
கல்வி புரட்சியின் தந்தை தான்ஸ்ரீ தம்பிராஜா மறைவு தான்ஸ்ரீ குமரன் இரங்கல்
கோலாலம்பூர் ஜூன் 23-
இந்திய சமுதாயத்தில் கல்விபுரட்சியை ஏற்படுத்திய தான்ஸ்ரீ தம்பிராஜாவின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும் என்று தான்ஸ்ரீ குமரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1980 ஆண்டுகளில், ஈப்போவில் ஸ்ரீமுருகன் பயிற்சி வகுப்புத் தொடங்க பொறிஞர் ம.முத்தையாவுடன் தம்மைப் பார்க்க வந்ததை நினைவு கூர்ந்த தான்ஸ்ரீ குமரன், அந்த முதல் சந்திப்பிலேயே சமுதாயத்தின் பிந்தங்கிய நிலைமையை மாற்ற வேண்டுமானால் , அதற்கு துணையாக இருக்கப்போவது கல்வி ஒன்றே என்றும், அந்த நோக்கத்தை நிறைவு செய்யவே ஸ்ரீமுருகன் மையத்தைத் தோற்றுவித்திருப்பதாகவும் கூறியது தம்மை ஈர்த்ததாகவும், ஈப்போ செட்டியார் கலாசாலையி ஸ்ரீமுருகன் பயிற்சி மையம் நடத்த அனுமதி பெற உதவியதாகவும் குறிப்பிட்டார். .
தமிழ்க்கடவுளான முருகன் பெயரில் தோற்றுவிக்கப்பட்ட இம்மையம் கடந்த நாற்பது ஆண்டுகால பயணத்தில் சமுதாயத்தின் கல்வி சிந்தனையில் பெரும் மாற்றத்தையும் திருப்பத்தையும் கொண்டு வந்துள்ளது.
பி-40 குடும்பங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய பட்டதாரிகளின் நிலைமையை மாற்றி ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தான்ஸ்ரீ தம்பிராஜா அவர்களின் சிந்தனையில் உருவான ஸ்ரீமுருகன் மையம் என்பதனை சமுதாயம் என்றும் நினைவுகூரும்.
தையல்காரரின் மகனாகப் பிறந்து, ஆசிரியராக, பேராசிரியராக, வழக்கறிஞராக உழைத்து உயர்ந்து, தான்பெற்ற இன்பம், வளர்ச்சி, முன்னேற்றம் இவற்றை தம்சமுதாயமும் பெறவேண்டும் என்று அவர் உழைத்ததை நானறிவேன்.
கல்வியில் சிந்தனை மாற்றம் என்பதைவிட கல்வியில் புரட்சி என்பதில் அதிக நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சிலும் எழுத்திலும் புரட்சியே மிகைபட்டு நிற்கும். காரணம் ரஷ்ய புரட்சியின்மீது அவருக்கேற்பட்டிருந்த தாக்கம்.
தம் வாழ்நாளின் பெரும்பகுதியை சமுதாயத்தை கல்விதுறையில் உருமாற்றம் செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெற்றதைக் கண்ட மனநிறைவுடன் நம்மைவிட்டு பிரிந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் மு.தம்பிராஜா சமுதாயத்தில் நன்றிக்குரிய ஒருமாமனிதராகப் போற்றப்படுவார்.
அவரின் ஆதன் அமைதியுற இறைஞ்சுவதாக தான்ஸ்ரீ குமரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.



