Malaysia

சுங்கை சிப்புட் ம.இ.கா தொகுதியின் 32ஆம் ஆண்டு பேராளர் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை சிப்புட், ஜூலை 14-

ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதியின் 32ஆம் ஆண்டு பேராளர் மாநாடு, ஜூலை 12 ஆம் தேதி சனிக்கிழமை துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

தொகுதிக் காங்கிரசின் தலைவர் வீ.சின்னராஜு அவர்களின் தலைமையில் இப்பேராளர் மாநாடு மிக நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் வழிநடத்தப்பட்டது.

தொகுதிக் காங்கிரசின் தலைவர் வீ.சின்னராஜு அவர்கள்தம் தன் தலைமையுரையில், தொகுதிக் காங்கிரசின் முன்னேற்றத் திட்டங்கள், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்தார்.

 

மேலும், சுங்கை சிப்புட் ம.இ.கா.வின் அனைத்துக் கிளைத்தலைவர்களும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தினார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம.இ.கா. தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என தனது கோரிக்கையை வைத்தார்.

 

ம.இ.கா. மத்திய செயற்குழு உறுப்பினர் திரு. வின்செண்ட் டேவிட், ம.இ.கா. தேசியப் பிரதிநிதியாக வருகையளித்து இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உறையாற்றினார்.

ஒற்றுமையே பலம் என்ற பொன்மொழிக்கேற்ப ஒற்றுமையாக இருந்தால்தான் இந்திய சமுதாயம் இந்நாட்டில் சிறந்து விளங்க முடியும் என்றார். மேலும், தொகுதி காங்கிரசை மிகச் சிறப்புடன் வழிநடத்திவரும் தொகுதி தலைவர் வீ.சின்னராஜு அவர்களையும், செயலறிக்கையை மிகச் சிறப்பாகத் வடிவமைத்த தொகுதிச் செயலாளர் திரு.கே.எஸ்.உமாபதி அவர்களையும் மற்றும் அனைத்துச் செயற்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டினார்.

தொடர்ந்து, ம.இ.கா. தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தொகுதித் தலைவரின் கோரிக்கையைத் தானும் ஆமோதிப்பதாகக் கூறினார்.

இம்மாநாட்டின் சிறப்பு அங்கமாக, மூத்தக் கிளைத்தலைவர்கள் மூவருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. ஓர்கிட் கிளைத் தலைவர் திரு. பெரியண்ணன் வடமலை அவர்கள், பெங்லீ கிளைத்தலைவர் திருவாட்டி. தேவி சின்னக்கருப்பன் மற்றும் ம.இ.கா. டோவன்பி கிளையின் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் பரகோடன் அவர்கள், ஆகிய மூவருக்கும், சுங்கை சிப்புட் தொகுதிக் காங்கிரசுக்கு அவர்கள் ஆற்றிவரும் பெரும்சேவையப் பாராட்டி “வாழ்நாள் சேவையாளர் விருது” வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து இம்மாநாட்டில், ம.இ.கா. தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்கள் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட வேண்டும், இந்தியர் மாணவர்கள் பெருவாரியாக உயர்கல்வித் தொடரவும், அதிக அளவில் அரசுத் துறையில் பணிப்புரியவும், முன்புபோல் மெட்ரிக்குலேஷன் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பதுடன், இட ஒதுக்கீடு வழங்க குறைந்தப்பட்சத் தேவையான மதிப்பெண்கள் என்னவென்று கல்வி அமைச்சு ஒரு முறையான மதிப்பீட்டை பொதுப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதைப் போன்ற தீர்மானங்கள் முடிவெடுக்கப்பட்டன.

பேரா மாநில ம.இ.கா.வின் தகவல் பிரிவு அதிகாரி திரு. இரா. மகேந்திரன், அவர்கள் பேரா மாநில பிரதிநிதியாக இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் பேரா மாநில ம.இ.கா. துணைச் செயலாளர் திரு.பெ.சுகுமாறன், பேரா மாநில ம.இ.கா. நிர்வாகச் செயலாளர் திரு.ஆர்.பி.ஜெயகோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற பேராதரவு நல்கிய ம.இ.கா. தேசியத் தலைவர் பெருமதிப்புமிகு தான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், ம.இ.கா. தேசிய உதவித் தலைவரும், பேரா மாநில ம.இ.கா. தொடர்புக் குழுத் தலைவருமாகிய தான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களுக்கும், சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரசின் துணைத் தலைவர் திரு.ம.அசோக்குமார், கெளரவச் செயலாளார் திரு.கே.எஸ்.உமாபதி, இளைஞர் பகுதித் தலைவர் திரு.மா.சந்திரசேகரன், மகளிர் பகுதித் தலைவி திருவாட்டி.கு.சரோஜா, அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும், புத்திரா புத்திரியினருக்கும், பெருந்திரளாகக் கலந்துக் கொண்ட கிளைத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கிளை உறுப்பினர்களுக்கும், தொகுதிக் காங்கிரசின் தலைவர் வீ.சின்னராஜு அவர்கள் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button