
மலேசிய தமிழ்க் கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பு அமைச்சின் பார்வைக்கு கொண்டு சேர்க்கப்பட்டிருகின்றது – தியோ
புத்ராஜெயா,ஆக.28- நாட்டில் தொடர்ந்து அதிகமான படைப்பாற்றல் நிறைந்த தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (ஃபினாஸ்) கீழ் படைப்பாற்றல் உள்ளடக்க நிதி (டி.கே.கே) மூலம் ஒரு கோடியே 30 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 பிரிவுகளில் வழங்கப்படும் இந்நிதிக்கு, கலைஞர்கள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் அறிவித்தார்.
முன்னதாக, புத்ராஜெயாவில் மலேசியத் தமிழ்க் கலைஞர்கள் சங்கச் சந்திப்பிற்கு தலைமை தாங்கியப் பின்னர் சில முக்கிய அறிவிப்புகளை துணையமைச்சர் மேற்கொண்டார்.
“மின்னல் எப்.எம்மில் தற்போது ஒலியேறும் ‘தாளம்’ நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு 6 தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு தொடங்கி விரிவுபடுத்தப்படும்.
இந்நிகழ்ச்சி, சம்பந்தப்பட்ட மாநில கலைஞர்களுக்கான வாய்ப்பையும் வழிவகுக்கும். அதோடு, இவ்வாண்டு நவம்பர் முதலாம் தேதி தொடங்கி, மின்னல் எப்.எம்மில் ஒலியேறும் உள்ளூர் தமிழ் பாடல்களின் ஒலிபரப்பு நேரமும் வாரத்திற்கு 450 நிமிடங்களிலிருந்து 1005 நிமிடங்களாக அதிகரிக்கப்படும்” என்று அந்த அறிவிப்பில் தியோ குறிப்பிட்டார்.
துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் (இப்தார்) கீழ் நாட்டில் இருக்கும் உள்ளூர் தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு இரண்டு பயிற்சிகளையும், மலேசிய தமிழ்க் கலைஞர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறையையும் அடுத்தாண்டு தொடங்கி வழங்கப்படவிருப்பதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.
“கூடுதலாக, மை கிரியேட்டிவ் வென்ச்சர்ஸ் இவ்வாண்டு செப்டம்பர் தொடங்கி நாட்டில் 6 இடங்களில் “ஏ.சி.இ பயிற்சியை” செயல்படுத்தும். இதற்கான விண்ணப்பங்கள் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்படும்” என்றார்.
தொடர்பு அமைச்சால் அறிமுகப்படுப்பட்ட இந்த முயற்சிகளுக்கு, மலேசிய தமிழ் கலைஞர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பித்து, அதன் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை தியோ வெளிப்பட்டுத்தினார்.
மேலவையில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி, மேலவை உறுப்பினரும், மஇகா துணைத் தலைவருமான செனட்டர் டத்தோ டாக்டர் ஆர். நெல்சன் எழுப்பிய கேள்வியின் தொடர்ச்சியாக, இச்சந்திப்பு அமைந்தது. அக்கேள்வி பதில் நேரத்தின் போது, தியோ மலேசியத் தமிழ்க் கலைஞர்களை நேரடியாக சந்திப்பதற்கான உத்தரவாதத்தையும் வழங்கியிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் சில சந்திப்புகள் நடத்தப்பட்டதையும் துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.



