
“கொடுத்த வாக்குறுதியை நம்பி விட்டுக் கொடுத்தேன்” தங்க கணேசன் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் கணேஷ் பாபு ஆவேசம்
கோலாலம்பூர், ஜூலை 15-
மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் பதவியை ஒரு தவணைக்கு இருக்க அதாவது மூன்று ஆண்டுகள் இருப்பதாக விடுத்த வேண்டுகோளை ஏற்று தங்க கணேசனிடம் பதவியை ஒப்படைக்க ஒப்புக் கொண்ட நிலையில் வாக்குறுதியை நிறைவேற்ற தங்க கணேசன் தவறி நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக மலேசிய இந்து சங்கத்தின் நடப்பு துணை தலைவர் கணேஷ் பாபு குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2022இல் டத்தோ போகன் ஷானை வீழ்த்த மாறுவோம்-மாற்றுவோம் அணி கணேஷ் பாபுவை ஏகமனதாக தலைவராக தேர்வு செய்திருந்தது. இந்நிலையில் தங்க கணேசன் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு ஒரு தவணைக்கு மட்டும் தன்னை தலைவராக இருக்க அனுமதி கேட்டார். நானும் அதற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு தவணைக்கு அனுமதி வழங்கி, துணைத் தலைவராக இருந்ததாக தேசம் ஊடகத்திடம் கணேஷ் பாபு கூறினார்.
இந்த சூழ்நிலையில் மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் பேராளர் மாநாடு ஆகியவை ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை தோட்ட மாளிகையில் நடைபெறவுள்ளது. ஒரு தவணைக்கு மட்டும் பதவியை கேட்ட தங்க கணேசன் பதவி ஆசையில் அதனை வழங்க மறுத்து மீண்டும் போட்டி போடுகிறார். இது நம்பிக்கை துரோகம் என்று கணேஷ் பாபு தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கம் கடந்த 1965இல் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று வரை 29 பேர்தான் சங்கத்தில் இருக்கிறார்கள். இதற்காக சட்டதிட்டங்களை மாற்ற 600 பேர் கையெழுத்து போட்டு 300 செயல்திட்டங்கள் அடங்கிய ஆவணத்தை பொதுச்செயலாளரிடம் வழங்கி விட்டோம்.
தங்க கணேசன் 2025இல் பதவியை ஒப்படைப்பதாக ஒப்பந்தம் செய்து மத்திய செயலவை முன்னிலையில் கையெழுத்து போட்ட நிலையில் தற்போது தலைவர் பதவியை வழங்க மறுத்ததன் விளைவாக மறுமலர்ச்சி,மாறுவோம் மாற்றுவோம் அணியின் மூலம் போட்டியிட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கணேஷ் பாபு சொன்னார்.
மலேசிய இந்து சங்கத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே புதிய அணியான மறுமலர்ச்சி, மாற்றுவோம் மறுவோம் அணி போட்டியிடவுள்ளது. நாங்கள் யாரையும் சாடுவதற்கு விரும்பவில்லை. டத்தோ மோகன் ஷான் பல ஆண்டுகள் இருந்து விட்டார். தங்க கணேசன் மூன்று ஆண்டுகள் இருந்து விட்டார். ஆகையால், புதிய அணிக்கு வழி விடுவதுதான் சிறந்தது என்று கணேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.
இந்து சங்கத்தின் சட்டப்படி தலைமை பொறுப்பை 27 பேர் கையில் அடக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதனை பொதுவில் கொண்டு வர சட்ட திட்டங்களை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்து சங்கத்தில் 29 பேரை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கத்திடம் சமய விவகாரங்களை பேச முடியாது. நாட்டில் 1.3 மில்லியன் இந்துக்கள் இருக்கும் பட்சத்தில் 29 ஆயிரம் உறுப்பினர்கள் மட்டும் இருப்பதற்கு கட்டணம் 150 வெள்ளியாக இருப்பதுதான் என்பதால் அதனை 50 வெள்ளியாக மாற்ற போட்டியிடுகிறோம் என்று கணேஷ் பாபு கூறினார்.
மலேசிய இந்து சங்கம் இந்துக்களின் குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக 50 வெள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்துக்களையும் சங்க உறுப்பினர்களாக இருக்க தேர்தல் கொள்கையறிக்கையில் உறுதியளித்துள்ளது.
மேலும் ஆண்டுதோறும் கூட்டமும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலும் நடத்த நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். இது போன்ற பல செயல்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். பல சட்டதிட்டங்களை மாற்ற 600 பேர் கையெழுத்து போட்டுள்ள 300 செயல்திட்டங்கள் அடங்கிய பரிந்துரையை பொதுச்செயலாளரிடம் வழங்கியுள்ளதாக கணேஷ் பாபு தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கத்திற்கு புதிய தலைமைத்துவம் இருந்தால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் மறுமலர்ச்சி , மாற்றுவோம்-மாறுவோம் அணியை வெற்றி பெறச் செய்யும்படி கணேஷ் பாபு கேட்டுக் கொண்டார்.



