்கள் கருத்து
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரி (SST) மறுசீரமைப்பு மற்றும் விரிவாக்கம், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினரைப் பாதுகாக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அடிப்படைத் தேவைகள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது, பெரும்பாலான மக்களுக்கு நிம்மதியளிப்பதோடு, வாழ்க்கைச் செலவு அதீதமாக அதிகரிப்பதைத் தவிர்க்கும் என பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
குறைந்த வருவாயினருக்குப் பாதுகாப்பு, அதிக வருவாயினருக்குப் பங்கு என்ன என்பதை அவர் விளக்கினார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் தங்கள் வருவாயின் பெரும்பகுதியை வரி விலக்கு அளிக்கப்பட்ட உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவிடுகின்றனர்.
ஆடம்பரப் பொருட்கள் அல்லது அத்தியாவசியமற்ற பொருட்களின் மீது வரி கவனம் செலுத்துவதன் மூலம், அதிக வருவாய் பிரிவினர் மீது சுமை அதிகமாக இருக்கும் என்று அவர் கணித்தார்.
“இருப்பினும், இதன் செயல்திறன் ‘ஆடம்பரப் பொருட்களின்’ வரையறையைப் பொறுத்தது. அது மிகவும் பரந்ததாகவோ அல்லது அடிப்படை மின்னணு சாதனங்கள் போன்ற அரை-அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கியதாகவோ இருந்தால், நடுத்தரப் பிரிவினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தக் கொள்கை உண்மையிலேயே முற்போக்கானது என்பதை உறுதிப்படுத்தத் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்,” என்று அவர் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, ஜூலை 1 முதல் அடிப்படைத் தேவைகளுக்கான பூஜ்ஜிய வரி விகிதம் தொடரும் என்றும், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு 5% முதல் 10% வரை வரி விதிக்கப்படும் என்றும் நிதி அமைச்சகம் அறிவித்தது.
சேவை வரி, வாடகை, குத்தகை, கட்டுமானம், நிதிச் சேவைகள், தனியார் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற புதிய சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
RM5 பில்லியன் கூடுதல் வருவாய்: மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு
இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்பார்க்கப்படும் RM5 பில்லியன் கூடுதல் வருவாய், ரஹ்மா ரொக்கப் பங்களிப்பு (STR) மற்றும் அடிப்படை ரஹ்மா பங்களிப்பு (SARA) போன்ற உதவிகள் மூலம் நீண்டகால நலன்களை வழங்கும் என அவர் சொன்னார்.
கடந்த நவம்பர் மாதம், இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான், SST விரிவாக்கம் இந்த ஆண்டு RM51.7 பில்லியன் வருவாயை ஈட்டக்கூடும் என்றும், இது திட்டமிடப்பட்ட RM46.7 பில்லியனை விட அதிகம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த அதிகரித்த வருவாய், பிற முக்கியத் துறைகளில் செலவினங்களைக் குறைக்காமல், அரசாங்கம் உள்கட்டமைப்பு மேம்பாட்டைத் தொடர ஆதரவளிக்கும். “இது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்கள் அல்லது பாதிப்புக்குள்ளான பிரிவினரின் பொருளாதார நகர்வுக்கு ஆதரவளிக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற உற்பத்தித்திறன் சலுகைகளுக்கான நிதி இடத்தையும் உருவாக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நிதியின் சரியான விநியோகம் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தையே இதன் செயல்திறன் சார்ந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த நடவடிக்கை பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க உதவுவதோடு, அரசாங்கம் கடன் மற்றும் கடன் பொறுப்புகளைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
“சுருக்கமாக, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வரிவிதிப்பு நன்கு வடிவமைக்கப்பட்டால், குறைந்த வருவாய் பிரிவினரைப் பாதுகாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், கூடுதல் வருவாய் மேலும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதி கொள்கையை ஆதரிக்கும்,” என்று அவர் கூறி முடித்தார்.

பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் ஜிஎஸ்டியுடன் ஒப்பீடு சில பொருட்கள் மற்றும் சேவைகளில் வரி மறுசீரமைப்பு தற்போதைய பணவீக்க விகிதமான 1.4% ஐ அதிகரிக்கக்கூடும் என்றாலும், அது இன்னும் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே இருக்கும். “இது அதிக மதிப்புள்ள மற்றும் ஆடம்பரமான பொருட்களை மட்டுமே உள்ளடக்கியது,
முக்கியமாக உணவு மற்றும் பானங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அல்ல,” என்று அவர் கூறினார்.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) உடன் ஒப்பிடுகையில், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட SST விரிவாக்கம், 2015 ஏப்ரல் 1 அன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறையின் அதே நோக்கத்தைக் கொண்டுள்ளது,
அதாவது வருவாயை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் என நிவாஸ் ராகவன் விளக்கினார். “உலகப் பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதால், அரசாங்கத்தின் கூடுதல் வருவாய் இலக்கான RM5 பில்லியனை எட்டுவது ஒரு பிரச்சனையாக இருக்காது,” என்று அந்த பொருளாதார நிபுணர் நம்பிக்கை தெரிவித்தார்.



