
நாட்டில் இந்திய சமுதாயம் இனியும் சிறுபான்மை இனம் இல்லை? பேராக்கில் 2 ஆயிரம் ஏக்கர் நில வரலாறு சிவநேசனுக்கு தெரியுமா? நாங்கள் இனியும் அடிமையில்லை கூட்டரசு பிரதேச ம.இ.கா மாநாட்டில் டத்தோஸ்ரீ எம். சரவணன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஆக.17-
நாட்டில் இந்திய சமுதாயம் இனியும் சிறுபான்மை இனம் கிடையாது. மலாய்க்காரர்கள், சீனர்களுக்குப் பிறகு மூன்றாவது பெரும்பான்மை இனமாகும் என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சூளுரைத்துள்ளார்.
ஒரு சிலர் தகவல் தெரியாமல் இந்தியர்களை சிறுபான்மை இனம் என்கின்றனர். நாமும் நம்மை சிறுபான்மை இனமாக கருதுகிறோம். இது முற்றிலும் தவறாகும். நாம் இந்நாட்டில் பெரும்பான்மை இனமாக இருக்கிறோம் என்று கூட்டரசுப் பிரதேச மஇகாவின் 78ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
இந்த மாநாட்டில் டத்தோஸ்ரீ சரவணன் பல்வேறு விவகாரங்கள் தொட்டு பேசினார். மைக்கா ஹோல்டிங்ஸ், மித்ரா, 2 ஆயிரம் ஏக்கர் நிலம் என்று ஒரு சிலர் மஇகா மீது குறித்து வைத்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்து சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் பேராக் மாநில ஆட்சிக்கு உறுப்பினருமான சிவநேசனும் பேசியிருந்தார்.

ம.இ.காவை குறி வைத்து பேசும் அவர் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கித் தந்துவிட்டு பேசியிருக்க வேண்டும். அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா? மலைப்பகுதிக்கு கீழே உள்ள நிலம் மற்ற கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. மலை உச்சியில் தண்ணீர், மின்சாரம் இல்லாத நிலம் ம.இ.காவுக்கு வழங்கப்பட்டது. அந்த நிலத்தை வைத்து என்ன செய்ய முடியும்?
அதனையும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற சிந்தனையில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்திடம் வழங்கி அதனை செம்பனை நடவு செய்யப்பட்டுள்ளது. வரலாறு தெரியாமல் ம.இ.காவையே குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சிவநேசன் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் சாடினார்.
மைக்கா ஹோல்டிங்சின் இயக்குநர்கள் யார்? அவர்களை கேள்வி கேளுங்கள்? மித்ராவில் இருந்தது யார்? அவர்களை கேளுங்கள்.
இது போன்ற விவகாரத்தை விளக்கம் அளிக்கும் வகையில் தான் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் அந்த புத்தகம் வெளிவரும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
மஇகாவின் அனைத்து தலைவர்களும் உறுப்பினர்களும் இந்த வரலாறுகள் குறித்து உண்மை அறிந்து பேச வேண்டும். நமக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்களின் வாய்களை அடைக்க ம.இ.கா தலைவர்கள் முன்வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
அடுத்த பொது தேர்தல் குறித்து பேசிய டத்தோஸ்ரீ சரவணன் இங்கு வழங்கப்படும் மரியாதை, அங்கீகாரத்தை வைத்தே மஇகா முடிவுகள் எடுக்கும்.
இவர்களிடம் அடிமையாக இருப்பதை விட அங்கு வீர மரணம் அடையலாம். இந்த கொள்கையை முன்வைத்து ம.இ.கா தலைவர்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.



