Malaysia

கே.நெடுவயல் ஊராட்சியின் வரவு – செலவு கணக்குகளை வெளிப்படையாக பொதுமக்கள் அறியும் வகையில் துண்டு பிரசுரங்களாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

புதுக்கோட்டை,ஜூன் 11- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கே.நெடுவயல் ஊராட்சியின் தலைவர் சரவணன்.

அவர் தேர்தலில் நிற்கும் போதே ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக தெரிவிப்பேன் என்றும் லஞ்சமற்ற ஊராட்சியை உருவாக்குவேன் என‌ தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார்.

அந்த வகையில்
சரவணன் பதவியேற்ற காலம் முதல் ஊராட்சியின் வரவு,செலவு கணக்குகளை பொதுமக்கள் வெளிப்படையாக தெரியும் வகையில் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து வீடுகள் மற்றும் கடைகளில் வழங்குவதும், அதில் ஏதேனும் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி ஊராட்சியை வெளிப்படையாக ஊழல்,லஞ்சம் இல்லாமல் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை கே.நெடுவயல் ஊராட்சியின் முந்தைய இருப்பு சுமார் ரூபாய் 5.50 லட்சம், வரவு சுமார் ரூபாய் 12 லட்சம், செலவு சுமார் ரூபாய் 16 லட்சம்,தற்போதைய இருப்பு சுமார் ரூபாய் 1.92 லட்சம் ஆகும்.இந்த
ஓராண்டுக்கான வரவு,செலவு கணக்குகளை
நெடுவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் வழங்கும் நிகழ்வை திருப்பத்தூர் காவல் துணைகண்காணிப்பாளர் ஆத்மநாதன் தொடங்கிவைத்தார்.

அப்போது அவர், பொதுமக்களிடம் தேசிய உணர்வை ஏற்படுத்தும் விதமாக மேல்நிலைதேக்கதொட்டிகளுக்கு இந்திய‌ தேசியக்கொடியின் வண்ணத்தை அடித்ததற்கும், வெளிப்படையாக ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை காண்பித்தற்க்கும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

நெடுவயல் ஊராட்சிக்குட்பட்ட கே.நெடுவயல், அய்யாபட்டி, பன்னைப்படி, பழைய நெடுவயல், வெள்ளையங்குடிபட்டி, காயாம்பட்டி,மேலாந்தெரு உள்ளிட்ட கிராம மக்களுக்கு வரவு,செலவு கணக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டதோடு லஞ்சம்,ஊழலற்ற வெளிப்படையான ஊராட்சி மன்ற தலைவர் சரவணனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button