
இந்தியர்கள் வரலாறு நிலைக்க பூர்வீகமும் தனித்துவமும் நிலைத்திருக்க வேண்டும். லெபோ அம்பாங் தீபாவளி நிகழ்வில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்து
கோலாலம்பூர்,அக்.11- இந்நாட்டில் இந்தியர்கள் வரலாறு நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அந்தந்த இடத்தில் அதன் பூர்வீகமும், தனித்துவமும் நிலைத்திருக்க வேண்டும் என்று ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார். மலேசிய இந்தியர்கள் 3 குழுக்களாக மலேசியாவிற்கு வந்தார்கள் என்பது வரலாறு. முதலாவது தொழில்முறை நிபுணர்கள், இரண்டாவது தோட்டத்தில் பணிபுரிய வந்தவர்கள், மூன்றாமவர்கள் வணிகர்கள். குறிப்பாக நகரத்தார் சமூகத்தினர் என்பது வரலாறு. இதனை யாரும் மறுக்க முடியாது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தமது உரையில் கூறினார். இப்படி வந்த வர்த்தக சமூகத்தினர் கோலாலம்பூரில் முதன்முதலில் உருவாக்கிய இடம்தான் இந்த லெபோ அம்பாங். ஆகவே கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலேஹா முஸ்தபா அவர்கள் இந்த இடத்தை முன்பு இருந்தது போல், “செட்டித் தெரு” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமது வேண்டுகோளை முன்வைத்தார். இது தொடர்பில் பேசிய அமைச்சரும் தமது உரையில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். கோலாலம்பூர் லெபோ அம்பாங் இந்திய பாரம்பரிய வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த தீபாவளி நிகழ்ச்சியில் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டார். இந்த தீபாவளி நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்ளூர்க் கலைஞர்களின் ஆடல் பாடலோடு நிகழ்ச்சி கலைகட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.



