Malaysia

மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டாம்! இந்துக்களின் நல்லடக்க இட விவகாரத்தில் ‘அறிவில்லாத அரசியல்வாதிகளின்’ கருத்து அபாயகரமானது மலாக்கா மாநில மஇகா தலைவர் YB வி.பி. சண்முகம் ஆவேசம்

 

மலாக்கா, ஆக. 13-
இந்து சமூகத்தின் நல்லடக்க இட விவகாரத்தை, அதன் நடைமுறைகள் மற்றும் சட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் சில அரசியல்வாதிகளும், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் உணர்ச்சிபூர்வமாகப் பேசி, மக்களைக் குழப்புவதாகக் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், மாநில மஇகா தலைவருமான YB டத்தோ வி.பி. சண்முகம் கடுமையாக சாடியுள்ளார்.

“சட்டப்பூர்வமான வழிமுறைகளையும் நிர்வாக நடைமுறைகளையும் அறியாமல், சிலர் வெளியிட்டுள்ள அவசரக் கருத்துக்கள், மாநில அரசாங்கத்தின் தலைமைத்துவத்தைப் பற்றி எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகின்றன,” என்று சண்முகம் ஒரு அறிக்கையில் அவ்வாறு கூறினார்.

நிலம் ஒதுக்குவதற்கான நிர்வாக நடைமுறைகளை டத்தோ வி.பி. சண்முகம் விளக்கினார். ஒரு நில ஒதுக்கீட்டிற்கு நான்கு முக்கிய ஒப்புதல் நிலைகள் உள்ளன.

அவை: 1. கொள்கை ஒப்புதல் (Kelulusan Dasar), 2. நில ஒப்புதல் (Kelulusan Tanah),
3.திட்டமிடல் அனுமதி (Kebenaran Merancang),
4.கட்டிடத் திட்ட ஒப்புதல் (Kelulusan Pelan Bangunan) ஆகியவை அடங்கும் என்று சண்முகம் தெரிவித்தார்.

“கடந்த 2018ஆம் ஆண்டு மாநில அரசாங்கம் நிலம் ஒதுக்கியதாகக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கில் தோற்றுப் பின்னர் அமைதியாக இருந்தவர்கள், இப்போது மீண்டும் இந்த விவகாரத்தைப் பேசுவது ஏன்? அன்று நிலம் ஒதுக்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தால், அதை இந்த ஒற்றுமை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க நாங்கள் வரவேற்கிறோம்,” என்று சண்முகம் சவால் விடுத்தார்.

மேலும், “மக்களும் அரசியல்வாதிகளும் அரசின் நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தெருவோரக் கடைப்பேச்சுக்கும், அரசின் நிர்வாகத்திற்கும் வித்தியாசம் உண்டு,” என்றும் சண்முகம் சுட்டிக்காட்டினார்.

இதுவரை அனைத்து மலாக்கா மாநில அரசாங்கங்களும் கொள்கை ஒப்புதல்’ மட்டுமே வழங்கியுள்ளன, நில ஒப்புதல் வழங்கவில்லை என்பதை சண்முகம. தெளிவுபடுத்தினார்.

இந்த விவகாரத்தை ஒரு “அரசியல் கால்பந்து” போல பயன்படுத்தி, மக்களைத் தூண்டிவிடுவதையும், இந்திய சமூகத்திற்கும் மாநில அரசுத் தலைவர்களுக்கும் இடையே பிளவுகளை உருவாக்குவதையும் டத்தோ வி.பி. சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.

“தங்கள் சுயலாபத்திற்காகவும், அரசியல் ஹீரோவாகக் காட்டிக்கொள்ளவும், தமிழ் திரைப்பட ஹீரோ போல நடந்துகொள்ளும் அனுபவமற்ற அரசியல்வாதிகள், இந்த விவகாரத்தில் அவசரக் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம்,” என்று சண்முகம் கடுமையாக எச்சரித்தார்.

ஒரு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு மட்டுமே நில ஒப்புதலுக்குப் போதுமானது அல்ல என்றும், தொழில்நுட்ப நிறுவனங்களின் கருத்துக்களும் மிக அவசியம் என்றும் அவர் விளக்கினார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆதரவளித்தபோதிலும், நில ஒப்புதல் மறுக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ரவூப் யூசோப் தலைமையிலான மாநில அரசு, இந்த விவகாரத்திற்கு ஒரு சரியான தீர்வை விரைவில் காண உறுதியாக உள்ளது என்று அவர் மக்களுக்கு உறுதியளித்தார். தற்போது, ஜொகூர் மாநிலத்தின் நடைமுறைகளிலிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று, மலாக்காவிற்கான ஒரு செயல்முறையை உருவாக்குவதில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். இந்த உன்னத முயற்சிகளை அரசியல் ஆதாயத்திற்காகக் குழப்ப வேண்டாம். நல்ல கருத்துக்களை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்,” என்று YB சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button