பத்துமலையில் மின் படிக்கட்டுகள், பல்நோக்கு மண்டபம் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் உதவ வேண்டும் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கோரிக்கை
பத்துமலை,ஜன.25-
உலகப்புகழ் பெற்றுள்ள பத்துமலை திருத்தலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் தொடர் ஆதரவு வேண்டும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பத்துமலையில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்களுக்கு அரசாங்கம் ஆதரவு கரம் நீட்டு வேண்டும் என்று தான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.
பத்துமலை திருத்தலத்தில் இன்று காலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் உட்பட பல பிரமுகர்கள் முன்னிலையில் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய தான்ஸ்ரீ நடராஜா, பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற நிதிகள் அனைத்தும் வங்கியில் பாதுகாப்பாக உள்ளன.
இந்த நிதியை கொண்டு மின் படிக்கட்டு, 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய பல்நோக்கு மண்டபம் ஆகியவற்றை கட்டுவதற்கான திட்டங்களை தேவஸ்தானம் மேற்கொள்ளவுள்ளது.
தேவஸ்தானத்தின் இந்த திட்டங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசு முழு ஆதரவை வழங்க வேண்டும். இதில் குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் நிதி இந்த மேம்பாட்டு திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு நிகழ்வுக்கு வந்துள்ள அமைச்சர்கள் தேவஸ்தானத்தின் இந்த கோரிக்கையை பிரதமரின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா தமதுரையில் கேட்டுக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



