
பொதுப் பல்கலைக்கழகங்களில் 7 விழுக்காடு இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
கோலாலம்பூர்,ஜூன் 11-
நாடு முழுவதும் உள்ள SPM தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற தகுதியுடைய இந்திய மாணவர்களுக்கு பொது பல்கலைக்கழகங்களில் 7 விழுக்காடு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்க தலைவர் ம. வெற்றிவேலன் வலியுறுத்தியுள்ளார்.
மெட்ரிகுலேஷன், ஆசாசி, பாலிடெக்னிக்குகள் மற்றும் பிற கல்வித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் போது, ஒரு அழுத்தமான பிரச்சினை ஏற்படுவதாக வெற்றிவேலன் கூறினார்.
பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு இடங்கள் பற்றாக்குறையால் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது இந்த மாணவர்கள்
இடையூறுகளைச் சந்திக்க நேரிடுகிறது.
இந்தப் பிரச்சினை மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய மாணவர்களுக்கான மருத்துவம், பொறியியல், கணக்குப்பதிவியல் மற்றும் சட்ட புளங்களில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று வெற்றிவேலன் கேட்டுக் கொண்டார்.
“உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.” என்று நெல்சன் மண்டேலா கூறியுள்ளார். இதனை வேதவாக்காக கொண்டு இந்திய மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று வெற்றிவேலன் இந்திய மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.



