Malaysia

“தமிழ் மணம்” தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி

சுங்கை சிப்புட்,ஏப்.20-
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் “தமிழ் மணம்” என்னும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி முதன் முறையாக எதிர்வரும் 26.4.2025 சனிக்கிழமையன்று நடத்தப்படவுள்ளது.

கோலகங்சார் மாவட்டத்தைச் சார்ந்த 13 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொள்ளவிருக்கும் இப்போட்டி சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் காலை 8.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.

இந்நிகழ்ச்சி நன்முறையில் நடைபெற ம.இ.கா தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பெருமாண்பிற்குரிய தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் பேராதரவு நல்கியுள்ளார்.

நமது பாரம்பரியமும், இலக்கியமும் நலிந்து விடாமல் காத்து வளர தமிழ்ப்பள்ளிகள் சிறந்த தளமாக அமையும். தமிழ்பள்ளிகள் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மைல்கல்லாக அமைவது திண்ணம். எனவே, இதுபோன்ற பயன்தரும் நிகழ்வுகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்திற்குத் தமது பாராட்டுகளை அவர் தெரிவுத்துக் கொண்டார்.

மேலும் இப்பாரம்பரிய நிகழ்வின் முதன்மை சிறப்பு விருந்தினராக ம.இ.கா தேசிய உதவித் தலைவரும், பேராக் மாநிலத் தொடர்புக் குழுத்தலைவருமான பெருமதிப்பிற்குரிய தான்ஶ்ரீ எம். இராமசாமி அவர்களும் அவர்தம் துணைவியார் புவான் ஶ்ரீ இந்திராகாந்தி அவர்களும் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.

தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் இலக்கியத்தையும் முன்னிறுத்தி சிறப்பாக இப்போட்டியை ஏற்பாடு செய்த சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத் தலைவர் திரு. வீ. சின்னராஜு பிபிஎன் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தம் பாரம்பரிய கலைகளில் சிறந்து விளங்கவும் தங்களது திறமைகளை வெளிக்கொணரவும் இது போன்ற பாரம்பரிய இலக்கிய நிகழ்ச்சிகள் எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டதுடன் கோலகங்சார் மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமது வாழ்த்தினையும், பாராட்டினையும் நல்கினர்.

“தமிழ் மணம்” இலக்கிய நாடகம் மற்றும் கிராமிய நடனப்போட்டி சிறப்பாக நடைபெற உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுடன் கோலக்கங்சார் மாவட்டத் தலைமையாசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் தமிழ்மணத்தை நுகர அன்புடன் அழைப்பதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு. சின்னராஜூ பி.பி.என் தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button